வாசகர் கேள்விகளுக்கான 'கம்பவாரிதி' யின் பதில்கள் | "தூண்டில்"

வாசகர் கேள்விகளுக்கான 'கம்பவாரிதி' யின் பதில்கள் | "தூண்டில்"
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 01
சந்துனு: சுமந்திரன் முதலமைச்சர் வேட்பாளரைப் பகிரங்கமாய் அறிவிக்க கட்சித்தலைவர்  சம்பந்தர் இன்னும் முதலமைச்சர் பதவி பற்றி முடிவு செய்யவில்லை என்கிறாரே?
 
பதில்:- அது கூட்டமைப்பு அல்ல-கூத்தமைப்பு.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-   நல்லா கூத்து காட்டுறானுங்க
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 02
சுகுமாரன் வினேஷ்: அடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அல்ல மாவை தான் என்று சுமந்திரன் பகிரங்கமாய் அறிவித்திருப்பதைப் பார்த்தீர்களா?
 

 

 
பதில்:- பார்த்தேன். நியாயமான முடிவு. தம்மால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பதவி பெற்ற   ஒருவர் கட்சிக்குள் இருந்து கொண்டே அதற்கெதிராய்ச் செயற்படும்  போது அவருக்கு மீண்டும் அப்பதவியை அக்கட்சி வழங்குமென எப்படி எதிர்பார்க்கலாம்? இதுவரை அவரைச் சகித்திருந்ததே பெரிய விஷயம். என்றைக்கோ எடுத்திருக்கவேண்டிய முடிவு இது.  நோய்க்கு ஆரம்பத்திலேயே வைத்தியம் செய்யாமல் முற்றவிட்டு வைத்தியம் செய்கிறார்கள். வந்தபின் காக்கும் மடமை. மற்றொரு விஷயம், சுமந்திரன் தனது முடிவுக்குச் சொல்லும் நியாயத்தைத்தான்  சகிக்கமுடியவில்லை. முன்பே நீதியரசர் அடுத்தமுறை தனக்குப் பதவி  வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதனால்த்தான் இந்த முடிவு என்கிறார் சுமந்திரன்.  நகைச்சுவைக்கும்  ஓர் எல்லை வேண்டும். பதவி கொடுக்காமல் விடுவதற்கான காரணங்கள்  ஆயிரம் இருக்க அதை நேரே சொல்லும் துணிவின்றி வெறும் சப்பைக்கட்டு கட்டுகிறார் அவர்.  கூட்டமைப்பினர் தமது முதுகெழும்புக்கு நல்ல 'பத்து'ப் போடவேண்டும்.   முதலமைச்சரின்  துணிவுக்கான காரணம் தெரிகிறது. பூனை மெலிந்தால் எலி சுகம் கேட்குமாம். அது எலியின்  பிழையில்லை. பூனையின் பிழை. 
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-   எலிக்கு ஒளிஞ்சுக்க இந்தப் பொந்து இல்லைன்னா இன்னொரு பொந்து..
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 03
ரவிமாரன் ரவி: உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சி பெறுவதற்காக கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பி யினரின் ஆதரவைப் பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
பதில்:- போரின்  முடிவோடு  தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் முடிவடைந்து விட்டது. இப்போது நடப்பது அரசியல் கட்சிகளின்  பதவிப் போராட்டமே.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  'அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா!'
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 04
குணதர்சன் நிரேஷ்: ஈ.பி.டி.பி யின் ஆதரவை தாம் கோரவில்லை என்கிறார் சுமந்திரன். கோரியது நிஜம். அதை நிரூபிக்க முடியும் என்கிறது ஈ.பி.டி.பி. அவர்களது கூற்றை ரெலோவும் உறுதிப்படுத்துகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
பதில்:- சத்தியத்தின் பெருமை சுமந்திரனுக்குத் தெரியவில்லை. ஒருவர் தேவையில்லாமல் ஒரு பொய்யைச் சொல்லி அகப்பட்டால் பின்னர் அவர் சொல்பவை எல்லாம் பொய்யாய்க் கருதப்படும்.  இது யதார்த்தம். முன்பும் பலதரம் இத்தகு தவறுகளை சுமந்திரன் விட்டிருக்கிறார். இம்முறை இந்தத் தடுமாற்றம் ஏனென்று புரியவில்லை. 
 
