மூன்று தவறுகள் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
அரசியல்களம் 28 Dec 2017
இப்படியே போனால் என்றோ ஒரு நாள் உண்மை நம்மைச் சுடத்தொடங்கும்.
சத்தியம் நம்மைச் சுடத்தொடங்கினால் நம் சந்ததியின் நிலை என்னாகும்?
திடீரென ஏன் இவ் விரக்தி எனக்கேட்கிறீர்களா?
சென்ற வாரம் யாழ் மண்ணில் நிகழ்ந்த ஒரு சம்பவமும்,
அது சார்ந்து எழுந்த எதிர் அலைகளுமே,
மேல் விரக்திக்காம் அடிப்படைக் காரணங்கள்.
பிழையான முன்னுதாரணங்களைப் பெரியவர்களே நிகழ்த்தினால்,
பொதுமக்களை யார்தான் நெறிப்படுத்தமுடியும்?
அதனால்த்தான் மனம் அதிர்ச்சிக்குள்ளாகிறது.
சந்தர்ப்பத்திற்கேற்ப பேசுவதே சத்தியம் என்றாகிவிட்டால்,
நாளை அதன் எதிர்விளைவுகளைச் சந்தித்து வருந்தும் போது,
நாம் சொல்லும் சத்தியமும் பொய்யாய் கணிக்கப்பட்டு விடும்.
இலாபமோ நட்டமோ சரியைச் சரி என்று சொல்லவும்,
பிழையைப் பிழை என்று சொல்லவும் பழகினால்த்தான்,
மற்றவர்களிடம் நமக்கான நீதியைக் கோரும் தகுதி உண்டாகும்.
இவ்விடயத்தில் மக்கள் சற்றுப் பின்னின்றாலும்,
தலைவர்கள் உறுதியாகவும் தெளிவாகவும் நின்று,
அவர்களை வழிப்படுத்துதல் அவசியம்.
அதுதான் தலைமைக்கான இலட்சணம்!
தமிழ் இனத்தில் அத் தலைமை இலட்சணம் கொண்டவர்களின் தொகை,
அருகிவருவது நம் துரதிர்ஷ்டமே.
✸✷✸
‘மூன்று தவறுகள்’ என்று கட்டுரைக்குத் தலைப்பிட்டுவிட்டு,
சென்றவாரப் பாதிப்பொன்றைப்பற்றி எழுதப்போவதாய்த் தொடங்கிய நான்
வேறேதேதோ பேசுவதாய் நீங்கள் நினைப்பீர்கள்.
உங்களை அதிகம் குழம்பவிடாமல் விடயத்திற்கு வருகிறேன்.
சென்றவாரச் சம்பவம் என்று நான் சொன்னது,
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நாகவிகாராதிபதியின் மறைவையும்,
அதுசார்ந்து எழுந்த சர்ச்சைகளையுமேயாம்.
அச்சம்பவம் சார்ந்த மூன்று தவறுகளைப் பற்றியே,
இக்கட்டுரையில் எழுதப்போகிறேன்.
✸✷✸
இசைவிழா 2017
ஈழத்தில் ஓர் மார்கழி உற்சவம். வரும் டிசம்பர் 30 முதல்
Posted by Kambavarithy Ilankai Jeyaraj on Wednesday, 20 December 2017
யாழ் முற்றவெளியில் செய்வதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது,
அதுபற்றிய சர்ச்சை வெடித்திருக்கிறது.
நம் தமிழ்த் தலைவர்கள் சிலர்,
வரப்போகும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு,
அவ்விடத்தில் விகாராதிபதியின் இறுதிக்கிரியைகளைச் செய்யக் கூடாது என்றும்,
அங்ஙனம் செய்யப்படின் அது நம் இனத்திற்கும்
நமது மண்ணின் சுயாதிபத்தியத்திற்கும் எதிரானது என்றும் குரல் எழுப்பி,
தமது இன உணர்ச்சியைச் சற்று மிகைப்படவே காட்ட முற்பட்டிருக்கின்றனர்.
