அரசியற்களம் 20 | என்ன செய்யப்போகிறோம்?
அரசியல்களம் 04 Dec 2015
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
இறந்துபோன இளைஞன் செந்தூரனுக்கு அஞ்சலிகள்.
அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு,
ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிர் துறந்திருக்கிறான் அப்பாலகன்.
அவனது சமூக உணர்வு, இனப்பற்று என்பவை,
நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
இனப்பிரச்சினை பற்றி,
நெஞ்சில் உரமோ நேர்மைத் திறமோ இன்றி வாய் கிழியப்பேசி,
தம் வளம் பெருக்கும் தலைவர்கள் இவனது மரணம் மூலம்,
உண்மைத் தியாகம் பற்றி உணர்வார்களாக!
✽✎✽
ஆனால், செந்தூரனின் செயல்,
நிச்சயம் ஒரு முன்னுதாரணச் செயலன்று.
உணர்ச்சிக் கொந்தளிப்பால் எடுக்கப்படும் முடிவுகள்,
என்றும் அறிவுசார்ந்தவையாய் இருக்க வாய்ப்பில்லை.
அநியாயமாகத் தன் உயிரைப் பலிகொடுத்திருக்கிறான்.
அவனது உணர்ச்சியின் தூய்மையைப் பாராட்டலாமே தவிர,
அவனது செயலை நிச்சயம் பாராட்ட முடியாது.
இளைஞர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி,
அரசியல் செய்ய இன்றும் சில தலைவர்கள் முயல்கின்றனர்.
இத்தகைய மரணங்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள்.
ஒருநாள் விடுமுறையோடு செந்தூரனின் மரணம்,
வீணாய்க் கரைந்து போயிற்று.
✽✎✽
இனி ஒரு இளைஞனும் இத்தகு வீண் தியாகங்களை,
செய்யக்கூடாது எனத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
உணர்ச்சி மிகுந்த மரணங்களை விட,
அறிவுமிகுந்த செயற்பாடுகளே,
இன்றைய நிலையில் நாம் இனத்திற்குச் செய்யக்கூடிய,
பெருந்தியாகங்களாகும்.
அகிம்சைப்போராட்டம், ஆயுதப்போராட்டம் என,
அனைத்தும் செய்து ஓய்ந்துபோன நிலையில்,
இத்தேசத்தில் அமைதிக்கான மெல்லிய ஒளிக்கீற்று,
தெரியத்தொடங்கியிருக்கிறது.
மெல்ல மெல்லத்தான் அவ் ஒளிக்கீற்றை,
பெருவெளிச்சமாக்க முயலவேண்டும்.
சிறு நெருப்பைப் பெரிதாக்குகிறோம் என்று,
அவசரப்பட்டு விறகுகளை அள்ளிக்கொட்டினால்,
ஒருவேளை உள்ள நெருப்பும் இல்லாதொழியும்.
இது இயற்கை தரும் அறிவு.
✽✎✽
அரசியலிலும் நமக்கு இந்த அறிவு தேவை.
புலிகளின் மறைவின் பின்,
ஒழிந்தோம் என்று ஓய்ந்திருக்க,
இலங்கையில் நிகழ்ந்த ஆச்சரியமான அரசியல் மாற்றமும்,
ஐ.நா.சபையில் நமக்காக எழுந்த ஆதரவுக் குரலும்,
மீண்டும், தமிழர் உரிமைபெற்று வாழலாம் எனும்,
சிறு நம்பிக்கையைத் தந்திருக்கின்றன.
அதனைப் பெருநம்பிக்கையாக்க வேண்டியது நம் பொறுப்பு.
பல தசாப்தப் பகையை ஓரிரு மாதங்களுக்குள் ஓயச்செய்து விடலாம் என,
நினைப்பது அறியாமையின் அடையாளம்.
✽✎✽
எதிரியைக் கையாள்வதற்கான முறைகளை,
சாம,தான,பேத,தண்டம் என நால்வகையாய்,
பிரித்துரைத்தனர் நம் மூதாதையர்.
