ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
 
ள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன்.
என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை.
நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது.
இயக்கமே இல்லாமல் சோர்ந்து கிடந்த நம் தலைவர்களிடம்,
உள்ளுராட்சித் தேர்தலின் வருகை புத்துயிர்ப்பை ஊட்டியிருக்கிறது.
அப்புத்துயிர்ப்பு, இனத்தின் நன்மை நோக்கியதாய்த் தெரியவில்லை.
தலைவர்களின் நன்மை நோக்கியதாகவே தெரிகிறது.
உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கலில்,
நம் கூட்டமைப்புத் தலைவர்களின் ஒற்றுமை (?),
மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அவ் ஒற்றுமையின் ஆணிவேரை அசைப்பவர்கள்,
அனுபவமும் அங்கீகாரமும் பெற்ற தமிழரசுக்கட்சியினர் என்பதுவே,
அனைவரையும் அதிரச் செய்யும் செய்தியாம்!
 



ஓரிரு வாரங்களுக்கு முன்பு கூட்டமைப்பின் எதிராளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து,
மாற்றுத்தலைமை ஒன்றை உருவாக்கப்போகிறார்கள் என்ற நிலை உருவானது.
வடமாகாண முதலமைச்சரும் அவர் சார்ந்த தமிழ்மக்கள் பேரவையினரும்,
அவ் உருவாக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
அவர்தம் முயற்சி கூட்டமைப்பின் உடைப்பிற்கு,
மறைமுகமாய் வெடிகொளுத்திப் போட்ட செயலாகவே கருதப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் செயற்பாடால் நொந்து போயிருந்த,
கூட்டமைப்பினுள் இடம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகியவற்றோடு,
கஜேந்திரகுமாரின் கட்சியும் இணைந்து முதலமைச்சரின் ஆசியைப் பெற்று,
மாற்றுத்தலைமையின் உருவாக்கம் நோக்கி செயற்படத் தொடங்கின.
இச்செயற்பாடு தமிழரசுக்கட்சியின் வயிற்றில் புளியைக் கரைத்தமை,
அவர்களின் பதற்றச் செயற்பாட்டில் வெளிப்படையாய்த் தெரிந்தது.


 
இசைவிழா 2017
ஈழத்தில் ஓர் மார்கழி உற்சவம். வரும் டிசம்பர் 30 முதல்
Posted by Kambavarithy Ilankai Jeyaraj on Wednesday, 20 December 2017
இன்று இன உரிமைப் போராளியாய் மக்களால் அங்கீகரிக்கப்படத் தொடங்கியிருக்கும்,
முதலமைச்சரின் ஆதரவோடு இக் கூட்டணி மாற்றுத்தலைமையாய்க் களம் இறங்கியிருந்தால்,
நிச்சயம் அது தமிழரசுக்கட்சியின் ஆணிவேரைச் சிறிதேனும் அசைத்தே இருக்கும்.
தமிழரசுக்கட்சியினரே அந்த மாற்றுத்தலைமை உருவாக்க ஆயத்தம் கண்டு,
குழப்பமுற்றமையே மேற் கருத்துக்காம் சான்று.



புற்றுக்குள்ளிருந்து இடையிடையே வெளியே தலைநீட்டும் நாகம் போல்,
பிரச்சினைகளுக்கான காரணங்களெல்லாம் நிகழும் போது,
எதுவும் பேசாமல் மௌனியாய் இருந்துவிட்டு,
பிரச்சினைகள் காரியமாய் வெடிக்கத் தலைப்படுகையில் மட்டும்,
தன்னைத் தலைவராய் இனங்காட்டி வெளிப்படுவதை வழக்கமாய்க் கொண்ட,
கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தர் இம்முறையும்,
உடைந்தது கூட்டமைப்பு எனும் ஊக நிலையில் திடீரென வெளிப்பட்டு,
கூட்டமைப்பின் மாற்றணித் தலைவர்களோடு கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை ஏற்று,
புளொட்டும் ரெலோவும் கூட்டமைப்பை விட்டுப் பிரிவதில்லை எனவும்,
இணைந்தே தேர்தலுக்கு முகம் கொடுப்பது எனவும் முடிவு செய்தன.