இனத்தையும் இன உரிமையையும் காக்கும் தீவிரத் தலைவர்களாய்த் தம்மை இனங்காட்ட,
அவர்கள் முயன்றிருப்பது வெளிப்படையாய்த் தெரிகிறது.
தாமும் உணர்ச்சிவசப்பட்டு மக்களையும் உணர்ச்சிவசப்பட வைக்க முயற்சித்த,
இத் தலைவர்களின் செயற்பாட்டில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை.
✸✷✸
இதை நான் சொன்னதும் ‘ஆகா! இவன்தான் இனத்துரோகி’ என,
என்னை நோக்கி விரல் நீட்டப் பலர் தயாராவது தெரிகிறது.
அத்தகையோர் பற்றி நான் சிறிதும் கவலைப்படப் போவதில்லை.
மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதும் மற்றவர்களை உணர்ச்சிவசப்படுத்துவதும்,
எதைச் சொன்னால் மக்களுக்குப் பிடிக்கும் என நினைந்து அதைச் சொல்வதும்,
எனது வேலைகள் அல்ல.
மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பொய்யை மெய்யாக்கி உரைக்க,
நான் ஒரு அரசியல்வாதியும் அல்லன்.
இந்த மக்களோடு வாழ்ந்தவன், மக்களால் வாழ்ந்தவன் என்ற உணர்வோடு,
நான் கற்ற தமிழ் எனக்குக் கற்பித்த அற அடிப்படையை வைத்தே,
கருத்துக்களை எழுதுகிறேன்.
என்னை அறிவார் இதனை அறிவார்-அறியார் அறியாரே!
✸✷✸
நம் தமிழினம், தனது சமுதாயத்தலைமையைத் துறவிகளுக்கு வழங்கி,
அவர்களைப் பெருமைப்படுத்தியது.
அதனால்த்தான் தமிழர்தம் வாழ்க்கைநெறியை வகுத்த வள்ளுவக்கடவுள்,
இறை (கடவுள் வாழ்த்து), இறையால் அமைக்கப்பட்ட இயற்கை (வான் சிறப்பு) என்பவற்றைப் பாடி,
அதற்கடுத்ததாகத் துறவிகளது பெருமை கூறும், ‘நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தை அமைத்தார்.
அங்ஙனம் துறவிகளை மதிக்கும் தமிழினத்தவர்களாகிய நாங்கள்,
ஒரு துறவியின் மறைவை வைத்து சர்ச்சைகள் நடத்தவும்,
அரசியல் பேசவும் முற்பட்டது மிகப்பெரிய தவறென்பது என் கருத்தாகும்.
✸✷✸
வள்ளுவர் சொன்னது உண்மைத் துறவிகளைப் பற்றி,
இவர்களெல்லாம் உண்மைத் துறவிகளா? உங்களில் சிலர் கேட்க நினைப்பது புரிகிறது.
இக் கேள்விக்கு என்னால் மட்டுமல்ல வேறு யாராலும் கூட சரியான பதிலை உரைத்துவிட முடியாது.
துறவின் உண்மைத்தன்மையை அவ்வத்துறவிகளின் நேர்மை நெஞ்சே எடுத்துரைக்க முடியும்.
அதனால்த்தான் பொய்த்துறவிகளைப் பற்றி உரைக்கவந்த வள்ளுவர்,
அவரது பொய்மையைக் கண்டு உலகத்தார் சிரிப்பர் என்றுரைக்காமல்,
அவருள் பதிந்திருக்கும் பஞ்சபூதங்களும் சிரிக்கும் என்று உரைத்தார்.
வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
துறவியரின் தூய்மைக்கு அவரது அகமே சாட்சி என்பதே,
வள்ளுவரின் கருத்தாய் இருந்திருக்கிறது.
✸✷✸
நான் இங்கு சொல்லவருவது துறவிகளுக்கான முக்கியத்துவம் பற்றியதல்ல,
துறவுக்கான முக்கியத்துவம் பற்றியது.
ஒரு மதம் சார்ந்து துறவியென இனங்காணப்பட்ட ஒருவரை,
மதிப்பதும் மரியாதை செய்வதும் தமிழர்களாகிய நமது கட்டாய கடனாம்.