ஈ.பி.டி.பியிடம் உதவிகோரியதில் என்ன தவறு இருக்கிறது. குற்றவாளிகள் என்றால் இங்கு எல்லாருமே குற்றவாளிகள் தான். எண்ணித் துணியவேண்டும். துணிந்த பின் எண்ணுவது மாபெரும் தவறு. ஈ.பி.டி.பி யையும் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் ஆதரித்தபடிதான் இருக்கிறார்கள். முன்புதான் அவர்களது வெற்றியை அரச செல்வாக்கால் வந்த வெற்றி என்றனர். போரின் பின் தேர்தல் களத்தில் அனைவரும் இறங்கிய பின்பும் ஈ.பி.டி.பியினர் வெற்றியைச் சந்தித்தபடிதான் இருக்கின்றனர். எனவே அவர்களிடம் உதவி கோருவதில் எந்தவித தவறும் இல்லை. கோராமல் விடுவது அவரவர் முடிவு. ரகசியமாய் உதவி கோரிவிட்டு பின் அதை மறுப்பது மிக மோசமான கோழைத்தனம். முன்பு ஈ.பி.டி.பி. குற்றவாளியாய் நின்றது. இன்று அவர்களைக் குற்றவாளி என்ற கூட்டமைப்பை வேறு சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது தமிழினத்தில் தொடரும் நோய். துரையப்பாவைச் சுட்டபோது கூட்டணி அவரைத் துரோகி என்றது. பின்னர் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்தினைச் சுட்டபோது புலிகள் அவரைத் துரோகி என்றனர். இதில் பகிடி  என்னவென்றால் அவ்வக்காலத்தில் பலமுள்ளவர்களின் அந்தந்த முடிவுக்குத் தமிழினம் தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. சுயமற்ற ஒரு இனத்திற்கு சுதந்திரம் வந்தாலென்ன? வராவிட்டாலென்ன? சுந்தரர் தேவாரத்தில் சொன்னாற் போல 'வாழ்ந்து போதீரே' என விட்டுவிட வேண்டியதுதான்.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  வாரிதியாரே நீர் ஒரு துரோகி.. ஹி..ஹி..
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 05
தங்கவடிவேல் பானு: யாழில் ஈ.பி.டி.பி. யின் ஆதரவைப் பெற்றுவிட்டு நெடுந்தீவில் கூட்டமைப்பு அவர்களுக்கு எதிராய்ச் செயற்பட்டிருப்பது பற்றி?
 
பதில்:- இந்த இயல்பால்தான் அவர்களை நம்பி செயற்பட மற்றக் கட்சிகள் அஞ்சுகின்றன. வார்த்தைச் சுத்தம் தனி வாழ்வுக்கே அவசியமானது. பொதுவாழ்வுக்கு அதன்  அவசியத்தைச் சொல்லவும் வேண்டுமா? கூட்டமைப்பினர் புத்தியை மட்டும் நம்பி இயக்கப் பார்க்கின்றனர். நிச்சயம் அது வெற்றிக்கு வழி வகுக்காது. 
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- வார்த்தைச் சுத்தமா? சும்மா காமடி பண்ணாதீங்க..
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 06
வித்தகன்: முன்பு டக்ளஸ் தேவானந்தா அமைச்சராய் இருந்த பொழுது நீங்கள் கட்டிய கோயில் நிதிக்காக அவர் தந்த பணத்தை வாங்கியதை இனத்துரோகம் நிகழ்ந்து விட்டதாய் உலகெங்கும் பறைசாற்றினார் உதயன் பத்திரிகை அதிபர் சரவணபவன். இன்று அவர் சார்ந்த கூட்டமைப்புக் கட்சி ஈ.பி.டி.பி.யின் ஆதரவைக் கோரிப்பெற்றிருக்கிறது. அவர் தமிழினத்திற்கு விசுவாசமானவராய் இருந்தால் அன்றைக்கு உங்களை அத்தனை வாட்டு வாட்டியவர், இன்று தன் பதவியை ராஜினாமாச் செய்திருக்க வேண்டாமா?
 