இப்பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பான சூழ்நிலையில்,
தமிழரசுக்கட்சி தான் தனிக்கப்போகிறது எனும் நிலையை உணர்ந்து,
சில மாற்று ஏற்பாடுகளை இரகசியமாய் செய்யத் தொடங்கியது.
தம்மை விட்டுப் பிரிந்து சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப் அணித்தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு,
‘செக்’ வைக்க நினைந்து,
இந்தியாவில் ஒதுங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் தலைமையில் இயங்கும்,
ஈ.பி.ஆர்.எல்.எப் அணியோடு கூட்டுவைக்க முடிவு செய்து,
வேகவேகமாக அதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கியது அக்கட்சி.
ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என,
வரதராஜப் பெருமாளுக்கு அவர்கள் வாக்குக் கொடுத்ததாய்,
நம்பகரமான செய்திகள் வெளிவந்தன.



முதலமைச்சர், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியோடு,
புளொட்டும் ரெலோவும் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக,
நடந்த பேச்சுவார்த்தையில் தம் வழமையான மிடுக்கு நிலைவிட்டு இறங்கி வந்து,
மாற்றணியினரையும் மதித்து பேசத் தொடங்கிய சம்பந்தர்,
அவர்கள் அங்கீகரிக்கும் வண்ணம் பிரச்சினைக்குச் சமரச உடன்பாடு கண்டார்.
அதனால் கூட்டமைப்புக்குள் நிகழவிருந்த பெரும் உடைப்புத் தவிர்க்கப்பட்டது.



இந்நிலையில் திடீரென ஓர் மாற்றம் நிகழ்ந்தது.
கஜேந்திரகுமார் அணியோடு சேர்வதாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் யாரும் எதிர்பாராத வண்ணம்,
ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொண்டு,
அவ் அணிக்கு வருமாறு ரெலோவுக்கும் புளொட்டுக்கும் அழைப்பு விடுத்தார்.
சுரேஷ் பிரேமச்சந்திரனின் இம்மாற்றத்திற்கான காரணத்தை உணரமுடிந்தது.



ஆனந்த சங்கரியோ தன் முதுமை காராணமாக,
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை,
தன்னோடு இணைபவர்களின் கைகளில் தரத் தயாராயிருக்கிறார்.
கஜேந்திரகுமாரின் அணியில் இணைந்திருந்தாலோ,
எப்போதும் தலைமை நிலை தனக்குக் கிடைக்கப் போவதில்லை,
ஆனந்த சங்கரி தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரத் தயாராயிருக்கும் தலைமையே,
தனக்கும் தன் அணிக்கும் உகந்ததென முடிவு செய்ததே,
சுரேஷின் இம்மாற்றத்திற்கான காரணமாம்.
யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென நிகழ்ந்த இம்மாற்றத்தால்,
கஜேந்திரகுமாரின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலையாயிற்று.



இரண்டாகப் போகிறது தமிழ்த்தலைமை என்ற நிலையில்,
அது மூன்றாகிப் பலரையும் முழிபிதுங்க வைத்தது.
மாற்றுத் தலைமையை வழிமொழிந்த தமிழ்மக்கள் பேரவையும்,
இம்மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றே நினைக்கவேண்டியிருக்கிறது.
அரசியலில் இறங்கமாட்டோம், மக்களை வழிப்படுத்துவோம் என்று சொல்லி  நின்ற அவர்கள்.
இம் மாற்றம் நிகழ்ந்ததும் இன்றுவரை அதுபற்றி ஏதும் பேசாமலிருப்பதே அதற்காம் சாட்சியாம்.
தாம் செய்யும் அரசியல் சூழ்ச்சியால்,
தலைமைக் கனி தானாகத் தாம் கைகாட்டுவோர் கையில் வந்து விழும் என,
அனுபவமின்மையால் நினைந்திருந்த அவர்கள்,
தம் கருத்திற்கு எதிராய் நிகழ்ந்த அரசியல் சூழ்ச்சியின் அதிர்வில் அடங்கிப்போனார்கள்.