அப்பண்பை மக்கள் மத்தியில் ஊட்டவேண்டியவர்கள் தலைவர்கள்.
இங்கோ அவர்களே அப்பண்பை நிராகரிக்க மக்களைப் பழக்குகிறார்கள்.
ஈ.பி,ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா,
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எனப் பலரும்,
விகாராதிபதியின் இறுதிச்சடங்குகளுக்கான தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.
வழக்கமாக உண்மையைத் துணிந்து உரைக்கும் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்,
தவராசா கூட, இவ்விடயம் பற்றிப் பட்டும்படாமல் பேசி இருப்பது மனவருத்தம் தருகிறது.
அவர் இத் தவறான முன்னுதாரணத்தை வலிமையாய்க் கண்டிக்காமல்,
‘அதிகாரமுள்ள முதலமைச்சரும் மாநகரசபை ஆணையாளரும் இதனை தடுத்திருக்கலாமே,’
என்று ஒப்புக்குச்சப்பாய் ஓர் அறிக்கை விட்டிருக்கிறார்.
இவ்விடயத்தில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களது அறிக்கைதான்,
சற்றேனும் நேர்மையாய் அமைந்து ஆறுதல் தருகிறது.
‘எங்களது தலைவர்கள் உயிர்நீத்த போதும் அவர்களது உடல்கள்,
பொது இடங்களில் தகனம் செய்யப்பட்டன.
பௌத்த மதத்திற்கு நாங்கள் மரியாதை செலுத்தத் தயார். ஆனால் அம்மரியாதையைப் பயன்படுத்தி,
அம்மதத்தை ஆக்கிரமிப்பின் அடையாளமாக்க எவரும் முனையக்கூடாது’ என்ற,
சிவாஜிலிங்கத்தின் அறிக்கையில்த்தான்,
சற்றுப் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நிதானத்தைக் காண முடிந்தது.
✸✷✸
எதிராளிகளின் நிலைமை பற்றியும் தகுதி பற்றியும் அதிகம் பேசும் நம் தலைவர்களில் பலருக்கு,
தமிழினம் இன்றிருக்கும் தகுதி பற்றியும் நிலைமை பற்றியும் தெரியாதிருப்பது பெரிய விந்தை.
உண்மை நிலை உணராமல் தம் சுயநலத்திற்காய் அத்தலைவர்கள் உரைக்கும் பொய்மை வாதங்களை,
நம் இனத்தார் பலர் இனஉணர்ச்சியாய்ப் போற்றி நிற்பதும்,
இவர்களே உண்மைத் தலைவர்களென இப்பொய்மையாளர்களை உச்சிமேல் வைத்து உவப்பதும்,
நம் இனத்தின் எதிர்காலம் பற்றிய ஐயத்தைத் தொடர்ந்தும் ஊட்டுகின்றன.
✸✷✸
அதுவென்ன தமிழினத்தின் நிலைமை என்கிறீர்களா?
திரும்பத் திரும்பப் பலதரம் சொல்லிவிட்டேன்.
அச்செய்தி இதுவரை ஒருவர்க்கும் உறைத்ததாய்த் தெரியவில்லை.
அதனால் மீண்டும் ஒருதரம் அச்செய்தியை இக்கட்டுரையிலும் பதிவு செய்கிறேன்.
✸✷✸
உரிமை வேண்டி, சிறுபான்மை இனத்தவர்களாகிய நாங்கள்,
பேரினத்தாரோடு மோதிக்கொண்டிருக்கிறோம் என்பது முதல் பிரச்சினை.
சாம, பேத, தானம் தாண்டி தண்டம் வரை சென்று,
படுதோல்வி அடைந்து நிற்கிறோம்; என்பதை,
இதுவரை நாம் உணராமல் இருப்பது இரண்டாவது பிரச்சினை.
உலக நாடுகள் காட்டிய கருணையால்த்தான் இன்று இம்மண்ணில் இந்தளவேனும் நம்மால் வாழ முடிகிறது.
இன்று அந்த உலகநாடுகளின் ஆதரவையும்,
மெல்ல மெல்ல நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மூன்றாவது பிரச்சினை.
