சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம் : மாசடைந்த நீரில் மாசுபட்ட கரங்களா? -'நடுநிலையான்'

சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம் : மாசடைந்த நீரில் மாசுபட்ட கரங்களா?  -'நடுநிலையான்'
 
 
 
'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கே' என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிஜமாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் நன்னீர்ப் பகுதியென பலராலும் கருதப்பட்ட சுன்னாகப் பகுதியின் நீர்வளம் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு திடீரெனப் பிரச்சினைக்கு ஆளாகியது. சுன்னாகத்தின் நன்னீர் கிணறுகளில் திடீரென பெற்றோலிய ஒயில் மிதக்கத் தொடங்க மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

அப்பிரச்சினையை ஒருசிலர் முக்கியப்படுத்த முயல வேறொரு சிலர் அதனை மூடிமறைக்க முயன்றனர். மூடி மறைக்க முயன்றவர்கள் அரசியல்வாதிகளாய் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறித்த ஒரு நிறுவனத்தின் பெற்றோலியக் கழிவே நிலத்தில் பாதுகாப்பின்றி விடப்பட்டு கிணறுகளில் கலந்து விட்டதென குற்றம் சாட்டப்பட அப்போது மாகாணசபையில் அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் அப்பிரச்சினையை முடிந்த அளவு மூடிமறைக்க முயன்றார். 
 
சமூக ஆர்வலர்கள் விடாமல் குற்றம் சாட்ட பொய்யான கருத்துக்களை உருவாக்கி கிணற்று நீரில்,  பாதிக்கப்படும் அளவிற்கு பெற்றோலியம் இல்லை என்று அவர் நிரூபிக்க முயன்றார். நம் இனத்தின்மேல் அதீத அக்கறையிருப்பதாய்க் காட்டி தமிழ்மக்களின் புதிய தலைவராய் தன்னை உருவாக்க முயன்று வரும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் மக்களின் உயிரோடு விளையாடும் இந்தப் பிரச்சினையில் மக்களைப் பற்றிய கவலையின்றி தன் ஆதரவாளரான ஐங்கரநேசனை அவர் தனது அறிக்கைகளால் காக்க முயன்றார். 
 
ஒருபக்கம் நீரில் பெற்றோலியப் பாதிப்பு இல்லை என அமைச்சரும், அது இருக்கிறதென மற்றையோரும் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவிக்க இதில் எவர் கருத்தை ஏற்பது என்று மக்கள் குழம்பி நின்ற நிலையில் இப்பிரச்சினை பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. 
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமையினால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களிற்கு 2 கோடி ரூபா இழப்பீட்டுத் தொகையாக 'நொதேன்பவர்' நிறுவனம் வழங்க வேண்டுமென்று 04.04.2019 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பானது நீதி கோரி நீண்டகாலமாகப் போராடிய சுன்னாகப் பிரதேச மக்களிற்கு கிடைத்த ஓர் வெற்றியாகவே கருதப்படுகின்றது. 
 
குறிப்பாக பல வெகுஜனப் போராட்டங்களை  நடத்திய, வைத்திய கலாநிதி சிவசங்கரை தலைமையாகக் கொண்ட 'தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம்' மற்றும் 'சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம்' ஆகியவற்றோடு யாழ் மருத்துவர் சங்கத்தலைவராக இருந்த வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன், பல அழுத்தங்களிற்கும் மத்தியில் தனி மனிதனாக நின்று நீதிக்காகப் போராடிய சுகாதார பரிசோதகர் ஒருவர் எனப் பலரும் இவ்விடயம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து  நீதிகோரி நின்றதன் பயனே இத் தீர்ப்பு  என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தனது பதவிக்காலத்தில் 'நொதேன்பவர்' நிறுவனத்தினை இக் குற்றச்சாட்டிலிருந்தும் காப்பாற்றும் வகையில் செயற்பட்டார் என்றும், அதனை தான் மாகாண சபையில் ஆதாரங்களுடன் எடுத்துரைக்க முற்பட்ட வேளைகளில் முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன்  அவர்கள் ஐங்கரநேசனை காப்பாற்றும் வகையில் செயற்பட்டார் என்றும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அவர்கள் இவ் இருவர் மீதும் காட்டமான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தார். 
 