முதலமைச்சர் பின்னின்றாலும் தனியே நிற்கும் கஜேந்திரகுமாரை,
தமிழ்மக்கள் முழுமையாய் ஏற்கமாட்டார்கள் எனும் ஊகமும்,
ஏற்கனவே தமிழ்மக்களால் ஒதுக்கப்பட்ட ஆனந்த சங்கரி, சுரேஷ் ஆகியோரின் கூட்டு,
தம்மை பெரிய அளவில் பாதிக்கப்போவதில்லை எனும் எண்ணமும்,
தமிழரசுக்கட்சியினரை பழையபடி உற்சாக நிலைக்கு கொண்டுவந்து உசுப்பிவிட்டது.
எதிராளிகள் உடைந்ததால் வந்த சூழ்நிலை,
தமக்குச் சார்பாய் அமைந்ததை அறிந்து கொண்ட அவர்கள்,
மீண்டும் முருங்கை மரத்தில் ஏறத்தொடங்கினார்கள்.
பணிந்து அழைத்து புளொட்டுக்கும் ரெலோவுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை,
நிமிடத்தில் பறக்கவிட்டார்கள்.
வா என்று அழைத்து வரவேற்ற வரதராஜப்பெருமாளை,
ஆரென்று கேட்டு அலட்சியம் செய்தார்கள்.
தமிழரசுக்கட்சியை நம்பி கூட்டமைப்போடு இணைய நினைந்தோர் நிலை,
திரிசங்கு சொர்க்க நிலையாயிற்று!



வஞ்சகமும் சூதும் ராஜதந்திரம் என்ற பெயரில் அரசியலில் அங்கீகரிக்கப்படுவது உண்மையே.
ஆனால் அத்தகு அரசியலை அரங்கேற்றும் நிலையில்,
இன்று தமிழினம் இல்லை என்பதை ஏனோ தமிழரசுக்கட்சியினர் உணர மறுக்கிறார்கள்.
அவர்களது ராஜதந்திரத்தின் பின்னணியில்,
இன எழுச்சி பற்றிய அக்கறையோ, இன ஒற்றுமை பற்றிய முயற்சியோ,
கிஞ்சித்தும் இல்லை என்பது வெளிப்படையாய்த் தெரிகிறது.
தமதும் தம் கட்சியினதும் பதவி நோக்கிய வஞ்சனைச் செயற்பாட்டையே,
ராஜதந்திரமாய் அவர்கள் அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது,
மனவேதனைக்குரிய செய்தியாம்.
இனத்தைக் கூறுபோடும் இவர்தம் இராஜதந்திரம் நிச்சயம் வெறுப்புக்குரியதேயாம்!



இந்த வஞ்சனைச் செயற்பாடுகளின் சூத்திரதாரி யார்? என்ற கேள்விக்கு,
பலரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை நோக்கியே தமது விரலை நீட்டுகிறார்கள்.
சுமந்திரனது ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் அங்கீகரிப்பவன் நான்.
இன்றைய கூட்டமைப்புத் தலைவர்களுள், நம் இனநலம் நோக்கிய செயற்பாடுகளை,
உலக நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கக் கூடியவர் அவர்தான் என்பது என் கணிப்பாயிருந்தது.
இருந்தது என்ன? இப்போதும் இருக்கிறது!ஆனால், அந்த மதிப்பை
இன ஒற்றுமையைச் சிதைக்கும் வகையிலான சுமந்திரனது நடுநிலையற்ற செயற்பாடுகள்,
நிச்சயம்  பாதிக்கவே செய்கின்றன.
அதுநோக்கி மக்கள் சார்பாக சுமந்திரனுக்குச் சில சொல்லவேண்டியிருக்கிறது.
அதற்கு முன்பாக சில வார்த்தைகள்.



போரின் பின்பாக தமிழ்த் தலைமைகளுக்குள் இடம்பிடித்த இருவர்,
பல அதிர்வுகளை இன்று தமிழ்மக்கள் மத்தியில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவ் அதிர்வுகள் உவக்கும்படியான அதிர்வுகள் அன்றாம்.
அவ்விருவருள் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
மற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
இவ்விருவரும், போர்க்காலத்தில் மக்களோடு இணைந்திருக்காமல்,
சுமூக சூழ்நிலை ஏற்பட்டபின்பு தலைவர் சம்பந்தனால்,
அரசியலுக்குள் வலிந்து இழுத்து வரப்பட்டவர்கள்.
2009 இல் கஜேந்திரகுமார் கட்சியைவிட்டுப் பிரிய,
கட்சிக்கான சட்ட ஆலோசனைகளுக்காக தேசியப்பட்டியலில் பதவி கொடுத்து,
சுமந்திரனைக் கட்சிக்குள் அழைத்து வந்தார் சம்பந்தர்.
அதுபோலவே தம்மோடு சேர்ந்திருந்த மாற்றணியினரை அடக்க,
இவரது அறிவும் ஆளுமையும் மக்களிடம் அவர் பெற்று வைத்திருந்த நன் மதிப்பும்
உதவும் என நினைந்து முன்னவரைப் போலவே வீடு தேடிச் சென்று முதலமைச்சர் பதவி கொடுத்து,
விக்னேஸ்வரனையும் அவரே வலிந்து அழைத்து வந்தார்.
இராஜதந்திரமாய் நினைந்து சம்பந்தர் இயற்றிய இவ்விரு செயல்களும்,
இன்று படுதோல்வியில் முடிந்திருக்கின்றன.
பட்டறிவு இல்லாத இவ்விருவரது பலமும் இன்று எதிர்மiறாய்ச் செயற்பட்டு,
தமிழினத்தையும் கட்சியையும் பாதாளம் நோக்கி நகர்த்துகிறது.



