அரசியற்களம் 05 | தலைமைத் தடுமாற்றங்கள் - கம்பவாரிதி இ. ஜெயராஜ்

அரசியற்களம் 05 | தலைமைத் தடுமாற்றங்கள் - கம்பவாரிதி இ. ஜெயராஜ்
 
 
உலகம் ஆவலோடு எதிர்பார்க்கும்படியாக,
மீண்டும் இலங்கையின் தேர்தல்களம் சூடாகியிருக்கிறது.
நாட்டின் தலைவராய் ஆகியிருக்கும் புதிய ஜனாதிபதி மைத்திரி,
எவர் பக்கம் உறுதியாய் நிற்கிறார் என்பது தெரியாமல்,
 

சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் குழம்பி நிற்கின்றன.
இதுவரை காலமும் மலையகத்தில் கோலோச்சி நின்ற,
தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்,
புதிதாய் முளைத்திருக்கும் திகாம்பரம், ராதாகிருஷ்ணன், மனோகணேசன் ஆகியோரது,
கூட்டு அணியால் சிறிய ஆட்டம் கண்டு நிற்கிறது.
வலிய தலைவரான மறைந்த அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட,
முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஆட்சியாளர்களோடு,
கடைசிவரை இணைந்திருந்துவிட்டு,
இறுதியில் பிரிந்து புதிய ஆட்சியில் இணைந்து,
பழைய ஆட்சியாளர்களின் பழியில்,
தனக்கு சம்பந்தம் இல்லை என்றாற்போல் இயங்கி நிற்கிறது.
இத்தலைமையின் குழப்பத்தால்,
ஒருமித்த தலைமையோடிருந்த இஸ்லாமிய இனம்,
இன்று ரிஷாட் பதியுதீன், அதாவுல்லா, பஷீர் சேகுதாவூத் என,
பல தலைமைகளின் கைவயப்பட்டு மயங்கி நிற்கிறது.
தமிழர் கூட்டமைப்புக்குள் ஏராளமான குழப்பங்கள்.
இதுவரை கூட்டமைப்பினை எதிர்த்து நின்ற,
ஈ.பி.டி.பி கட்சியின் தளர்ச்சி.
இத்தேர்தலில் பலம் பெறத் தொடங்கியிருக்கும் தமிழ்த்தேசிய முன்னணியின்; வளர்ச்;சி,
புதிதாய் முளைத்திருக்கும் முன்னாள் போராளிகளின் புதிய கட்சியின் எழுச்சி என,
தமிழர் தலைமைகள் மத்தியிலும் பல தடுமாற்றங்கள்.
மொத்தத்தில் இம்முறை தேர்தல் களத்தில்,
தலைமைகள் அனைத்தும் தடுமாறி நிற்பது வெளிப்படையான விடயமாகியிருக்கிறது.