சமாதானமாய் இலக்கை அடைய நினைப்பது,
எதையேனும் கொடுத்து எதிரியைத் திருப்தி செய்து,
இலக்கை அடைய நினைப்பது.
எதிரிகளைப் பிரித்து நம் இலக்கை அடைய நினைப்பது.
இவை ஏதும் சரிவராத பட்சத்தில்.
போர்செய்து எதிரிகளை வீழ்த்தி இலக்கை அடைய நினைப்பது.
இவையே சாம,தான,பேத,தண்டங்களாம்.
✽✎✽
இந்நான்குமே போர்முறைகள்தாம்.
இந்நான்கில் ஏதொன்றின் மூலமும் இலக்கை அடைந்தால்,
அது வெற்றி என்றே கொள்ளப்படும்.
சாமம், தானம், பேதம், தண்டம் எனும் இவ்வரிசைப்படுத்தலிலேயே,
நாம் இயங்க வேண்டிய முறைமையை,
நம் மூதாதையர்கள் உணர்த்தியிருக்கின்றனர்.
முதலில் சமாதானம்,
பின்னர் தானம்,
அதன்பின் எதிரிகளைப் பிரித்தல்,
இவையேதும் பயன்தராத பட்சத்தில்,
முடிவில் போர் செய்தல்.
இதுவே நம் பெரியோர் உரைத்த முறை.
இம்முறையை அவர்கள் உரைத்ததற்கான காரணம் உண்டு.
நோக்கத்தை நாம் அடையும் பாதையில்,
முடிந்த அளவு சேதங்களைத் தவிர்த்து
வெற்றிபெறவேண்டும் என நினைத்ததாலேயே
மேல் முறைகள் வரிசைப்படி வகுக்கப்பட்டன.
இது மக்கள் நலம் நோக்கிய தெளிந்த முடிவு.
✽✎✽
உலக அரசியலாளர்களைப் பின்பற்றாவிடினும்,
வள்ளுவன் போன்ற நம் மூதாதையர்கள் உரைத்த,
அரசியல் நெறிகளையேனும் நம் தலைவர்கள்,
அறிதலும், கடைப்பிடித்தலும் அவசியம்.
சாம,தான,பேத முயற்சிகளை விட்டு,
நேராகத் தண்டத்தில் இறங்கி,
பேரழிவுபட்டு அதிர்ந்து நிற்கிறது நம் தமிழினம்.
✽✎✽
அழிவின் ஆவேசமும் இழப்பின் ஏக்கமும்,
நம் அறிவைச் சூழ்ந்து,
இன்னும் நம்மை போர் மனநிலையிலேயே வைத்திருக்கின்றன.
அதில் மாற்றம் வரவேண்டும்.
தமிழர் உரிமைபற்றிய போராட்டத்தில்,
இன்று நிகழத் தொடங்கியிருப்பது இரண்டாவது சுற்று.
முதற் சுற்றில் ஆயிரக்கணக்கான உயிர்களையும்,
கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து,
நாம் பெற்றிருப்பது உலகின் அனுதாபம் ஒன்றினையே.
அதுகூட வல்லரசு நாடுகளின் தேவை நோக்கிய,
வழிப்படுத்தலால் விளைந்ததேயன்றி,
நம் மீதான உண்மை அனுதாபத்தால் அன்றாம்.
மீண்டும் ஒருதரம் அதே பாதையில் அடியெடுத்து வைக்க நினைப்பது,
நிச்சயம் அறிவுடைமை ஆகாது.
✽✎✽
உலகின் அனுதாபமும், நம்மீதான அதன் ஆதரவும் நேர்மையானவை அல்ல.
ஆகவே சூழலின் நிஜம் உணராமல் எதிரியின் கழுத்தைப்பிடித்து,
நாம் உரிமைபெறலாம் என நினைப்பது மடைமை.