பலதரமாய் முதலமைச்சரின் செயற்பாடுகள் பற்றி விமர்சித்து விட்டபடியால்,
அவர் பற்றிய விமர்சனங்களைத் தவிர்த்து,
சுமந்திரன் பற்றிய கருத்துக்களை மட்டும்  இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.
ஆரம்பம் தொட்டு கூட்டமைப்பில் இணைந்த மாற்றணியினரை,
சுமந்திரன் துரும்பாக நினைத்தே செயற்பட்டார்.
அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் மூன்றாம் நிலைப்பதவியில் தான் இருந்து கொண்டு,
தானே முதல் நிலைப்பதவியாளர் போல அகங்காரத்தோடு செயற்பட்டு வந்தார்.
முதுமையின் எல்லையில் நின்ற சம்பந்தருக்கு சுமந்திரனின் ஆதரவு தேவையாயிற்று.
அதனால் சுமந்திரன் முழுச் சுதந்திரத்தோடு கட்சிக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டார்.
பலரும் சுமந்திரனை சம்பந்தனின் கைத்தடி என்றார்கள்.
இன்றைய நிலையில் சம்பந்தன் கைத்தடியை இயக்குகிறாரா?
கைத்தடி சம்பந்தனை இயக்குகிறதா? எனும் கேள்வி,
தமிழ்மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது,
பலகட்சிகள் ஒன்றுபட்டு அமைந்த ஓர் அமைப்பு.
புலிகளே இவ் அமைப்பின் உருவாக்கத்திற்குக் காரணமாய் இருந்தார்கள்.
இன்று சம்பந்தன் மறுத்தாலும் அவ் உண்மையை அனைவரும் அறிவார்கள்.
புலிகள் இருக்கும் வரை அமைதியாய் அடங்கியிருந்த கூட்டமைப்புள் இணைந்த கட்சிகள்,
புலிகளின் மறைவோடு நவக்கிரகங்களாய் ஒருவரோடொருவர் முரண்படத் தொடங்கினார்கள்.
தாம் தமிழின எழுச்சிக்காய் பாடுபடப்போவதாய் வெளிப்படப் பேசிய அவர்களின் பேச்சில்,
சத்தியம் துளியும் இருக்கவில்லை.
தமிழரசுக்கட்சி உட்பட கூட்டமைப்புள் ஒன்றுபட்டிருந்த அனைத்துக் கட்சிகளுமே,
போரின் முடிவின் பின் தத்தம் சுயநலம் நோக்கியே செயற்பட்டு வந்தன.
கூட்டமைப்புள் ஒன்றிணைந்திருந்த அனைவர்க்கும்,
மேற்படி கூட்டு ஏதோ வகையில் தேவையாக இருந்தது.
அதனால்த்தான் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும் பிரிய மனமின்றி,
இன்று வரை அவர்கள் இணைந்திருக்கின்றனர்.
அதுதவிர இனத்தின் எழுச்சியோ தமிழ் மக்களின் நல்வாழ்வோ,
நிச்சயம் அவர்களது மூலநோக்கமாய் இருக்கவில்லை என்பது சர்வநிச்சயம்.