தவராசாவின் குற்றச்சாட்டிற்கு பதிலறிக்கை விடுத்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சுன்னாகம் நீர் விவகாரத்தை கையில் எடுத்து  அரசியல் லாபம் பெற தவராசா முயற்சிக்கிறார் என்று அவர் மீது பந்தை உருட்டியிருந்தார். முதலமைச்சரின் கூற்றிற்கு சவால் விடும் முகமாக தவராசா, 'ஊடகங்கள்  முன்பாக ஆதாரங்களுடன் தன்னோடு விவாதிக்க வருமாறு' அறைகூவல்  விடுத்திருக்கின்றார். இன்றுவரை முன்னாள் முதலமைச்சர் அவ் அறைகூவலுக்குப் பதில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
தவராசாவினால் இப்பிரச்சினையில் நேரடியாக குற்றம்சாட்டப்பட்ட ஐங்கரநேசன் பதிலுரைக்காமல் மௌனம்காத்து வருவதும் அவருக்குப் பதிலாய் முன்னாள் முதலமைச்சர்  பதிலுரைத்து வருவதும்  கவனத்தில் கொள்ளத்தக்கது. 
 
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகள் பலரும் இவ்விடயத்தில் விலைபோயிருக்கிறார்கள் என்ற கருத்தினை தவராசா மட்டுமல்ல, இவ்விடயத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுத்துவரும் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களும்  ஆணித்தரமாகக் கூறிவருகின்றார். 
 
இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மல்லாகம் நீதிமன்றினால் 23.01.2017 இல் வழங்கப்பட்ட கட்டளை இவ்விருவரினது கூற்றுக்களையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
 
நீதிமன்றம் அக்கட்டளையில் 'குறித்த வழக்கில் குற்றச் செயல்கள் புரிந்தவர்களைத் தப்ப வைப்பதற்கு பல்வேறு தரப்பட்ட அழுத்தங்களும் அதிகாரிகளுக்கு பிரயோகிக்கப்படுவதாக மன்றிக்கு தோன்றுகின்றது. யாருடையதோ ஒரு மறைகரம் இக்குற்றச் செயலை செய்தவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தென்படுகின்றது. பல அரச அதிகாரிகள் மற்றும் பிழையான அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டவர்கள் ஏதாவது பணங்களையும் பெற்றுக்கொண்டு அவ்வாறு செய்தனரா? என்ற கேள்வியும் மன்றுக்கு தோன்றுகின்றது' என்று கூறியிருக்கிறது. 
 
முன்னாள் முதலமைச்சரினால், வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்ய இளைப்பாறிய இரு மேல் நீதி மன்ற நீதிபதிகளையும் ஒரு சிரேஸ்ட நிர்வாகசேவை அதிகாரியையும் கொண்டு அமைக்கப்பட்ட  விசாரணைக் குழுவின் அறிக்கை. இக்குற்றச்சாட்டினை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைகிறது.  
 
19.05.2017 இல் வெளியான அவ்வறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக ஐங்கரநேசன் மீதும் வடமாகாணசபை மீதும் மக்களிற்கு ஏற்பட்ட அவ நம்பிக்கை நியாயபூர்வமானது என்று  அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டினை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைகிறது. 
 
மேலும் அவ்வறிக்கையில் 
 
 ✱  'நொதேன் பவர் நிறுவனத்தை பாராட்டும் வகையில் செயற்பட்டமை,
 ✱ நிலத்தடி நீரில் ஒயில் கலக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையோடு முரண்பாட்டை ஏற்படுத்தியமை,
 ✱  விவசாய அமைச்சினால் ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழுவின் தகுதியிலும், அவர்களது அறிக்கையின் மீதும் அக்குழுவை நியமித்த அமைச்சர் மீதும், ஒட்டுமொத்தமாக வடமாகாண சபை மீதும் பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியமை எனும் விடயங்கள் கண்டிக்கப்பட்டுள்ளன.
 