இவ் உண்மையை, சென்றவாரம் பட்டவர்த்தனமாக,
மாகாணசபை அமைச்சர் அனந்தியே கூறியிருக்கிறார்.
தோற்ற நாங்கள், பிற நாடுகளின் நட்பையும் ஆதரவையும் பெருக்கிக் கொள்ளாமல்,
வென்றவனின் திமிர்த்தனத்திற்கேற்பச் சரிசமமாய்ப் பேச நினைப்பது நான்காவது பிரச்சினை.
பேரழிவு கண்டு சிதைந்து கிடக்கும் நம் தமிழினம் ஒன்றுபட்டு மெல்ல நிமிர்வதற்கு முன்,
எதிரிகள் நகைக்க, தாம் ஒருவரோடு ஒருவர் மோதி,
தியாகிகளின் இரத்தச்சகதியில் தம் சுயநலம் விதைக்க நினைக்கும்,
நம் தலைவர்களின் போக்கு ஐந்தாவது பிரச்சினை.
இவையெல்லாவற்றையும் ஒன்று சேர்த்துத்தான் தமிழினத்தின் இன்றைய நிலைமை என்றேன்.
✸✷✸
‘அப்படியானால் பேரினத்திற்குப் பயந்து எங்களைப் பணியச் சொல்கிறீர்களா?’
சில பிற்புத்திக்காரர்களின் கேள்வி என் காதில் விழுகிறது.
அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாமல் இருப்பது மடமை என்றான் வள்ளுவன்.
‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’
நம்மைப் பலப்படுத்திக் கொள்ளாமல், எதிராளிக்குச் சவால் விடுவதைப் போல அறியாமை,
வேறேதும் இருக்கமுடியுமா?
வளர்ச்சிக்கு வாய்ப்பாகக் கிடைத்த மாகாணசபையையும் உட்பகையால் உடைத்து வைத்திருக்கிறோம்.
இன்றுவரை தமிழ் நாட்டோடுகூட நம்தலைவர்கள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இதுதான் இன்றைய நம் அரசியல் நிலை.
பேரினத்தின் ராஜதந்திரத்திற்கு முன்னால்,
தம் உயிரைவிடத் துணிந்த போராளிகளாலேயே கடைசியில் ஒன்றும் செய்ய முடியாமற் போயிற்று.
சுயநலத்தின் உச்சத்தில் நின்று கூத்தாடும் இன்றைய தலைவர்களா பேரினத்தை எதிர்த்து,
நமக்கு உரிமை பெற்றுத் தரப்போகிறார்கள்.
பகற்கனவு காண்பதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?
போர்க்காலத்தில் பாதுகாப்பாக ஆங்காங்கு இருந்துவிட்டு,
இன்று தம் நலத்திற்காய்ப் பதவிகள் நோக்கி வாயூறி நிற்கும்,
இத்தலைவர்கள் நம்மை ஏமாற்ற நினைப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.
அடிக்கு மேல் அடி வாங்கி ஆயிரம் அழிவுகளைச் சந்தித்த பிறகும்,
யதார்த்தம் உணராமல் ஏமாற நினைக்கும் நாம்தான் ஆச்சரியத்திற்குரியவர்கள்.
நிச்சயம் வரலாறு நம்மை பழிக்கப்போகிறது!
✸✷✸
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில், சர்ச்சைக்குரியவரான ஞானசார தேரர்,
‘யாழ் நாகவிகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதற்கு,
யாழ்ப்பாணத்தில் இடம் வழங்க மறுத்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு நடந்து கொள்ளும் போது,
எப்படி நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் எப்படிப்பட்டவராயும் இருந்துவிட்டுப் போகட்டும்!
அவரது கேள்விக்கு நாம் என்ன பதில் உரைக்கப்போகிறோம்?
நமக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்து,
வடக்கில் சிறுபான்மையாய் இருக்கும் சிங்களவர்களை நாம் அடக்க நினைத்தால்,
தேசத்தளவில் பெரும்பான்மையாய் இருக்கும் அவர்கள்,
சிறுபான்மையினராகிய நம்மை அடக்குவது தவறென்று எங்ஙனம் உலக அரங்கில் நாம் உரைக்கமுடியும்?