நீண்ட நாள் மக்கள் மத்தியில் பதிந்த கட்சி என்ற தகுதியையும்,
ஜனநாயகப் பாதையைவிட்டு விலகாதவர்கள் என்ற தகுதியையும்,
தமக்கான தனித்தகுதிகளாய்க் கொண்டு,
மக்கள் ஆதரவு தமக்கே எனும் உறுதியில் போர் முடிவின் பின்பாக,
தன்னிச்சையாய் மாற்றணியினரை அலட்சியம் செய்து செயற்படத் தொடங்கியது தமிழரசுக்கட்சி.
அக்கைங்கரியத்தில் தன் முகத்தை முத்திரையாய்ப் பதித்தவர் சுமந்திரனேயாம்!
மற்றத் தலைவர்களுக்கு இல்லாத சட்ட அறிவு, உலகத் தொடர்பு போன்ற,
தன் தனித்தகுதிகளை வைத்து சம்பந்தனின் தேரோட்டியாய் அமர்ந்த சுமந்திரன்,
சிறிது காலம் சம்பந்தரின் வழிகாட்டலில் தேரை ஓட்டி,
பின்னாளில் தன் இஷ்டத்திற்கு அத்தேரை ஓட்டத்தொடங்கினர்.
அவ் ஓட்டம்  சம்பந்தரின் உடன்பாட்டோடு நிகழ்ந்ததா? இல்லையா? என்பது,
இன்றுவரை பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.



கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் பதவி வகிக்கிறார்.
தமிழரசுக்கட்சியின் தலைவராக மாவை தலைமை வகிக்கிறார்.
ஆனால் இவ்விரு கட்சிகள் சார்பான முடிவுகள் எடுக்கப்படுகையில்,
இவ்விருவரையும் வெறும் பொம்மைகளாக்கி சுமந்திரனே முடிவுகள் எடுப்பதைக் காணமுடிந்தது.
போகப் போக கட்சிக்குள் சுமந்திரனின் சர்வாதிகாரம் பகிரங்கமாய் விரியத் தொடங்கியது.
பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கையிலும்,
கட்சி சார்ந்த பதவிகளை நிர்ணயிக்கையிலும்,
கட்சித் தலைவர்களுடனான உடன்பாடுகளை எட்டுகையிலும்,
சுமந்திரன் சர்வாதிகாரியாகவே நடந்து கொண்டார்.
‘நான் சொன்னால் நீங்கள் கேட்டுக் கொள்ளவேண்டியதுதான்’ என்பதான தொனி,
அவரது அண்மைக்கால செயற்பாடுகள் அனைத்திலும் மறைமுகமாய் ஒலித்தது உண்மையிலும் உண்மை.
தன் குரல், ஓர் ஒப்புக்குத்தானும் தாம் சார்ந்த கட்சியினதோ கூட்டமைப்பினதோ தலைவர்களது குரலாய்,
ஒலிக்கவேண்டும் எனும் எண்ணம் சுமந்திரனிடம் கிஞ்சித்தும் இருக்கவில்லை.
மொத்தத்தில சந்தர்ப்பம் தந்த பலத்தாலும், சம்பந்தர் தந்த இடத்தாலும்,
சுமந்திரன் ஜனநாயகப் பாஷையை மறந்து போனார் என்பது மனவருத்தத்திற்குரிய உண்மை.



நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே ஆயிரம் குழப்பங்கள்.
அப்போது சுமந்திரன் அடைந்த வெற்றிகூட பலராலும் ஐயத்துடனேயே பார்க்கப்பட்டது.
தேசியப்பட்டியல் எம்.பிகளை நியமிக்கும் விடயத்தில் தன்னிச்சையாய் அவர் முடிவுகளை எடுத்தார்.
அதனால் ஒன்றுபட்ட கட்சித் தலைமைகளின் மனவெறுப்பை ஏகமாய்ச் சம்பாதித்துக் கொண்டார்.
மாற்றுக் கட்சிகளுக்குள் மட்டுமன்றி தான் சார்ந்த தமிழரசுக்கட்சிக்குள்ளும்,
அவரது முடிவுகள் பலரையும் வெறுப்படையச் செய்தன.
சாவகச்சேரி தொகுதியில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று,
ஐயத்திற்கிடமான முறையில் தோல்வியைச் சந்தித்த,
தமிழரசுக்கட்சியின் வேட்பாளரான அருந்தவபாலன் அவர்களது தோல்வி,
அத்தொகுதியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
மக்கள் ஆதரவு பெற்ற அவரை நியமன எம்.பியாய் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று,
இளைஞர் பலர் கொந்தளிக்கத் தொடங்கினர்.
அப்போது அவ் இளைஞர்களைச் சந்தித்த சுமந்திரன்(தலைவரோ, செயலாளரோ இன்றி),
அப்பதவிக்காலம் பகிர்ந்தளிக்கப்படும் எனப் பலர் அறியப் பகிரங்கமாய் அறிவித்து,
அக்கொந்தளிப்பை அடக்கினார்.
ஆனால் அவரது வழமையான வாக்குறுதிகளைப் போலவே,
இவ்வாக்குறுதியும் இன்றுவரை நிஜமாகவில்லை.