 
கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில்  உயர் நீதிமன்றத்தினால் சுன்னாகம் நிலத்தடி நீரில் 'ஒயில்' கலந்தமை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு 'நொதேன்பவர்' நிறுவனமே பொறுப்பு என்றும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  'நொதேன்பவர்' நிறுவனம் நட்டஈடு வழங்க வேண்டுமென்றும்  வழங்கப்பட்ட தீர்ப்பு. இவை யாவற்றிற்கும் சிகரம் வைத்தால்போல் அமைந்துள்ளது   
 
இவ்வழக்கு தெற்கைச்சேர்ந்த 'சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளிற்கான மையத்தின்' தலைவர் ரவீந்திர குணவர்த்தன காரியவாசம் என்பவரினாலேயே தாக்கல் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. நமது தாயகம் சார்ந்த பிரச்சினை ஒன்றிற்கு நீதி கிடைக்க பேரினத்தார் ஒருவரே முயலவேண்டியிருந்தது என்பது பற்றி நம் தலைவர்கள் வெட்கப்படவேண்டும்.  
 
கால ஒழுங்கின் அடிப்படையில், இவ்விடயம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்து நோக்கும்போது, கிடைக்கும் முடிவு இந்த விவகாரம் தொடர்பாக  நீதிமன்றங்களதும், விசாரணைக் கொமிசனதும் முடிவுக்கும் தவராசா மற்றும்  வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் ஆகியோரின் குற்றச்சாட்டுக்களுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தமை புலப்படும்.
 
சுன்னாகம் மின்உற்பத்தி நிலையத்தினால் வெளியிடப்பட்ட கழிவு ஓயிலினால், சூழல் பாதிப்படைவதாகவும், இதனால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது ஓர் நீர் விநியோகத்திட்டத்தினை நிறுத்தி வைத்துள்ளதாகவும், 01.11.2012 இல் நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் அவர்களினால் இப்பிரச்சினை பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தும், அக் கால கட்டத்தில் இவ்விடயம் அதிக முக்கியத்தினைப் பெறவில்லை என அக்கூட்ட அறிக்கையில் இருந்து காணக்கூடியதாக இருக்கின்றது. 
 
'நொதேன்பவர்' நிறுவனம் 2009 டிசம்பர் மாதத்தில்தான் சுன்னாகத்தில் மின் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.    
 
பின்னர் 2014 ஆம் ஆண்டு யூலைமாதம் நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள பல கிணறுகளில் ஒயில் கலப்படம் காணப்படுவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினாலும், பிரதேச செயலாளர்களினாலும் தெரிவிக்கப்பட்டது. 
 
அதனைத் தொடர்ந்து அப்போதைய யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எந்திரி சூரியசேகரம் தலைமையில் சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் உள்ளடக்கியதாக ஒரு 'கொமிற்றி' அமைத்திருந்தார்.
 
21.08.2014 இல் சமர்ப்பித்த அந்தக் 'கொமிற்றி'யின் அறிக்கையில் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் அபாயகரமான அளவில் கலந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
அந்தக் 'கொமிற்றி'யின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரினால்; 2014 செப்ரெம்பர் மாதம் ஓர் அமைச்சுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அதனடிப்படையில்  அமைச்சரவையினால் சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளர் தலைமையில் இவ்விடயத்தை ஆராய்வதற்கு ஓர் உயர்மட்ட 'கொமிற்றி' அமைக்கப்பட்டது. 
 
அந்தக் 'கொமிற்றி'யினால் டிசம்பர் மாதத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையில், சுன்னாகம் நிலத்தடி நீரில் அபாயகரமான அளவில் ஒயில் கலந்திருப்பது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், சுன்னாகத்தில் அமைந்துள்ள மின் பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேறும் ஓயில் நிலத்தடி நீரில் மேலும் கலக்காமல் இருப்பதனை  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும், மத்திய சுற்றாடல் அதிகார சபையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்கல் வேண்டும் என்றும் பல பரிந்துரைகளையும் செய்திருந்தது.
 
