ஆகமம் அறிவோம் | பாகம் 01

ஆகமம் அறிவோம் | பாகம் 01
 
முன்னுரை
உலகை உய்வித்து நிற்பது நம் சைவசமயம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு முறைகளால்,
இறைவனை வழிபடலாம் என்கிறது அது.
இந்நான்கையும் சைவநாற்பாதங்கள் என்பர்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும்,
இந் நான்கையும் சிவாகமங்கள் விளக்கம் செய்கின்றன.
 



நமது ஆலயக்கிரியைகள் அனைத்தையும்,
எங்ஙனம் செய்யவேண்டும் எனும் விபரங்கள்,
நம் ஆகம நூட்களுட்தான் அடங்கியுள்ளன.
ஆலயம் அமைத்தல், சிற்பநிர்ணயம், பூசை,
உற்சவ முறைகள், பிரதிட்டை முதலியனவும்,
அபரக்கிரியைகளும் நமது ஆகமங்களையே,
ஆதாரமாகக் கொள்வன.



மூலஆகமங்கள்
காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டு.
ஆகமத்தின் வழிநூல்களான,
உபஆகமங்கள் இருநூற்றியேழு.
ஆகவே ஆகமங்களின் மொத்தத்தொகை.
இருநூற்றி முப்பத்தைந்தாம்.
நம் கிரியை முறைகளுக்கு மட்டுமன்றி,
நம் தத்துவசாஸ்திரத்திற்கும் இவ் ஆகம நூல்களே,
பிரமாண நூல்கள்.
வேதமும், ஆகமமும் சிவபெருமானால் அருளிச்செய்ப்பட்டவை என்றும்,
இவையே சைவசமயத்தின் பிரமாணநூல்கள் என்றும் சொல்லப்படுகிறது.



ஆனால் கலியின் கொடுமையால்,
இன்று மூல ஆகமங்களில் ஒருசிலவும்,
உப ஆகமங்களில் ஒருசிலவுமே,
நமது கைக்குக் கிட்டுகின்றன.
ஆகமங்களுட் பல,
சில நூற்றாண்டுகளுக்கு முன்,
தென்னிந்தியாவில் இருந்தவையாயினும்,
இப்போது மறைந்துவிட்டன.
சில ஆகமங்கள் மாத்திரமே இப்போது தமிழ்நாட்டில் உள்ளன.
சிவாகமப்பிரதிகள் எப்போதாயினும் கிடைக்காமற் போனாலும்,
காலத்திற்குக் காலம் தோன்றும் சிவஞானிகளால்,
அவை புதுப்பிக்கப்பட்டு இவ்வுலகத்திலே என்றும் நிலவும்.
அவற்றின் ஏனைய பகுதிகளுட் பெரும்பாலானவை,
பத்ததிகளில் உள்ளவை என்று,
சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் அவர்கள்,
தனது திருவருட்பயன் விளக்கநூலில் எழுதியுள்ளார்.



இன்று பிரமாண நூல்களை நாம் இழந்து போனதால்,
அவரவர் தத்தம்பாட்டில் தாம் விரும்பியவற்றை,
இவையிவையே ஆகமப்பிரமாணம் என்று,
வரையறையற்று தம் இஷ்டத்திற்கு உரைத்து வருகின்றனர்.



ஆகமப்புலமை பெற்ற அந்தணர்களதும், அறிஞர்களதும் எண்ணிக்கை,
இல்லையெனும்படியாகக் குறைந்து போய்விட்டபடியால்,
ஆண்டவனால் சொல்லப்பட்ட ஆகமப்பிரமாணங்கள்,
இன்று அவரவர் இஷ்டத்திற்கு வளைக்கப்பட்டுக் கிடக்கின்றன.
எதற்கெடுத்தாலும் இது ஆகமத்திற்கு பிழை என்று சொல்வோர் தொகை,
இன்று அதிகரித்துவிட்டது.
ஆகமங்களைக் கண்ணாலும் காணாத அவர்களின் கூற்றே,
இன்றைய ஆகமப்பிரமாணங்களாம்.
அதனால் சைவத்திற்கு இன்று விளையும் கேடோ எல்லையற்றது.



இன்று பெரும்பாலும் ஆலயத்தை வழிநடத்துகிற,
அறங்காவலர்களில் பலருக்கு,
சமய விடயங்களில் புலமையில்லை.
அத்தகையோர்,
அந்தணர்கள், தம் வசதிக்கேற்ப உரைப்பவற்றையே,
ஆகமப்பிரமாணங்கள் எனக் கருதி ஏமாறுகின்றனர்.
சமயச்சொற்பொழிவாளர்களாகவும், அறிஞர்களாகவும்,
தம்மை இனங்காட்டிக் கொள்வோரும்,
சைவசமயத்தின் ஆழக்கருத்துக்களை,
அதிகம் அறிய விரும்புவதில்லை.
ஆனாலும் அவ் ஆழ விடயங்கள்,
தமக்குத் தெரியாது என்று சொல்ல விரும்பாமல்,
செவிவழிச் செய்திகளையே,
அவர்களும் ஆகம முடிவுகளாய்,
நூட் பிரமாணங்களின்றி அறிவித்து வருகின்றனர்.
அந்தணர்களதும், சமய அறிஞர்களாய் சொல்லிக்கொள்வோரதும்,
நிச்சயிக்கப்படாத முடிவுகளையே பொதுமக்களும்,
ஆகமப்பிரமாணம் எனக்கருதி ஏமாறும் நிலை இன்று தோன்றியுள்ளது.



பக்திநிலைக்குரிய கிரியைகளையும்,
அறிவுநிலைக்குரிய ஞானத்தையும்,
வரையறைசெய்து தருகின்ற பிரமாணநூல்களை இழந்துவிட்டு,
அதுபற்றிய கவலை ஏதுமின்றி,
பொறுப்பின்றி வாழும் எம் நிலை நகைப்புக்குரியதாம்.



இருக்கும் ஆகமங்கள் மறையும் முன்னரும்,
புதிய ஆகமங்களை கல்லார் தம் இஷ்டத்திற்கு உருவாக்கும் முன்னரும்,
கிடைக்கும் ஆகம விடயங்களையேனும்,
நம்மவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
அந்த விருப்பிலேயே இத்தொடரை எழுதத் தொடங்குகிறேன்.



குறித்த ஒரு ஆகமத்தை,
இங்கு நான் விரித்து உரைக்கப்போவதில்லை.
நம் ஆலயவழிபாட்டில்,
குழப்பம் தருவதான சில விடயங்கள் பற்றியே,
கிடைக்கும் ஆகமங்களிலிருந்து தேர்ந்து எழுதப்போகிறேன்.
என் கைவசம் இருக்கும் ஆகமநூல்கள் சொல்பவற்றையும்,
ஆகமங்களை நன்றாகக் கற்றவர்கள் என,
அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட,
பெரியோர்கள் சொன்னவற்றையும் அடிப்படையாகக் கொண்டே,
இத்தொடரை எழுதத்தொடங்குகிறேன்.
எவரையேனும் தாக்குவதோ, நோகச்செய்வதோ,
இத்தொடரின் நோக்கமல்ல.
இவ் உண்மை உணர்ந்து,
நம் சைவத்தின் பிரமாணநூல் ஆகிய ஆகமம் அறிய,
அனைவரையும் அழைக்கிறேன்.
தொடரும்..
(அடுத்தவாரம் ஆச்சாரிய இலட்சணம் பற்றி அறிவோம்.)
❀❀❀❀
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.