கிழவரின் துணிவு !

கிழவரின் துணிவு !
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 



ணர்ச்சிவயப்படாது நிதானமாக,
சம்பந்தன் பேசிய பேச்சொன்று,
சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது.
தனது அரசியல் அனுபவத்தை,
அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற,
தனது கட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம் ஒன்றிலேயே,
சம்பந்தன் இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார்.



பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும்,
வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,
பெரும் சர்ச்சையாய் வெடித்து,
அண்மைக்காலமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.
ஒரே கட்சியின் இரு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் வெடித்தபோது,
அக்கட்சியின் தலைவரே நடுவராயிருந்து,
அம்முரண்பாட்டிற்குத் தீர்வு கண்டிருக்கவேண்டும்.
ஆனால் உலகம் முழுவதும்,
இப்பிரச்சினை பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோதும்,
சம்பந்தனிடமிருந்து எதுவித அசைவையும் காணவில்லை.
அச்செயல் அவரது தலைமை ஆற்றலை ஐயுற வைத்தது உண்மை.
ஆயிரந்தான் சமாதானம் சொன்னாலும்,
பிரச்சினையின் போதான தலைவரின் மௌனம்,
அவரது தலைமை ஆற்றலுக்கு,
பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டும் நிச்சயம்.
 



கட்சியே உடைந்துவிடுமோ எனும் அளவிற்கு,
இப் பிரச்சினை வளர்ந்த போதும் சம்பந்தன் மௌனம் காத்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது,
முதலமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்ட இப்பிரச்சினை,
தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நாளுக்கு நாள் வளர்ந்து,
தமிழ்ச்சமூகத்தின் ஒற்றுமையையே குலைக்கத் தலைப்பட்டது.



முதலமைச்சர், தான் கட்சிக்கு அப்பாற்பட்டவர் என்று,
ஒரு புதுக்குண்டைத் தூக்கிப்போட,
அவரது உணர்ச்சிவயப்பட்ட,
இன எழுச்சி சார்ந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு,
தமிழ்மக்கள் பலரும் கூட,
இவரே பொருத்தமான இனத்தலைவர் என்று,
முடிவு செய்யும் அளவுக்காய் நிலைமை மோசமானது.
அப்போதும் சம்பந்தனிடமிருந்து,
உறுதிபட்ட ஒரு கருத்துத்தானும் வெளிவரவில்லை.
பிரேத அமைதிகாத்து எரிச்சலூட்டினார் அவர்.



அவரது அமைதியை வாய்ப்பாகக் கொண்டு,
முதலமைச்சரை வெளியேற்றவேண்டுமென,
அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் அறிக்கைவிட,
உள்;ரில் குழப்பம் வெடித்தது.
‘தேர்தல் முடிவு வரும் வரை,
நான் ஊமையாய் இருக்கப்போகிறேன்’ என்று அறிக்கைவிட்டு,
தேர்தல் முடிவுகளில் தனது எதிர்பார்ப்புத் தோற்றுப்போக,
தொடர்ந்தும் ஊமையாகவே இருந்து வந்த முதலமைச்சர்,
சுமந்திரனின் அவுஸ்திரேலிய அறிக்கையால் ஆவேசமுற்று,
மௌனம் கலைத்து நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டார்.



தன்னை இனப்பற்றாளனாகவும்,
கூட்டமைப்பினரை,
முக்கியமாகத் தமிழரசுக்கட்சியினரை,
இனப்பற்றில்லாதவர்களாகவும்,
தீர்க்கதரிசனமும், தெளிவும் இல்லாதவர்களாகவும்,
அவரது கட்டுரை அடையாளப்படுத்தியது.
யாருக்கும் கட்டுப்படாதவர் தாம் என்றும்,
கூட்டமைப்புத் தலைமை கூட,
தனக்குக் கட்டுப்படவேண்டுமென்றும்,
விருப்பம் தெரிவித்திருந்த அவரது கட்டுரையின் போக்கு,
அறிவார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



அப்போதாவது சம்பந்தனின் மௌனம் கலையும் என்று,
தமிழ்மக்கள் எதிர்பார்த்தனர்.
மூக்கில் இடித்தால் ஞானிக்கே கோபம் வரும் என்பார்கள்.
முதலமைச்சரின் அறிக்கை மூக்கில் இடித்தும்,
சம்பந்தன் ஏதும் நடக்காதவர் போல்,
வானம் பார்த்து மோனம் காத்தார்.