இன்று அதே தொகுதியில் மீண்டும் குழப்பம்!
கட்சியின் தொகுதி அமைப்பாளரான அருந்தவபாலன் அவர்களும் மற்றும் சிலருமாக,
இரவிரவாக தமிழரசுக்கட்சித் தலைவரின் வீட்டிலிருந்து தயாரித்த வேட்பாளர் பட்டியலை,
மறுநாளே தலைவர் மாவை, உடன் இருக்கத்தக்கதாக,
சுமந்திரனின் ஆதரவு பெற்றவர் எனும் ஓரே தகுதியைக் கொண்டு,
மாகாணசபை உறுப்பினர் சயந்தன், தன் இஷ்டப்படி மாற்றி அமைத்தார் என்கிறார்கள்.
ஏனென்று கேட்கும் அதிகாரம் இழந்த நிலையில் தலைவராக மாவை பொம்மையாய் இருக்க,
அங்கு சுமந்திரனின் அடிப்பொடியின் முடிவே முடிவாயிற்றாம்.
அக்குளறுபடிகளின் போது தலைவர்கள் கைகலப்புவரை சென்றதான காட்சிகளை,
இணையத்தளங்களும் ஊடகங்களும் பகிரங்கப்படுத்தி பறைசாற்றின.



இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை.
யாழ். மாநகரசபை மேயர் யார்? என்பதில் பெரும் குழப்பம்  நிகழத் தொடங்கியிருக்கிறது.
ஓர் ஊடகவியலாளராக போர்க்காலத்தில் தன் உயிரையும் மதியாது செயற்பட்ட,
உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனை,
அப்பதவியை ஏற்கும்படி மாகாணசபை அவைத் தலைவரூடாக,
கட்சித்தலைவர் மாவை அணுகியிருந்தாராம்.
ஆனால் திடீரென சுமந்திரன், அப்பதவி மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட்டுக்கே என அறிவிக்க,
மீண்டும் கட்சிக்குள் குழப்பம் தொடங்கியிருக்கிறது.
இந்த விடயத்திலும் சுமந்திரன் கூட்டுத் தலைமைக்கட்சிகளுடனோ,
தன் கட்சியின் உயர் தலைவர்களுடனோ எவ்வித ஆலோசனைகளும் நடத்தியதாய்த் தெரியவில்லை.
சுமந்திரன் வெளியிடும் இவ் அறிவிப்பு அவரது சர்வாதிகாரத்தின் சாட்சியாய் வெளிவந்திருக்கிறது.
கூட்டுக்கட்சியினரின்  தலைமைகளைத்தான் விடுங்கள்,
அவர் சார்ந்த தமிழரசுக்கட்சித் தலைமையே சுமந்திரனின் அறிவித்தலைக் கேட்டு அதிர்ந்து நிற்கிறது.
நேற்றைய பத்திரிகைகளில் ‘ஆர்னோல்ட்டே மேயர்’ என்ற சுமந்திரனின் அறிவிப்பும்,
‘அச்செய்தி வெறும் வதந்தியே!’ என்பதான தமிழரசுக்கட்சித் தலைவர் மாவையினதும்,
அக்கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களதும் மறுப்பு அறிவிப்புகளும்,
அருகருகில் பத்திரிகையில் வெளியிடப்பட்டு பாரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.



பேரினம் தந்த அழுத்தத்தால் ஜாதி, மதம், பிரதேசம் என்ற பிரிவுகளைக் கடந்து,
ஓரளவுக்கேனும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழினத்தின் ஒருமைப்பாட்டின் வேரைக் கூட,
சுமந்திரன் அசைக்க முயற்சிக்கிறாரோ? என ஐயுற வேண்டியிருக்கிறது.
ஏலவே ஆர்னோல்டை மாகாண அமைச்சராக்க சுமந்திரன் பட்டபாட்டை பாரறியும்.
இப்போது மேயர் பதவியில் அவரை அமர வைக்க,
கட்சித்தலைமைகளை மீறிச் செயற்படும் சுமந்திரனின் வேகம் அறிவு சார்ந்ததாய்த் தெரியவில்லை.
கிறிஸ்தவரான சுமந்திரன், தன் சமயம் சார்ந்த ஒருவரை முக்கிய பதவியில் அமர்த்த முயற்சிக்கும் செயல்,
அவரது நடுவுநிலைமையை ஐயுறவைக்கவே செய்கிறது.