***
சிறீலங்கா சுதந்திரக்கட்சி

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்,
கடைசி நேரத்தில் கிடுகிடுவென நடந்த,
அரசியல் மாற்றங்களால் தேர்தல் களம்,
கடுமையாகச் சூடுபிடித்து பெரும் மாற்றங்களை,
இலங்கை அரசியலில் ஏற்படுத்திற்று.
கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி போல ஆட்சி நடத்த முனைந்து,
தன் குடும்பத்தார் முழுப்பேரையும் அரசியலுள் நுழைத்தார் மகிந்த.
கேட்க ஆளில்லை எனும் நினைப்பில்,
பதவி ஆசை தூண்ட வழமைக்கு மாறாக,
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்காய்,
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இயங்கிய அவர்,
சோதிடர்கள் தந்த துணிவில்,
தனது பதவிக்காலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் எஞ்சி இருக்கத்தக்கதாக,
திடீரென  ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து,
அப்போதைய தேர்தல் களத்தை சூடேற்றத்தொடங்கினார்.
***
அவரே எதிர்பாராத வண்ணம் திடீரென அரசியல் களத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.
ரணில், சந்திரிக்கா, மைத்திரி ஆகியோரின் கூட்டில்,
பெரிய அணி ஒன்று திரண்டு,
ராஜபக்ஷ குடும்பத்தாரிடமிருந்து நாட்டை மீட்பதெனும் கோஷத்தோடு,
களத்தில் குதிக்க கடகடவெனக் காட்சிகள் மாறின.
பொது ஜன ஐக்கிய முன்னணியின் முக்கிய தலைவர்கள் பலர்,
பழைய ஜனாதிபதியைக் கைவிட்டு மைத்திரியின் பக்கம் சேரத் தொடங்கினர்.
முன்னை ஆட்சியாளர்களால் மனம் நொந்திருந்த இஸ்லாமியர்களும்,
அவ் அணியில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
அதுவரை காலமும் மலையகத்தில் கோலோச்சி வந்த,
தோட்டத் தொழிலாளர் காங்கிரசுக்கு எதிராகத் திரண்ட,
புதிய அணியும் மைத்திரியை ஆதரிக்க முன்வந்தது.
முன்னாள் ஜனாதிபதியால் தாம் ஒடுக்கப்படுவதாய் உணர்ந்திருந்த,
தமிழர் கூட்டமைப்பும் ஆச்சரியமாக இவ் அணியை ஆதரிக்க முன்வர,
யாரும் எதிர்பாராத வண்ணம் புதிய அணி வெற்றி பெற்றது.
மைத்திரி ஜனாதிபதியாய் உட்கார்ந்தார்.
***
புதிதாய் ஜனாதிபதியாய் வந்த மைத்திரி அவர்கள்,
தனது மென்மைப் போக்கால் அனைவரையும் கவர்ந்தார்.
இந்த நாடு உருப்படுவதற்கான சில முன் முயற்சிகளை,
கடகடவென எடுக்கத் தொடங்கினார்.
கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று,
வடமாகாண கவர்னர், செயலாளர் ஆகியோர் உடன் மாற்றப்பட்டனர்.
இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த,
தமிழர் காணிகளின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது.
வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த தமிழ் பெண்ணான வித்யாவின் தாயை,
தனியே சென்று சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஆன உதவிகளையும் செய்து,
தமிழ் மக்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தார் அவர்.
பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றி,
தனது அதிகாரங்களைத் தானே குறைத்துக் கொண்டார்.
இந்நாடு எல்லா இனத்தார்க்கும் உரியது என்ற கருத்தை,
முன் மொழிந்து அவர் செயல்பட்டதைக் கண்டு உலகமே வியந்தது.
***
எல்லாம் சிலகாலம் தான்.
மீண்டும் அரசியல் களத்தில் திடீர் மாற்றங்கள்.
தத்தம் கட்சி வளர்ச்சி நோக்கியும் பதவிகள் நோக்கியும் அச்சம் உண்டாக,
இணைந்த யு.என்.பி, சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் தேனிலவு,
மிக சொற்பக்காலத்திலேயே முடிவுக்கு வந்தது.
ஒதுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை,
மீண்டும் அரசியலுக்குள் இழுத்துவர சிலர் அணி சேர்ந்து முயற்சித்தனர்.
ஜனாதிபதி மைத்திரியின் மென்மைப் போக்கால்,
அவ் அணி நாளுக்குநாள் வலுப்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதியைப் பிரதமராக்க முயன்ற,
அணியின் அழுத்தங்களுக்கு ஆளாகி,
புதிய ஜனாதிபதி மைத்திரி மெல்ல மெல்ல,
தன் அதிகாரக் கயிற்றினை நழுவவிட்டார்.
'நடக்காது, யோசிக்கலாம்" என இழுபட்ட அவரது கருத்துக்கள்,
முடிவில் மகிந்த பிரதமராகலாம் என்பதாய் முற்றுப்பெற்றது.
தை;திரியை ஜனாதிபதியாக்க துணை செய்த தலைவர்கள் முகம் சுருங்கினர்.
நல்லவர், வல்லவராய் இல்லாதது கண்டு பலரும் மனம் வாடினர்.
***
முன்னாள் ஜனாதிபதிக்குத் தேர்தலில் இடம் கொடுத்த பின்னர்,
புதிய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அறிக்கை மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திற்று.
மகிந்த பிரதமராக ஒருக்காலும் சம்மதியேன்,
தேர்தலில் நடுநிலை வகிப்பேன் எனும் செய்திகளை உள்ளடக்கிய அவரது அறிக்கை,
சுதந்திரக்கட்சியினரையும், அதன் பங்காளிகளையும் கொதிப்படையச் செய்தது.
அவரது அறிக்கை நடுநிலையாளர்கள் பலரையும் மகிழ்வித்தாலும்,
உறுதியில்லா அவரது இயல்பு அறிந்ததால்,
அம்மகிழ்வில் எவராலும் நிலைகொள்ள முடியவில்லை.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரை,
பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படும் தலைவராக மகிந்த ராஜபக்ஷவும்,
அதிகாரத்தைத் தன்வயம் கொண்ட தலைவராக,
ஜனாதிபதி மைத்திரியும் இருக்கும் துர்ப்பாக்கிய இரட்டைச்சூழ்நிலை.
இரண்டு தலை விலங்காய் வேறு வேறு திசையில் இழுபட்டு,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல்களத்தில் தடுமாறி நிற்கின்றது.
***
ஐக்கியதேசியக்கட்சி