அரசியல் சதுரங்கத்தில் அமைதியாக அறிவோடு காய் நகர்த்தி,
நாம், எதிரிகளுக்கு ‘செக்’ சொல்லவேண்டும். அதுதான் அறிவுடைமை.
அதைவிடுத்து அவசரக்காய் நகர்த்தலின் மூலம் அறிவிழந்து,
‘செக்’ சொல்லும் வாய்ப்பை எதிரிகளுக்கு நாமே வழங்கிவிடக்கூடாது.
✽✎✽
உலக ஆதரவு எனும் உறுதியில்லா நூல் கிடைத்த துணிவில்,
நம் தலைவர்களுட் சிலர் மீண்டும் தடம்மாறி நடக்கத் தலைப்படுகின்றனர்.
எதிரிகள் பேதப்படுத்தாமலே தம் ஆணவ முனைப்பால்,
ஒருவரோடொருவர் மோதி நிற்கின்றனர்.
ஒருவர், தன்னை வளர்த்த கட்சியைக் குற்றம் சொல்கிறார்.
இன்னொருவர் குற்றம் சொல்பவரைக் குற்றம் சொல்கிறார்.
மற்றொருவர் இப்பிரிவைப் பெரிதாக்க,
முதலாமவருக்குச் செங்கம்பளம் விரித்து வரவேற்பளிக்கிறார்.
கூட்டமைப்புக்குள்ளேயே இன்று,
‘அவருக்கு’, ‘இவருக்கு’ என இரு பிரிவுகளாம்.
துலையப்போகிறோம்!
✽✎✽
இம்மோதல்கள் அவர்களின் அரசியல் அறிவின்மையை,
அல்லது அவர்தம் சுயநலத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
எதிரி செய்யவேண்டிய வேலையை இவர்களாய்ச் செய்து,
பேதப்பட்டு நிற்கும் நிலையைக் கண்டிக்காமல்,
கட்சி பிரிந்து ரசித்து, கைதட்டி ஊக்கப்படுத்த மக்களும் தயாராவது,
மீண்டும் நாம் ஓர் அழிவை நோக்கி நகர்கிறோமா? என அஞ்சவைக்கிறது.
ஒன்று தலைவர்கள் அறிவு வயப்படவேண்டும்,
அல்லது மக்கள் அறிவு வயப்படவேண்டும்.
அன்றேல் மீண்டும் மண் கௌவுவதே நம் முடிவாகிவிடும்.
✽✎✽
கட்டுரை முடிந்துவிட்டது.
ஆனாலும் சில விஷயங்களை உபரியாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது.
மேற்சொன்ன எனது கருத்துக்களுக்குச் சாட்சிகளாக,
தலைவர்களின் பொய்யையும், பொறுப்பின்மையையும் வெளிப்படுத்தும்,
இரு சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடந்து முடிந்தன.
அவையே நான் சொல்லப்போகும் உபரிச்செய்திகள்.
✽✎✽
ஒன்று, நடந்துமுடிந்த இழப்புக்களுக்கான நீதி தேவையென
தான் சார்ந்த கட்சியை எதிர்த்து புரட்சியோடு போராடிவரும்
நம் வடமாகாண முதல்வர் மாவீரர் வாரத்தில்
மாவீரர்களுக்கோ, போரில் மடிந்தோர்க்கோ,
வடமாகாணசபையில் அஞ்சலி செலுத்த ஆவன செய்யத்தவறியமை.
பல்கலைக்கழக இளைஞர்களுக்கும்,
சிவாஜிலிங்கத்திற்கும், மற்றைச் சில தலைவர்களுக்கும் இருந்த துணிவு,
தனது உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களால்,
‘ஹீரோ’ வாக மாறிவரும் நம் முதலமைச்சருக்கு,
இல்லாமற் போனது நகைப்பிற்குரியதே.
எதற்கும் துணிந்தவராய் தன்னை இனங்காட்ட முயலும் முதலமைச்சர்,
இவ்விடயத்தில் முடங்கிப்போனது ஆச்சரியம்!