இந்நிலையில்,
முதலமைச்சர் தடுமாறுகிறார் என்பதை,
அவர் அறிக்கை வெளிப்படுத்த,
அவரைக் கூட்டமைப்பிலிருந்து பிரித்து,
புதிய தலைமையை உருவாக்க,
பலரும் வலைவீசத் தலைப்பட்டனர்.
முதல் வலையை கஜேந்திரகுமார் நாகரீகமாய் வீசினார்.
முதலமைச்சரின்,
உலகியலுக்கு ஒவ்வாத உணர்ச்சி மிகுவிக்கும் கருத்துக்களால்,
அப்பாவி மக்கள் ஈர்க்கப்படுவதைக் கண்டு,
கூட்டமைப்புக்குள்ளிருந்தும் சில தலைவர்கள்,
முதலமைச்சரை ஆதரித்து அறிக்கை விட்டு,
அவர் தலைமையின் பின் செல்லும் தம் விருப்பை வெளிப்படுத்தினர்.



இந்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்போதைய தலைவரும்,
முதிர்ந்த முன்னாள் தமிழ்த்தலைவருமான ஆனந்தசங்கரி அவர்கள்,
மக்களால் புறந்தள்ளப்பட்டுத் தனித்துப்போன,
தனதும், தன் கட்சியினதும் நிலை மாற்ற,
முதலமைச்சரை ஈர்ப்பதுவே ஒரே வழி என முடிவு செய்தார்.



போராட்டம் நடந்த காலத்தில் ஒதுங்கியிருந்து,
அரச சலுகைகளை அனுபவித்து,
போராட்டம் முடிந்தபின் எதிர்ப்பின்றி அரசியலில் நுழைந்து,
பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கழிகின்ற இன்றுவரை,
பொறுப்பேற்ற மாகாணசபையை வெற்றியாய் இயங்க வைக்காது,
வெறும் வெற்று உணர்ச்சி அறிக்கைகளால்,
மக்களை உசுப்பேத்தியதன்றி இனத்திற்காய் இதுவரை ஏதும் செய்யாது,
தன்னை அரசியலுக்குக் கொணர்ந்து பதவிபெற்றுத்தந்த கட்சிக்கே,
விசுவாசம் காட்ட முடியாது நடந்து கொள்ளும் முதலமைச்சரை,
உத்தமர், உண்மையாளர், திறமைசாலி, இனப்பற்றாளர் என்றெல்லாம் புகழ்ந்து,
அவர் வருகைக்காய் செங்கம்பளம் விரித்துக் காத்திருப்பதாய்,
பகிரங்க அறிக்கை விட்டார் சங்கரி.



முதலமைச்சர் சம்மதித்தால்,
தனது கூட்டணித் தலைவர் பதவியைத் தருவதோடு,
அவரால் கைகாட்டப்படுபவருக்கே,
கட்சியின் செயலாளர் பதவியையும் தரச்சம்மதிப்பதாய்ச் சொல்லி,
தேர்தலில் கட்டுக்காசும் இல்லாமற்போன,
தனது கட்சியின் தலைமைப் பதவியை,
முதலமைச்சருக்காய் தியாகம் செய்யுமாப்போல்,
ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அவர் அறிக்கையில் மயங்கி,
தாமதத்தையே தம் மதமாய்க் கொண்ட முதலமைச்சரும்,
அவர் அறிக்கை வந்த மறுநாளே,
அவர் பாராட்டுக்கு நன்றி உரைத்து,
பதில் அறிக்கை விட்டு,
அனைவரையும் வியக்கவைத்தார்.



ஆச்சரியம் இங்கேதான் நிகழ்ந்தது.
பிரச்சினை எங்கெங்கெல்லாமோ சென்ற போது மௌனித்திருந்த சம்பந்தனார்,
சங்கரியின் அறிக்கையால் சலிப்புற்று சதிராடியிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஓர் அணியில் நின்று ஒன்றாய் வாழ்ந்து பிரிந்து போனவரின்,
வஞ்சக வலைவிரிப்பு, சம்பந்தனாரை கொதிக்கச் செய்திருக்கிறது.
அக்கொதிப்பு அவரது பேச்சின் வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கிறது.