இந்நாட்டில் குடிநீர் வழங்கலிற்கு பொறுப்பானவர்கள் என்ற முறையில், தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பிராந்திய ஆய்வு கூடத்தினால் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள பல கிணறுகளின் நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு 2014 செப்டம்பர் மாதத்தில் அவர்களினது ஆய்வறிக்கை வெளியானது.
 
அவ்வறிக்கையில், 226 கிணறுகளின் நீர் மாதிரிகளை தாங்கள் பரிசோதித்ததில் 73 வீதமான நீர் மாதிரிகளில் ஓயிலின் அளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய தர நியமத்திலும் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 2014 செப்டம்பர் மாதத்தில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டதன் விளைவாக 29.01.2015 இல் 'நொதேன் பவர்' நிறுவனத்தின் சுன்னாகம் மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. 
 
யாழ் மருத்துவச்சங்க தலைவராக இருந்த சமுதாய மருத்துவ நிபுணர், வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய சுகாதார அமைச்சு, மக்களினால் முறைப்பாடு செய்யப்பட்ட 30 கிணறுகளில் இருந்து 2015 பெப்ரவரி மாதத்தில் மாதிரிகளை எடுத்து அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பரிசோதித்த போது அனைத்துக் கிணறுகளிலும் மிக அதிக அளவில் எண்ணெய் கலந்திருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், 2014 டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அப்போதைய வடமாகாணசபை விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள், மாகாணசபையில் நீர் மாசடைதல் தொடர்பாக  பிரேரணை ஒன்றினை முன்மொழிந்திருந்தார். 
 
அப்பிரேரணையில்  திரு ஐங்கரநேசன், 'நொதேன் பவர்' நிறுவனம் அதன் ஆரம்பகாலங்களில் சுற்றுச்சூழல் விதிகளை கருத்தில் கொள்ளாது கழிவு டீசலை சுத்திகரிக்காமலேயே வெளியேற்றி வந்தமையை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பதிவுகளிலிருந்து அறியமுடிகின்றது என்றும், அந்நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பாவிக்கப்பட்ட பழைய ரக மின்பிறப்பாக்கியை வருவித்து பயன்படுத்துவதால்,  மத்திய சுற்றாடல் அதிகாரசபை அந்நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதி காலாவதியாகும் போது அதனை நீடிக்க வேண்டாம் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையை  கோரியிருந்தார்.
 
இவ்வாறு பிரேரணையினை முன்மொழிந்த ஐங்கரநேசன் அவர்கள் அன்றிலிருந்து 20 நாட்களின் பின் அதாவது அம்மாதம் 24 ஆம் திகதி இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக 9 பேர் அடங்கிய ஒரு நிபுணர் குழுவினையும் அமைத்திருந்தார். 
 
அவ் நிபுணர் குழு தொடர்பாக ஐங்கரநேசன் அவர்கள் மாகாணசபை அமர்வில் உரையாற்றும் போது, முதலமைச்சர் அவர்களின் பணிப்பின் பெயரில் நிலத்தடி நீர் எண்ணெய் மாசடைதலை ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவ் எண்ணெய் மாசுக்கு சுன்னாகம் அனல் மின் நிலையம் தவிர்ந்த வேறு காரணிகளும் காரணமா என்பது தொடர்பிலும் நிபுணர் குழு கவனம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இருபது நாட்களின் முன் தன்னால் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் 'நொதேர்ன்பவர்' நிறுவனத்தைக் குற்றஞ்சாட்டியிருந்த ஐங்கரநேசன் அவர்கள், இந்த இருபது  நாட்களிடைவெளியில் அந்நிறுவனத்தை காவல் செய்வது போல் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அத்தோடு சுற்றுச் சூழல் மற்றும் குடிநீர் தொடர்பான விடயங்கள் மாகாணசபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்கள் அல்ல என்பதை அறியாது மேற்படி விடயத்தை ஐங்கரநேசன் கூறியிருந்தமையும் விடயம் தெரிந்தவர்களை வியக்க வைத்தது.  
 