உண்மை உணராது எதிராளியின் வெற்றிக்கு வாள் தீட்டிக்கொடுக்கும் நம் தலைவர்களை என்ன என்பது?
✸✷✸
‘முற்றவெளி என்ன மயானமா?’ சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
கேள்வி பதில்களெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும்.
ஒரு துறவிக்கான இறுதி மரியாதையில் இந்த நியாயங்களையெல்லாம் நாம் பேசத்தான் வேண்டுமா?
நல்லூர் வீதியில் முருகன் ஆலயத்திற்கு அருகிலேயே,
போரில் இறந்த சிங்கள இராணுவத்தினரின் உடல்களை வரிசையாய் அடுக்கி,
கண்காட்சிக்கு வைத்தபோதும் அதை வரிசையாய் நின்று மக்கள் பார்த்தபோதும்,
இந்தக் கேள்விகள் எல்லாம் எழுந்தனவா என்ன?
துறவிக்கான இறுதி மரியாதையில் இந்தக் கேள்விகளுக்கு அவசியமில்லை என்றே கருதுகிறேன்.
விதிகள் இருந்தால் விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்யும்.
இது விதிவிலக்கு.-அவ்வளவே!
✸✷✸
நல்லை ஆதீனத்தின் முதற்குருமகாசந்நிதானம் நிறைவு அடைந்த போது,
ஆதினத்திற்குள் குருமுதல்வரின் உடலை ஆதீனத்திற்குள்ளேயே சமாதி வைக்க ஆயத்தம் செய்தார்கள்.
சுற்றி வரக் கோயில்கள் இருக்கும் இவ்விடத்தில் அவ் உடலை சமாதி வைக்கலாமா? என்று கேட்டு,
அப்போதும் சிலர் பிரச்சினை கிளப்பினார்கள்.
ஆனால் அப்போதைய தலைவர்களும் சமுதாயப்பெரியவர்களும்,
‘அது துறவிக்கான மரியாதை அதில் யாரும் தலையிடக்கூடாது’ என உரைத்து,
நல்லபடி அச்சமாதி நிகழ்வை நிகழ்த்தினார்கள்.
பௌத்த துறவியின் சமாதி பற்றிய கேள்விக்கும் இதுவே பதிலாம்.
✸✷✸
நம் மண்ணில் வாழ்ந்த அத்துறவியின் நல்லடக்கத்தை நாமே பொறுப்பேற்றுச் செய்திருக்கவேண்டும்.
நம் அத்தனை தலைவர்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவேண்டும்.
தமிழ்மக்கள் அத்தனை பேரும் அத்துறவியின் பூதவுடலுக்கு மரியாதை செய்திருக்கவேண்டும்.
இவ்வளவும் நடந்திருந்தால் நம் தமிழினத்தின் மரியாதை
பேரினத்தார் மத்தியில் எவ்வளவு உயர்ந்திருக்கும்!
சிறுபான்மையினருக்கு நாம் செய்த- செய்துகொண்டிருக்கின்ற இழிவுகளுக்கு மத்தியில்,
தமிழினம் நம் மதத் துறவியை எவ்வளவு கண்ணியப்படுத்தி மரியாதை செய்திருக்கிறது?
இவர்கள் அல்லவா மனிதர்கள்! என,
பேரினத்தாரை நாணப்பட வைக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நாம் இழந்துபோயிருக்கிறோம்.
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ எனும்,
வள்ளுவனின் கருத்து வாக்குக்குத்தானா? வாழ்க்கைக்கு இல்லையா?
நாண வேண்டியவர்கள் நாமாகிப் போனோம்.
✸✷✸
மக்களை நெறிசெய்யவேண்டிய தலைவர்களே,
ஒரு துறவியின் மரணத்தையும் தம் சுயநலத்திற்காய்ப் பயன்படுத்தியமை,
தமிழினம் வெட்கப்படவேண்டிய செயல் என்பதில் ஐயமில்லை.