‘ஒரு ஜனநாயக்கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகள்,
பேசித்தீர்க்கப்படவேண்டியவையேயன்றி,
ஊடகங்களில் உலாவரவேண்டியவை அல்ல’ என்று அத்திவாரமிட்டு,
சம்பந்தன் வெளியிட்டிருக்கும் அறிக்கை,
எதிராளிகளை வன்மையாய்த் தாக்குவதோடு,
அவர்களின் சார்புபட்டுக் காட்டும் முதலமைச்சரையும்,
கடுமையாய் விமர்சித்துள்ளது.



சுமந்திரனுக்கும், முதலமைச்சருக்குமான முரண்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது.முரண்பாடுகள் உள்ளது. அது தற்போதும் இருக்கிறது. அம்முரண்பாடு ஏற்பட்டதற்குக் காரணம் பாராளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாய் ஆதரிக்காததே. முதலமைச்சர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினூடாக, இலங்கைத் தமிழரசுக்கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். எனவே அக்கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்குக் கடமையிருக்கிறது. அவரை முதலமைச்சராக்கியது நான். அவரை முதலில் போய்க் கேட்டது நான். முதலில் கட்சிக்குள் எவரும் அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை. மாவை சேனாதிராஜா மௌனம் சாதித்தார். இறுதி நேரத்தில் அவரின் பெருந்தன்மை, அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே, அவரை நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனிவழியில் போய்க்கொண்டிருக்கிறார்.
என்று தனது கோபத்தையெல்லாம்,
அக் கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார் சம்பந்தர்.


அதுமட்டுமல்லாமல்,
‘முதலமைச்சருக்கு ஆதரவாக,
மக்களால் குப்பைத்தொட்டியில் போடப்பட்ட,
ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனா,;
அதுபற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை’  என்று கூறி,
அலட்சியம் செய்திருக்கிறார்.
அவரது கூற்றில்,
முதலமைச்சருக்கான எச்சரிக்கையும் கலந்திருப்பது வெளிப்படத் தெரிகிறது.
‘முதலமைச்சர் விரும்பினால் கட்சித்தலைவர் பொறுப்பினை ஏற்கலாம் ‘  என்று கூறி,
முதலமைச்சரின் அண்மைக்கால விருப்புக்கும் ஒரு குட்டு வைத்து,
‘அதைத் தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே’ என்று அவருக்கு,
‘செக்’ வைத்திருக்கிறார்.



அவரது இந்தக் கிண்டல் அறிக்கையை திரித்து,
சம்பந்தன், கட்சித்தலைவர் பதவியை,
முதலமைச்சருக்குத் தரத்தயார் என்று பேசியதாய்,
முதலமைச்சரின் ஆதரவுப் பத்திரிகைகள் சில,
தலைப்பிட்டு எழுதி மகிழ்ந்தது வேடிக்கை.



முதலமைச்சருக்கு மட்டுமன்றி,
கட்சியை மீறி அவசரப்பட்டு அவுஸ்திரேலியாவில் அறிக்கை விட்ட,
சுமந்திரனுக்கும் தன் கண்டனத்தைத் தெரிவித்து,
சுமந்தரனின் வழிப்படுத்தலில்தான் சம்பந்தன் இயங்குகிறார் என்று,
உலாவி வந்த கருத்தை உடைத்து,
தனது ஆண்மையை நிரூபிக்கவும் அவர் தவறவில்லை.
இங்ஙனமாய் தனது வீரியமான உரையில்,
ஆளுமை காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் சம்பந்தன் ஐயா.



அவரது அப்பேச்சில்,
நிதானமான பல செய்திகளும் பதிவாகியிருக்கின்றன.
சிறைக்கைதிகளின் விடுவிப்பு,
கிழக்கிலும், வடக்கிலும் காணிகள் மீட்பு,
தமிழ்மக்களின் மீள்குடியேற்றம்,
அரசியல் தீர்வு விடயத்தில் உறுதி,
தமிழ்பேசும் பிரதேசங்கள் ஒன்றாய் இருத்தல்,
என்பவைபற்றி தாம் மேற்கொண்டு வரும்,
உறுதியான செயற்பாடுகள் பற்றி எடுத்துரைத்து,
இப்பயணம் நீண்டது.
உள்நாட்டிலும் சர்வதேசத்திலும்,
தமிழர்க்குச் சார்பான நகர்வுகள் நிகழ்ந்துள்ளன.
இந்தநேரத்தில் நிதானமும், பொறுமையும், ஒற்றுமையும் அவசியம் என்று கூறி,
தற்போதைய அரசினது நல்ல சமிக்ஞைகளை வரவேற்று,
அவர்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்களை,
நாம் உணரவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி,
நிதானமாக தனது பேச்சை நிறைவு செய்திருக்கிறார் சம்பந்தன்.