2015 மார்ச் மாதம் வெளியான அந்நிபுணர்குழுவின் இடைக்கால அறிக்கையில், தங்களால் பரிசோதிக்கப்பட்ட எந்தவொரு நீர் மாதிரியிலும் BTEX இன் அளவுகள் சர்வதேச நியம அளவுக்கு மேற்பட்டிருக்கவில்லை எனவும் மாறாக 85 வீதமான மாதிரிகளில் அது முற்றாக இருக்கவில்லை எனவும் 15 வீதமான மாதிரிகளில் 200 மடங்குக்குக் குறைவான அளவிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இங்கு கவனத்தில் கொள்ளவே வேண்டியது 'நொதேர்ன் பவர்' நிறுவனத்தால் பாவிக்கப்பட்ட Heavy Diesel என்னும் 'ஓயில்' தான் சுன்னாகம் கிணறுகளில்  காணப்பட்டதாக மக்களால் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களே இதற்கு சான்று பகன்றன.
 
இந்நிலையில் BTEX என்ற பதார்த்தம் ஆராயப்பட்ட நீரில் இல்லை என்று கூறுவதற்கும் சுன்னாகம் மக்களால் கூறப்பட ஒயிலுக்கும் தொடர்பு உண்டா? என்பதை ஆராய்தலும் அவசியமாகிறது. 
 
BTEX என்பது மசகு எண்ணெயில் காணப்படும் நான்கு இரசாயனப் பதார்த்தங்களிற்கான பொதுப் பெயராகும். அப்பதார்த்தங்கள் Benzene, Toluene, Ethylbenzene, Xylene   ஆகியனவாகும்.            
 
மசகு எண்ணெய் வடிகட்டப்படும் போது, 80-138 பாகை வெப்பநிலையில் BTEX பதார்த்தங்களும, 150 பாகையில் பெற்றோலும், 200 பாகையில் மண்எண்ணெயும், 300 பாகையில் டீசலும், 370 பாகையில் Heavy Diesel உம் வடிகட்டப்படுகின்றன. இவ்வாறாக வடிகட்டப்படும் Heavy Diesel  இல் நிபுணர் குழுவினால் குறிப்பிடப்பட்ட BTEX பதார்த்தங்கள் இருப்பதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை என்பது மேலே காட்டப்பட்ட இப்பதார்த்தங்களின் ஆவியாகும் வெப்ப நிலைகளிலிருந்து தெளிவாகிறது,
 
ஆதலினால், ஐங்கரநேசனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழவின் இந்த இடைக்கால அறிக்கையினை, இப்பிரச்சனை பற்றிய முழு விடயங்களையும்  திசைதிருப்பும் ஓர் முயற்சியாகவே பார்க்க   வேண்டியுள்ளது.
 
அவ்வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியான அமைச்சர் ஐங்கரநேசனால் அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் இறுதி அறிக்கையில் சுன்னாகம் பகுதியில் கிணற்று நீர் பெற்றோலியப் பொருட்களினாலோ அல்லது பார உலோகங்களினாலோ மாசடைந்துள்ளன என்பதற்கான சான்றுகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
மேலும்; தங்களது பரிசோதனை முடிவுகளிலிருந்து நீர் மாதிரிகளில் காணப்பட்ட ஓயிலானது (FOG–Fuel, Oil, Grease) பெற்றோலியப் பொருட்களுடன் சம்பந்தமில்லாத வேறு மூலகங்களிலிருந்து வந்திருக்கலாம் என்பது தெளிவாகின்றதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அத்துடன் அவ்விறுதி அறிக்கையில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பரிசோதனைப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை பிழையான கணிப்பீடுகளின் அடிப்படையிலும் பிழையான தரநிர்ணய நியமத்தின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அவ்வறிக்கை தவறானது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
நீர்வழங்கல் அதிகார சபையின் அறிக்கை கிணற்றுநீரில் FOG இன் அளவு 0.2 மில்லிக்கிராம் நியமத்திற்கு  குறைவாகவே இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த நியமம் பிழை எனவும்,  2 மில்லிக்கிராம் அளவே  நியமம் எனவும் ஆதலினால் தேசிய நீர்வழங்கல் சபையின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த நிபுணர் குழுவினர் தம் விவாதத்தையும் முன்வைத்திருந்தனர். 
 