பதில்:- உங்களுக்கு வேறு வேலை இல்லைபோல் தெரிகிறது. யாரிடம் எதை எதிர்பார்ப்பது என்று இல்லையா? அவர் யாருக்குத்தான் விசுவாசமாய் இருந்தார்? சிறந்த வியாபாரி என்பதொன்றே அவரது தகுதி. தன் பத்திரிகைப் பலத்தை வைத்து மற்றவர்களை மிரட்டி தனக்கு அடிமைப்பட வைப்பதே அவரது தொழில். அப்படித்தானே பாராளுமன்றப் பதவியும் பெற்றார் என்று பேசிக்கொள்கிறார்கள். நாங்கள் அவருக்கு அடிபணியவில்லை என்ற கோபத்தில்த்தான் எங்களைப் பத்திரிகை மூலம் துரோகிகளாய்க் காட்ட முயன்றார் கம்பன் குடும்பத்தினர் எனப் பெயரிட்டு நாங்கள் போட்டாற் போல டக்ளஸ{க்கு நன்றியுரைத்து தன் சொந்தப் பணத்தில் அவர் போட்ட விளம்பரம் அநியாயத்தின் உச்சம். அந்த விளம்பரத்தையும் புத்திசாலித்தனமாய்ப் போடத் தெரியவில்லை. எங்கள் மேல் இருந்த பகையுணர்ச்சியில் அந்த விளம்பரப்பக்கத்தில் எங்களை இழிவுபடுத்தும் வகையிலான வசனங்களை அமைத்தமை அவரது அறிவீனத்தின் அடையாளமாயிற்று. சொந்தப்பணத்தில் எவராவது தமக்குத் தாமே சூனியம் வைப்பார்களா? கெட்டிக்காரனின் பொய் எட்டு நாளைக்கே என்பதே பழமொழி. காலம் எங்களது உண்மையையும் அவரது பொய்யையும் ஒருமித்து நிரூபித்திருக்கிறது. அவராவது பதவியை விடுவதாவது?
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  ஐயாவுக்கு ஒரு எள்ளெண்ணை பார்சல்
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 07
பிருந்தகன் : நல்லாட்சி அரசில் நடக்கும் கோளாறுகள்  பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
பதில்:- நல்லாட்சி என்பது இலேசான விடயமில்லை என்று நினைக்கிறேன். 
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  இது கள்லாட்ச்சி...
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 08
நவகுமரன் தர்மேஷ்: இவ்வளவு பகையுடன் இருந்துகொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் எப்படி நல்லாட்சி அரசாங்கம் கவிழாமல் பார்த்துக் கொள்கின்றனர்?
 
பதில்:- எப்போது விழுங்கலாம் என்று ஒரு முதலை வாய்திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பயந்த ஆடும் ஓநாயும் எவ்வளவு பகையிருந்தாலும் ஒன்றுபட்டு இருக்கத்தான் வேண்டும்.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  ஓநாயும் ஆடும் ஒரு தனிக்குடுத்தனம்.. ஹி.. ஹி..
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 09
நிராதன் சண்முகமூர்த்தி: அமைச்சர் மனோகணேசனின் கட்சியிலும் குழப்பமாமே. அடுத்தடுத்து பலர் கட்சியை விட்டு விலகுவதாய்ச் செய்தி வருகிறதே. 
 
பதில்:- மனோகணேசன் ஆளுமை மிக்க தலைவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. விலகியவர்கள் பதவி தராத கோபத்தில் விலகியதாய்ச் செய்திகள் சொல்கின்றன. அப்படியானால் இதுவரை அவர்கள் பதவிக்காகவே கட்சியில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அத்தகையோரின் பிரிவு கட்சியைப் பெரிய அளவில் பாதிக்காது என்றே கருதுகிறேன். ஆனால் மனோ கணேசனுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். திருவள்ளுவர் அரசியலாளருக்குச் சொன்ன சில ஆலோசனைகளை இந்நேரத்தில் அவர் மனங்கொள்ள வேண்டும். 
 
எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும் 
 
 
உட்பகை உள்ளதாம் கேடு.
அரசனது பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறிய உட்பகையாயினும் அரசனது பெருமையை எல்லாம் அழிக்க வரும் கேடு. அவ் உட்பகையின் இடத்துள்ளதாம். 
 
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேழ் போல் பகைவர் தொடர்பு.
வாளைப் போன்ற கூர்மையுடைய பகைவரைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. உறவு போல் உட்பகை உடையாரின் நட்பினைப் பற்றி அஞ்சுக.
 
உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும்.
உட்பகை அரசனுக்கு உண்டானால் அஃது அவனுக்கு இறத்தலோடு கூடிய தீமை பலவற்றையும் கொடுக்கும்.
 
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
பகைவர்களுக்குத் துணையானவர்களை பிரித்துத் தம் பக்கம் எடுத்தலும், தம்பக்கம் இருப்பவர் தம்மை விட்டுப் பிரியாமல் கொடை, இன்சொற்களால் பேணிக் கொள்ளுதலும் முன்னே தம்மோடு இருந்து பிரிந்து சென்றாரை மீண்டும் தம்முடன் பொருத்திக் கொள்ளுதலும் செய்ய வல்லவனே நல்ல அமைச்சனாவான்.
 
மனோகணேசனுக்கு என்றில்லை நமது தமிழ்க்கட்சித் தலைமைகள் அனைத்திற்கும் இக்குறள்கள் சம்ர்ப்பணம்.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  வள்ளுவன் தி கிரேட் அரசியல்வாதி
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 10
தங்கவடிவேல் பானு: வடக்கு முதலமைச்சர் புதிய கட்சி தொடங்கப்போகிறாராமே?
 
பதில்:- மிகநல்ல காரியம். ஊரான் தோளில் ஏறி இருந்து கொண்டு தலைமை பிழையென்று உபதேசம் செய்வது சுகமான காரியம். தன் தோளில் மற்றவர்களை ஏற்றிக்கொண்டு அவர் சொல்லி வரும் இலட்சியஅரசியலை தொடர்ந்து செய்து காட்டினால் நிச்சயம் அவரைப் பாராட்டலாம். இதுவரைகாலத்திலும் முதலமைச்சரிடம் இனங்காணப்பட்ட பிடிவாதம்,  நம்பிக்கைத் துரோகம், நிர்வாகத் திறமின்மை, பக்கச்சார்பு, தற்சார்பு என்பனவான  பண்புகள் அவரை ஒரு நல்ல தலைவராய் ஆக்கவிடா என்பதே என் கருத்து. 
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  கூரை ஏறி கோழி  பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாகத்தான் இது இருக்கப்போகுது..
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கேள்வி: 11
சிந்துஜன் மாஸ்: யாழ் மாநகரசபை உறுப்பினர் சிலர் முன்னால் ஆணையாளர் சி.வி.கே சிவஞானம் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி விசாரணை நடத்தவேண்டும் என்கின்றனரே?
 
பதில்:- மாநகரசபை கட்டிடம் இடிந்தபொழுது புதிய மாநகரசபை கட்டிடத்தை நல்லூர் காணியில் அமைத்தது. குண்டுகள் விழுந்து யாழ் எரிந்து கொண்டிருந்தபோது வெளிநாட்டுத் தூதரகங்களுடன் பேசி தீயணைக்கும் கருவிகளைக் கொணர்வித்தது, மிக இக்கட்டான சூழ்நிலையில் புலிகளையும் அரசையும் சமாளித்து யாழ் நிர்வாகத்தை இயங்கச் செய்தது  போன்ற பல காரியங்களை தன் சுய முயற்சியால்  சிவஞானம் செய்தார். புதிய மாநகர சபை நிர்வாகம் இன்னும் உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லை. அதற்குள் மற்றவர்கள் பிழையைக் கண்டுபிடிக்க முயல்வதில் அர்த்தமில்லை. விதித்தன செய்த பின்புதான் விலக்கியன ஒழித்தல் வேண்டும். திருவிளையாடல் படத்தில் தருமியாக வரும் நாகேஸ் நக்கீரரை நோக்கி பின்வருமாறு சொல்வார். 'சிலர் பாட்டெழுதிப் புகழ் பெறுவார்கள். சிலர் பிழைகண்டு பிடித்தே புகழ் பெறுவார்கள். இவர் இரண்டாவது வகை."  மேற் சொன்ன உறுப்பினர்களும் இந்த வகையினர்தான். ஏற்கனவே ஒரு மாகாணசபையை அழித்தது போதும். இனி மாநகரசபையையும் நாசமாக்குவதை விட்டு உருப்படியாய் ஏதாவது செய்யட்டும்.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:-  இவர்களும் தாம் தமிழர்கள் என்பதை வேறு எப்படித்தான் காட்டுவதாம்?
 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.