மக்களுக்காய்த் தியாகங்கள் செய்யத் தெம்பில்லாதவர்கள்,
தேவையில்லாத விடயங்களில் இன உரிமை பேசி,
அதை மக்கள் மன்றில் தம் தியாகமாய்ப் பதிவு செய்து,
வாக்கு வேட்டைக்கு வாய்பிளந்து அலைகிறார்கள்.
ஒரு நேர்மைத் தமிழனாய் அவர்தம்மின் தவறைச் சுட்டிக்காட்டி,
நல்லவர்கள் சார்பில் அச்செயலைக் கண்டிக்க விரும்புகிறேன்.
இதுவே நான் சொல்ல நினைந்த முதல் தவறு.
✸✷✸
நான், எனது எனும் எண்ணங்களைத் துறந்தோரே துறவிகளாம்.
என்று துறவு சமயத் தேவைகளுக்காக நிர்வாகமயப்படுத்தப்பட்டதோ,
அன்று பிடித்தது துறவுக்குச் சனி!
துறவை ஏற்று நிற்கும் எல்லாச்சமயத்தவரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
துறவு உடல் சார்ந்த விடயமல்ல, உளம் சார்ந்த விடயம்.
இன்னும் சரியாய்ச் சொல்லப்போனால் அது உயிர் சார்ந்த விடயம் என்பதே நிஜமாம்.
கோடியில் ஒருவர்க்குச் சாத்தியமாகும் அவ் இயல்பை ஓர் அமைப்பாக்கி,
அமைப்பை விரிவிக்க அங்கத்தினரைச் சேர்ப்பதாய்ச் சொல்லி,
துறவுக்கூட்டுக்குள் துறவில்லாதாரை உட்புகுத்தியதன் விளைவே,
துறவுக்கான மதிப்பை இன்று இல்லாமல் செய்திருக்கிறது.
✸✷✸
நம்நாட்டில்இனத்துவேசமும் அரசியலும்,
துறவின் பெயரால் விரிவாகப் பரப்பப்பட்டதால்த்தான்,
மரியாதை செய்யப்படவேண்டிய துறவு இன்று மதிப்பிழந்து நிற்கிறது.
துறவோர் துறவுக்குச் செய்த இழிவின் விளைவையே இங்கு இரண்டாவது தவறென உரைக்கிறேன்.
அமரரான நாகவிகாராதிபதியின் இறுதிக்கிரியைகளில் ஏற்பட்ட சர்ச்சைக்கு,
அரசியலாளர்கள் மட்டுமின்றி துறவின் பெயரால் அரசியல் செய்த அனைவருமே பொறுப்பேற்றாகவேண்டும்.
அன்பு செய்யவேண்டிய துறவின் பெயரால் வன்முறை செய்த அத்தனை பேரதும் தவறே,
இன்று துறவுக்கு எதிரான உணர்வைத் தமிழ்மக்கள் மத்தியில் திணித்திருக்கிறது,
அல்லது மற்றவர் திணிக்கக் காராணமாய் இருந்திருக்கிறது
தீயவை இல்லாத உலகம் என்ற ஒன்று எப்போதும் இருக்கப்போவதில்லை.
ஆனால், தீயவர்கள் நல்லவற்றின் பெயரால் தம் தீமைகளை இயற்ற,
உலகு ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.
அங்ஙனம் அனுமதித்தால் பின்னாளில் நன்மைகளும் தீமைகளோடு சேர்ந்து இழிவுபடுத்தப்படும்.
நடந்து முடிந்த சம்பவம் இவ்வுண்மைக்குச் சான்றாகியிருக்கிறது.
இனியேனும் இத்தவறு நிகழாமல் துறந்தோர் காப்பார்களாக!
✸✷✸
மறைந்த விகாராதிபதியின் இறுதிச் சடங்கை,
பொலிஸாரும் இராணுவத்தினரும் பொறுப்பேற்று நடாத்தியமையே,
நிகழ்ந்த மூன்றாவது தவறாம்.