தமது முடிவுக்கு கிறிஸ்தவ மதத் தலைவர்களின் ஆதரவு இருப்பதாய்,
சுமந்திரன் ஒருசிலரிடம் உரைத்ததாய்ச் செய்திகள் காதில் விழுகின்றன.
தமிழர் என்ற ஒருமைப்பாட்டினுள் மத அடையாளங்களைக் கொண்டு வந்து,
பிரிவுகளை ஏற்படுத்த முயல்வது மிகப் பெரும் தவறாகும்.
ஏலவே உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினையில்,
சுமந்திரன் கிறிஸ்தவ மதப் பிரதிநிதியாய் பலரால் கணிக்கப்பட்டார்.
இப்பொழுது அப்பழியை எதிராளர்கள் மீண்டும் அழுத்தி உரைக்க,
சுமந்திரன் வழி சமைப்பது நிச்சயம் அறிவுடமை ஆகாது.



பதவி நிர்ணயங்களின் போது குறித்த மதத் தலைவர்களின் ஆதரவு பற்றி பேசுவதே குற்றமாகும்.
இப்படித்தான் முன்பு ஒற்றுமையாய் இருந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை,
மதத்தையும் மொழியையும் காரணம் காட்டி பகையூட்டிப் பிரித்தார்கள் வஞ்சகர்கள்.
பதவி நிர்ணயத்தில் தலைவர்களை மீறிய சுமந்திரனின் இந்த சர்வாதிகார முயற்சிக்கு,
மதச்சாயம் பூசப்பட்டு மாற்றுச் சமயங்கள் கொந்தளிக்கத் தொடங்குமாயின்,
அது தமிழினத்தின் ஒருமைப்பாட்டை வீணே குலைத்து,
நம் இனத்தை அடக்க நினைக்கும் எதிரிகளுக்கு,
செங்கம்பளம் விரித்து வரவேற்பளித்துவிடும் என்பது நிச்சயம்.



ஓர் ஜனநாயக அமைப்புக்குள் எல்லா முக்கிய இடங்களிலும்,
தன் ஆதரவாளர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என நினைப்பது ஜனநாயகத்தன்மை ஆகாது.
தகுதியையும் ஆற்றலையும் உண்மைத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டே,
பதவிகளை நிர்ணயம் செய்தல் வேண்டும்.
அங்ஙனமன்றி இவர் என்னவர் இவர் மாற்றவர் எனும் கருத்தோடு பதவிகள் நிர்ணயம் செய்யப்பட்டால்,
கட்சியின் உடைவு தவிர்க்க முடியாததாகிவிடும்.
தமது ஆதரவாளர்களின் முறையற்ற செயற்பாடுகளை,
தமது அன்பர்கள் என்பதற்காய் சுமந்திரன் அங்கீகரிக்கத் தலைப்பட்டால்,
அது கட்சி ஒழுங்கை சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிடும்.
இப்பிழையான வழிகளை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கும்,
சுமந்திரனின் செயற்பாடுகளை மனதாரக் கண்டிக்கிறேன்.



அபூர்வமாய் வாய்த்த தனது ஆற்றலையும் ஆளுமையையும் அகங்காரம் கலைந்து அன்பூட்டி,
தன் ஆணவத்திற்காய் அன்றி, இனத்தின் வளர்ச்சிக்காய் சுமந்திரன் பயன்படுத்தத் தவறுவாராயின்,
தமிழினத்தை தவறுதலாக வழிநடத்தி இனஅழிவுக்கு வித்திட்ட பழியாளர்களின் வரிசையில்,
நிச்சயம் அவர் பெயரும் இடம்பெற்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
அவர் மேல் நம்பிக்கையும் மதிப்பும் கொண்டிருந்தவன் என்ற வகையில்,
அவரது இப்பிழையான செயல்களை மிக வன்மையாய்க் கண்டிக்க விரும்புகிறேன்.
ஆற்றல் மிக்க நமது முன்னாள் தலைவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாய்,
அவர்தம் ஆணவப் போக்கே அமைந்திருந்தமை வரலாறு.
சுமந்திரனும் அப்பாதையில் பயணித்தாராயின்,
இனத்திற்கு வழிகாட்டும் தகுதியை நிச்சயம் அவர் இழந்து போவார்.