மல்லாகம் நீதிமன்ற கட்டளையிலும் அண்மையில் வெளியான உயர் நீதிமன்றின் தீர்ப்பிலும் 0.2 மில்லிகிராம் என்பதே நியம அளவு என்பதனை ஆதாரபூர்வமாக ஏற்றே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும் ஐங்கரநேசனால் நியமிக்கப்பட்ட அக்குழுவின்  இறுதி அறிக்கையில், அவுஸ்திரேலியா புலம்பெயர் தமிழர்களினால்  சுன்னாகப் பிரதேசத்தில் இருந்து பன்னிரண்டு கிணறுகளின் நீர் மாதிரிகள் வெளிநாட்டிற்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்ப்பட்டதில் அவற்றில் ஒயில் மாசில்லை என அவர்களினது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவ் அவுஸ்திரேலியா புலம்பெயர் தமிழர்களின் அறிக்கையோ, அல்லது அவர்கள் தொடர்பான விபரங்களோ இதுவரை எவராலும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. நம் மக்களின் உயிரோடு விளையாடும் இந்த விளையாட்டிற்கு புலம்பெயர் தமிழர்களையும் பயன்படுத்த    நினைத்தமை வெட்கக்கேடான விடயம்.  
 
ஆனால் உயர் நீதின்ற வழக்கில் 'நொதேர்ன் பவர்' நிறுவனம்  தாங்கள் நிலத்தடி நீரில் ஒயில் கலந்தமைக்கு பொறுப்பல்ல என்பதற்கு சான்றாக கொடுத்த ஆவணங்களில் ஐங்கரநேசன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையும், ஐங்கரநேசன் அவர்களின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பு ஒன்றினால்   வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையும் நீதிமன்றில்          சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 
 
இவ்விரு ஆவணங்களும் வெளிப்படையான ஆவணங்களாக    ஐங்கரநேசன் அவர்களினால் வெளியிடப்படாத நிலையில் எவ்வாறு 'நொதேர்ன் பவர்' நிறுவனத்திற்கு அவை கிடைக்கப்பெற்றன என்பதும் கேள்விக்குரிய விடயமாகின்றது. மாகாணசபை உறுப்பினர்களுக்கு கூட அவை கொடுக்கப்படவில்லை  என அறியக் கிடைக்கின்றது.
மேற்படி தரவுகள் தவராசா மற்றும்  வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளிற்கு வலுச்சேர்ப்பதாகவே அமைகின்றன. 
 
மேற்படி தரவுகள் அல்லது அது பகுப்பாய்வு செய்யப்பட்ட முறைகள் தவறென்று ஐங்கரநேசன் அவர்களோ அல்லது முன்னாள் முதலமைச்சரோ கருதினால் அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்துக்காட்ட வேண்டியது அவர்களின் பொறுப்புதான் என்பதில்  எவ்வித ஐயமும்மில்லை.
 
தண்ணீர் என்பது உயிர்களின் அடிப்படை ஆதாரங்களில் ஒன்று. இயற்கை நீர் ஆதாரங்கள் ஏதுமின்றி, தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் யாழில், சுய நலத்திற்காக தம் மக்களின் நலத்தை மறந்து பெரிய நிறுவனங்களிற்காக வால் பிடித்து நிற்கும் இவர்கள்தாம் எம் இனத்தின் மாற்றுத்தலைமையாகப் போகிறார்களாம் உருப்பட்டமாதிரிதான்.
 
✱✱✱
 
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.