ஒன்றும் வேண்டாம் அக்காலத்தில்
மாவீரர் குடும்பங்களையாவது சந்தித்து
ஆறுதலும் ஆன உதவியும் செய்திருக்கலாம்.
அதுகூட நடந்ததாய்த் தெரியவில்லை.
மொத்தத்தில் இச்செயல் நம் உணர்ச்சித்தலைவரை,
வாய்ச்சொல்லில் வீரரென இனங்காட்டி இருக்கிறது.
இது இவர்தம் பொய்மையின் அடையாளம்.
இவரை நம்பித்தான் நம் எதிர்காலம் இருப்பதாய்,
உணர்ச்சிவயப்பட்ட பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
உருப்பட்டமாதிரித்தான்.
என்ன ஆகப்போகிறோமோ?
✽✎✽
அடுத்தது நம் தலைவர்களின் பொறுப்பின்மையின் வெளிப்பாடு.
போர்க்காலத்தில் நாம் வருந்தியபோதெல்லாம்,
நம் உடன் பிறப்புக்களாய் கொதித்து, கொந்தளித்து,
ஊர்வலம், கடையடைப்பு, தீக்குளிப்பு என,
ஈழத்தமிழர்களுக்காய்த் தம் உணர்வை,
உலகறிய வெளிப்படுத்தியவர்கள்,
நம் தமிழ்நாட்டுச் சகோதரர்கள்.
இன்று அவர்கள் வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.
வீதிகளெல்லாம ஆறுகளாக மாறி,
அவர்தம் உயிர் உடமை என அனைத்தையும் அள்ளிச்செல்கின்றன.
உலகப் பேரழிவாய் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் இச்சேதம் பற்றி,
04.12.2015 மதியம் இக்கட்டுரை எழுதப்படும்வரை.
இரண்டாம் முறையாக பெருவெள்ளம் தொடங்கி ஐந்து நாட்களாகிவிட்ட நிலையில்,
நம்முடைய முக்கியமான தமிழ்த்தலைவர்களிடமிருந்து,
எவ்வித அனுதாபச்செய்தியும் வெளிவந்ததாய்த் தெரியவில்லை.
பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டபோது
உடன் அறிக்கைவிட்ட எதிர்க்கட்சித்தலைவருக்கும்,
சங்கரியின் குள்ளத்தனமான அறிக்கைக்கு
மறுநாளே மகிழ்வோடு நன்றியறிக்கைவிட்ட முதலமைச்சருக்கும்,
இப்பேரவலத்திற்கு உடன் அனுதாப அறிக்கைவிட நேரமில்லாமல் போயிற்று.
பாவம் அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு.
ஜனாதிபதி மைத்திரி தனது அனுதாபத்தைப் பதிவாக்கி,
இந்தியப் பிரதமர் மோடியிடம் நன்றி பெற்றிருக்கிறார்.
எங்கள் தலைவர்களுக்கோ,
நம் உடன் பிறப்புகளுக்கு அனுதாபம் சொல்லக்கூட நேரமில்லை.
தம்முள் சண்டை பிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதாத போது,
இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம் கிடைக்கப்போகிறது?
ஈழத்தமிழர்கள் நன்றிகெட்டவர்கள் என்று,
தாயகத் தமிழர்கள் நினைக்கப் போகிறார்கள்.
வெட்கக்கேடு!
தலைவர்கள்தான் நன்றி மறந்தார்கள்.
தமிழர்கள் நன்றி மறக்கவில்லை.
‘அன்புச்சகோதரர்களே!
உங்களின் துயர் தீர்க்க எங்களால் உடன் ஏதும் செய்யமுடியவில்லை,
ஆனாலும் உங்கள் துன்பத்தில் நாமும் மனதால் கைகோர்த்தே நிற்கிறோம்’ என்பதை,
ஈழத்தமிழர்கள் சார்பாக,
‘உகரம்’ தெரிவிக்க விரும்புகிறது.
✽✎✽