இதுநாள் வரை தனது மௌனத்தால் எரிச்சலூட்டிய சம்பந்தன் ஐயா,
தனது மௌனம் வெறும் பிணமௌனம் அல்ல,
ஞான மௌனம் என்பதைத் தெளிவுபட உரைத்திருக்கிறார்.
அவ் உரையில்,
புலிகள் கொண்டிருந்த கருத்துக்களின் அடிப்படையில்,
தமிழ்மக்கள் தற்போது செயல்படவில்லை.
நிதானமான போக்கினையே அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
அதனால் இன்று சர்வதேச சமூகத்தின் முழுமையான அனுதாபம்,
எங்கள் பக்கம் வந்துள்ளது என்று,
துணிந்து வெளிப்படப் பேசியிருக்கிறார்.



நல்ல ஆற்றல் மிக்க நிதானமான ஒரு தலைவராய்,
தான் செயல்படுவதை தனது உரையினூடு,
சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கின்றமை மகிழ்ச்சி தருகிறது.
திரும்பத்திரும்ப மக்கள் உணர்ச்சியைக் கிளறும் பாதையில்,
பேரினவாதத் தலைவர்களில் ஒருசிலர் இயங்கி இடர் செய்ய,
அதேபோல் நம்மவரிலும் ஒருசிலர்.
மக்கள் ஆதரவைப் பெற்று,
பதவிச்சுகம் பெறுவதற்காய் மட்டும்,
தமிழ்மக்களின் உணர்ச்சியையும் கிளறி,
மீண்டும் பிழையான பாதையில்,
தமிழர்களை வழிநடத்த முயற்சிக்கும் இவ்வேளையில்,
அந்தப்பக்கம் நிதானமான ஜனாதிபதி மைத்திரியின் செயற்பாடும்,
இந்தப்பக்கம் நிதானமான சம்பந்தனின் செயற்பாடும்,
இந்நாட்டில் மீண்டும் பகையிருள் நீங்கி ஒளி பிறக்குமோ? என,
எண்ண வைத்திருக்கிறது.



முதலமைச்சரின் அவசரக் கொள்கைகளையும், ஆத்திர அறிக்கைகளையும்,
இந்திய, அமெரிக்க ராஜதந்திரிகள் விரும்பவில்லை என்பது
அண்மையில் வெளிவந்துகொண்டிருக்கும்
அவர்களது அறிக்கைகளால் தெரியவருகிறது.
இதிலிருந்தே அவர் வகுக்கும் அரசியல் பாதை,
உலகுக்கு ஒவ்வாதது என்பதை,
உணர்ச்சியின் பாற்பட்டு நிற்கின்ற தமிழர்கள் உணரவேண்டும்.
‘ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்’ என்பது பழமொழி.
உலகொடு பகைக்கினும் அதுவே கதியாம்.
தன்னைப் பிரபாகரனுக்கு ஒப்பான தேசியத்தலைவராய்
வார்த்தை ஜாலங்களால் மட்டும் காட்ட முனையும்,
முதலமைச்சரிடமிருந்து இனத்தை மீட்டெடுத்து,
நல்வழிப்படுத்த சம்பந்தனைப் போன்ற,
நிதானமான ஒரு தலைவர் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.



சம்பந்தனைப் பாராட்டி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைக்கு,
'கிழவரின் துணிவு' என,
 அவரின் முதுமையை வைத்துத் தலைப்பிட்டிருப்பது பொருத்தமா?
கேள்வி பிறக்கும்.
தமிழில் கிழவன் என்ற சொல்லுக்குத் தலைவன் என்று பொருள்.
அதனாற்றான் குறிஞ்சிக்குத் தலைவனான முருகனை,
‘குறிஞ்சிக் கிழவோன்’ என்றது தமிழ்.
முதன்முதலாக தன்னை ஒரு துணிந்த தலைவராய் இனங்காட்டிய,
சம்பந்தனாரைப் பாராட்டவே,
உயர் தமிழில் இக்கட்டுரைக்கு,
‘கிழவரின் துணிவு’ என்று பெயரிட்டிருக்கிறேன்.


 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.