புதிய ஜனாதிபதியின் வருகையால் அதிர்ஷ்டக்காற்று அடிக்க,
யாருமே எதிர்பாராத வண்ணம்,
சொல்லப்போனால் அவருமே எதிர்பாராத வண்ணம் பிரதமர் பதவி,
ரணிலின் மடியில் வந்து விழுந்திருக்கிறது.
அதுவரை தன்கட்சிக்குள்ளேயே எழுந்த தலைமைப் போட்டியை,
விட்டுக்கொடுப்புக்களால் சமாளித்து வந்த ரணில்,
திடீர் பிரதமர் பதவியால் கட்சிக்குள் பலமும் உறுதியும் கொண்டார்.
அவர் சார்பான மேற்குலகின் நகர்வு,
தமிழர்தம் பிரச்சினையைப் பின்தள்ளி,
இலங்கை அரசியலை சர்வதேசச் சிக்கலில் இருந்து விடுவிக்க ஆயத்தம் செய்ய,
அரசியலில் திடீரென அவரது விஸ்வரூபம் தொடங்கிற்று.
ஆனால் பதவி வந்த சிலநாட்களிலேயே அவருக்கும் அடுத்தடுத்து சங்கடங்கள் ஆரம்பித்தன.
ஜனாதிபதியுடன் இணைந்து அவர் வழங்கிய நூறு நாள் வாக்குறுதிகள்,
இடைநின்று தடுமாறத் தொடங்கின.
ஆதரவளித்த தமிழ்த் தலைவர்கள் தந்த நெருக்கடிகள் ஒருபுறம்.
அவரால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுனர்,
அர்ஜீன் மகேந்திரனின் மேல் எழுந்த குற்றச்சாட்டு மறுபுறம்,
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கைகோர்த்து நின்ற,
சுதந்திரக்கட்சியினரிடம் மெல்ல மெல்ல எழுந்த நிராகரிப்பு இன்னொரு புறம் என,
அவர் தலைமைக்குத் தொடர்ந்த தலையிடிகள்,
பதவியில் சிலகாலம் மட்டுமே இருப்பதுதான் இவரது ராசியோ என நினைக்க வைத்துள்ளது.
புதிய ஜனாதிபதியின் வினோதமான நடுநிலை கண்டு,
அவரது ஆதரவு யாருக்கு என்பது புரியாமல்,
சிறு கட்சிகளினதும், தொழில் சங்கங்களினதும் கைபற்றி,
வெற்றி நோக்கிய முயற்சியில் தடுமாறி நிற்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.
***

ஜே.வி.பி.