ஆயிரக்கணக்கான துறவிகள் நிறைந்த இந்நாட்டின் பௌத்த உலகில்,
ஒரு துறவியின் இறுதிக்கிரியைகள் பற்றி எழுந்த சர்ச்சையை,
தமது அகிம்சையால் கையாள ஒரு துறவிதானும் இல்லாமல்போனது வியப்புத் தருகிறது.
தம் அகிம்சையை விட இராணுவத்தினரின் ஆயுதத்திற்குப் பலம் அதிகம் என நினைத்த,
இவர்தம் அறியாமையை என்னென்பது?
ஒரு துறவியின் நல்லடக்கம்,
இராணுவத்தினரின் காவலோடு நடத்தப்பட்டது என்பதை விடவா,
ஒரு துறவிக்கு வேறு அவமரியாதை நிகழ்ந்துவிடப்போகிறது?
எதற்கெடுத்தாலும் இராணுவத்தினரை அழைக்கும் இயல்பை அரசியலாளர்கள் கையாளட்டும்,
முற்றும் துறந்த துறவிக்குக் கூடவா இராணுவப்பலம் பாதுகாப்புத் தந்துவிடும்?
புத்தர் சொன்ன அன்புப்பலத்தை விட ஆயுதப்பலத்தைப் பெரிதாய் நினைவது,
பௌத்த மதத்தை இழிவு செய்யும் செயலாம்.
மக்களை ஆயுதத்தால் வென்று விடலாம்.
மனங்களை அன்பால்த்தான் வெல்ல முடியும்.
துறவிகளே இம் முன்னுதாரணத்தைக் காட்டத் தவறினால்,
வேறெவர்தான் அப்பாதையில் பயணிப்பர்?
✸✷✸
அனைவருமே புத்தராகலாம் என்றார் புத்தர்.
புத்தர் என்பது ஒரு நபரைக் குறிப்பதன்று புத்த தத்துவத்தைக் குறிப்பிடுகிறது.
அந்த நிலையை அனைவரும் எய்தலாம் என்பதே புத்தரின் அருளுரை.
புத்தரை ஆதர்ஷ வழிகாட்டியாக ஏற்று அணுகினோர்,
மூன்றைச் சரணடைந்து அவரை ஏற்றுக்கொண்டனர்.
புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி! என்பவையே அம்மூன்று கொள்கைகளாம்.
புத்தரைச் சரணாக அடைதல், தர்மத்தை சரணாக அடைதல்,
புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போரின் சங்கமத்தைச் சரணாக அடைதல்,
என்பவையே அம்மூன்று தொடர்களது விளக்கமாம்.
எத்துணை பெரிய இலட்சியங்கள்!
பௌத்தத்தை வலியப் பரப்புவதை விட,
இக்கொள்கைகளைப் பரப்பினால் பௌத்தம் தானாகப் பரவிவிடப்போகிறது.
இவ் உண்மையை பேரினத்தார் என்று உணரப் போகிறார்களோ?
அன்றுதான் இத்தேசத்துள் ஒளி புகும்.
✸✷✸
மூன்று தவறுகள் பற்றிச் சொன்னேன்.
முதல் தவறு நாம் செய்தது.
மற்றைய தவறுகள் அவர்கள் செய்தவை.
ஏதிலார் குற்றம் காண்பதைவிட தம் குற்றம் காண்பதே சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
நிகழ்ந்தது நிகழ்ந்து விட்டது. தவறுக்காய் மன்னிப்புக்கோருவதில் எந்தத் தவறுமில்லை.
அதனால்……
பௌத்த துறவிக்கு நிகழ்த்தப்பட்ட அவமரியாதைக்காக,
இம்மண்ணில் நீண்டகாலம் அறிவுலகத்தோடும் சமய உலகத்தோடும்,
தொடர்பு கொண்டிருப்பவன் என்ற முறையில்,
தமிழ்மக்கள் சார்பில் பௌத்த மதத்தாரிடம் பகிரங்கமாய் மன்னிப்புக் கோருகிறேன்.
மற்றவர்கள் கருத்து எப்படியோ?
இதனால் என் மனம் சாந்தி அடைகிறது.
✸✷✸✷✸✷✸