ஒரு நடுநிலையாளன் என்ற வகையிலும்,
இனவளர்ச்சி பற்றிய அக்கறை கொண்டவன் என்ற வகையிலும்,
சுமந்திரனது ஆற்றலின் மேல் நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்டவன் என்ற வகையிலும்,
இவ்விடத்தில் சில செய்திகளை அழுத்தி உரைத்து இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.



சர்வாதிகார நிர்வாகம் எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அதனைவிட ஜனநாயகமே சிறந்தது என்று,
அரசியலாளர்கள் வெறுமனே முடிவு செய்யவில்லை.
அதனால்தான் ஆயிரம் சோதனைகளைத் தாண்டியும்,
ஜனநாயகத்தின் வெற்றி இன்றும் நிலைத்திருக்கிறது.
அந்த ஜனநாயகத்தன்மை உலகத்தில் நிலைத்திருப்பதால்தான்,
வலிய அரசியல் தலைமைகளில் இருந்து,
மெலிய குழுக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
கேட்பாரின்றித் தமிழர்களை அழித்துவிட்டு,
இன்று உலகின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல்,
இலங்கைத் தலைமைகள் திணறி நிற்பதும்,
சிற்றினமாய் இருப்பதோடல்லாமல் போர் செய்து தோற்றபின்பும் கூட,
தமிழர்கள் தமக்கான உரிமைபற்றி பேச முடிந்திருப்பதும்,
உலகில் நிலைத்திருக்கும் ஜனநாயகத் தன்மையால் விளைந்த,
நன்மைகள் என்பதை நாம் மறக்கலாகாது.



ஆயிரந்தான் அதிகாரம் தம் கையில் இருந்தாலும் மற்றவர்களையும் அணைத்துச் செல்லும் பண்பே,
ஒருவனை ஜனநாயகத் தலைவனாய் இனங்காட்டும்.
‘என்னை விட்டால் ஆளில்லை.’
‘உலகத்தலைமைகள் என்னோடுதான் இயங்குகின்றன.’
‘கட்சித்தலைமைகள் என்னை ஏனென்று கேட்க முடியாது.’
‘நான் சொன்னால் மற்றவர்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.’
என்பதான எண்ணங்கள் நிச்சயம் ஜனநாயகப் பாதையை செம்மை செய்யப்போவதில்லை.
என்னதான் பலமிருந்தாலும் மக்கள் ஆதரவற்ற தலைவன்,
என்றோ ஒரு நாள் வீழ்வான் என்பது நிச்சயம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று,
அன்றே இளங்கோவடிகள் அடித்துச் சொன்னார்.
எப்படிப் பார்த்தாலும் சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகளில்,
ஜனநாயகத் தன்மை இருப்பதாய்ச் சொல்லமுடியவில்லை.
சுமந்திரனின் ஆணவப் போக்கால் அவரை இனத்துரோகியாய் காணும் அளவிற்கு,
ஏற்கனவே நம் இளையதலைமுறையினரில் பலர் வந்திருக்கின்றனர்.
தேவை வரும்போது சம்பந்தனை வைத்து மற்றவர்கள் காலைப் பிடிப்பதும்,
தேவை இல்லாதபோது மற்றவர்கள் காலை தானே வாருவதுமாக இயங்கும் சுமந்திரனின் போக்கு,
நிச்சயம் நடுநிலையாளர்களுக்கு உவப்பாய் இல்லை.
அரசியல் காற்று தற்போது தனக்குச் சார்பாய் இருப்பதை வைத்து
எப்படியும் தான் இயங்கலாம் என சுமந்திரன் நினைத்தால் அது பெருந்தவறாகும்.
அக்காற்று எப்போது வேண்டுமானாலும் மற்றவர்க்குச் சார்பாய் திசைதிரும்பலாம் என்பதை வரலாற்றுப்படிப்பினையை வைத்து உணரத்தவறின் வீழ்ந்த தலைவர்கள் வரிசையில் விரைவில் சுமந்திரனும் சேர்க்கப்படுவார் என்பது நிச்சயம்.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.