பேரினவாதக்கட்சிகளுக்குள் இன்று
தெளிவான எதிர்காலப்பார்வையுடன் செயற்படும் கட்சியாய்
ஜே.வி.பி. அறிவுலகத்தார் மத்தியில் பதிவாகி இருக்கிறது.
ஒரு காலத்தில் வன்முறைக்கலாசாரத்தில் ஊறி இருந்தாலும்,
அக்கலாசாரத்தின் பலயீனங்களிலிருந்து வெளிவந்து
அதில் கற்ற கட்டுப்பாடுகளை இறுக்கப்பிடித்து
புதிய தலைமையின்கீழ் இயங்கும் ஜே.வி.பி.
கற்ற இளைஞர்களை மீண்டும் ஈர்க்கத்தொடங்கி இருக்கிறது.
அண்மையில் சுகததாச விளையாட்டரங்கில்
அக்கட்சி நடாத்திய தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டுக்கூட்டத்தில்
தெரிந்த ஒழுங்கமைப்பு,
அக்கட்சி நிதானமாய், கட்டுப்பாட்டோடு முன்னேறுவதை
அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறது.
பதவி நோக்கிய விருப்புக்களை ஓரளவு புறந்தள்ளி
பேரினவாத பெரிய கட்சிகள் இரண்டையும்
நிஜச்சார்போடு விமர்சித்து நடைபோடும் அவர்கள்மேல்
பலருக்கும் மதிப்புண்டாகி இருப்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆனாலும் பலகாலமாக அரசமைத்து வரும் பெரிய கட்சிகளான
ஐ.தே.கட்சி, சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் விரிந்த வாக்குவங்கி,
இக்கட்சியையும் தடுமாற வைத்திருப்பது உண்மையே.
***
முஸ்லிம் காங்கிரஸ்

ஒருகாலத்தில் சிதறிக்கிடந்த முஸ்லிம் தலைமைகளை உள்ளீர்த்து,
ஆளுமைமிக்க மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால்,
உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி,
அஷ்ரப்பின் திடீர்; மறைவின் பின்
தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால்,
சற்றுத் தள்ளாடத் தொடங்கியது.
பின்னர் தனது ஆற்றலால் அக்கட்சியின் தலைமையை,
தன் கீழ் கொணர்ந்த தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,
கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடன் இணைந்து,
நீதியமைச்சர் பதவியேற்று செயற்படத்தொடங்கினார்.
அவர் நீதியமைச்சராய் இருந்த காலத்திலேயே,
இஸ்லாமியர்களுக்குப் பெரும் அநீதி விளைவிக்கப்பட்டது.
என்ன காரணத்தினாலோ அந்த நேரத்தில்,
அந்த அநீதிகளை எதிர்க்கும் திறனின்றி,
மௌனித்திருந்த அவரது செயல் இஸ்லாமியர்களை மனம் நோகச் செய்தது.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட அரசியல் புரட்சியில்,
புத்திசாலித்தனமாய் ஹக்கீம் எதிரணியில் சேர்ந்து,
புதிய ஜனாதிபதியின் வெற்றியில் பங்கேற்றார்.
அந்த வெற்றியில் புதிய ஜனாதிபதிக்குக் கிடைத்த  இஸ்லாமிய வாக்குகள்,
முஸ்லிம் காங்கிரசுக்கான வாக்குகள் தானா என்பதை,
இம்முறைத் தேர்தல் களம்தான் தீர்மானிக்கப்போகிறது.
வடக்கில் பலம் பெற்றிருக்கும் ரிஷாத் பதியுதீன்,
அப்பகுதியில் தனித்தலைமையாய் வளர்ந்து வருவதும்,
முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய தலையிடியில் ஒன்று.
இ;ங்ஙனமாய் இத்தேர்தல் களம்,
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையையும் ஓரளவு தடுமாறவே வைத்திருக்கிறது.
***
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 

இங்கு இவர்களை எவராலும் அசைக்க முடியாது என்று
மலையகத்தில் வலிமை பெற்றிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
திகாம்பரம், ராதாகிருஷ்ணன், மனோகணேசன் ஆகியோரது கூட்டில் எழுந்த
தமிழ்; முற்போக்கு கூட்டணியால் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.க. எடுத்த பிழையான முடிவு,
புதிய ஜனாதிபதியோடு இணைந்து செயலாற்றிய
தமிழ் முற்போக்கு கூட்டணியை பலப்படுத்தி இருக்கிறது.
வீழ்ந்த தமது பெறுமதியை உயர்த்திக்கொள்ளவென
அண்மையில் அவர்கள் நடாத்த தொடங்கிய
மெதுவாக வேலைசெய்யும் போராட்ட முயற்சியும் சலசலத்துப்போயிற்று.
நடைபெற இருக்கும் தேர்தலில் இ.தொ.க.,
ஜனநாயக ஐக்கிய முன்னணியை சார்ந்து களத்தில் குதித்தாலும்
அது மைத்திரியையா? மகிந்தவையா? ஆதரிக்கிறது என்பதில்
தெளிவற்ற முடிவோடு இருப்பதை
அண்மையில் அதனைக் கேள்வியாய்க்கேட்டு
ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இம்முறை வரப்போகும் தேர்தல் முடிவே
மலையக்த்தின் தலைமை மாற்றம் பற்றிய தெளிவை ஏற்படுத்தப்போகிறது.
இங்ஙனம் புதிய அணியினால் ஏற்பட்டிருக்கும் அதிர்வு
தேர்தல் களத்தில் இ.தொ.க. தலைமையையும் தடுமாறவே வைத்திருக்கிறது.
***
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு

வடகிழக்கில் கடந்த காலங்களில் தமிழரின் தனித்த தலைமையாய்,
தம்மைக் காட்ட முயன்று வந்த கூட்டமைப்புக்குள் பெரும் விரிசல்கள் தோன்றியுள்ளன.
புலிகள் போன பின்பு கூட்டமைப்பில் இணைந்த கட்சிகள்,
வாத்தியார் இல்லாத மாணவர்களாய் வகுப்பைக் குழப்பத் தொடங்கி உள்ளன.
*கூட்டமைப்பைக் கட்சியாய்ப் பதிவு செய்வதில் வந்த பிரச்சினை.
*வடமாகாண முதலமைச்சர் பதவித் தேர்வில் வந்த பிரச்சினை.
*வடமாகாண அமைச்சர்கள் தேர்வில் வந்த பிரச்சினை.
*சத்தியப்பிரமாணம் செய்வதில் வந்த பிரச்சினை.
*இரணைமடு குடிநீர்த்திட்டத்தில் வந்த பிரச்சினை.
*எதிர்க்கட்சித்தலைவருடன் தேசியக்கொடி காட்டிய பிரச்சினை.
*சுதந்திரதின விழாவில் சிலர் கலந்து கொண்ட பிரச்சினை.
*பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் நிதிபெற்றதில் வந்த பிரச்சினை.
*வெளிநாட்டில் நடந்த பேச்சுவார்த்தை சம்பந்தமாய் வந்த பிரச்சினை.
*போராளிகளுடன் இயங்கமுடியாது என்ற முதலமைச்சரின் கூற்றால் வந்த பிரச்சினை.
*வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சுயேட்சையாய் தேர்தலில் குதிக்கப் போவதாய்க் கிளப்பிய பிரச்சினை.
*கட்சியின் அனுமதியின்றி குருநாகலில் தேர்தலில் குதித்திருக்கும் சிவாஜிலிங்கத்தால் வந்திருக்கும் பிரச்சினை.
*புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டாற்போல, ஜனாதிபதியைப் பார்த்து தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாய் வடக்கு முதலமைச்சர் கிளப்பியிருக்கும் புதிய சர்ச்சையால் விளைந்திருக்கும் பிரச்சினை.

இப்படி அடுத்தடுத்து பிரச்சினைகளைச் சந்தித்து,
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆடிப்போயிருக்கிறது.
ஒரு கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்ற வடமாகாண முதலமைச்சர்,
தேர்தலில் அக்கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய முன்வராததோடு,

"என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத்தேர்ந்தெடுக்கின்றார்களோ, அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒரு பிரச்சினை அல்ல எனவும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்கள் நலனுக்காக, அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும்" என,

முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முக்கியமாக கூட்டமைப்புக்குள் இணைந்திருக்கும் தலைவர்களை
அது ஆடவே வைத்திருக்கிறது.
மக்கள் கூட்டமைப்பிற்குள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ என்றுகூட சொல்லாமல்
பொதுவாக யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ என்று முதலமைச்சர் சொன்னது
எவரை மனதில் வைத்து என்று தெரியாமல்
கூட்டமைப்பின் தலைவர்கள் குழம்பிப்போய் நிற்கின்றனர்.
கூட்டமைப்பின் சார்பில் தெரிவானதை நினைவூட்டி,
வடக்கு முதல்வர் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்காக,
நிச்சயம் உழைப்பார் என ஒரு தலைவரும்,
தேர்தல் முடிந்த பிறகு அவர் அறிக்கைபற்றி விசாரிப்போம் என இன்னொரு தலைவரும்,
தலைமை நிலைவிட்டுக் கீழிறிங்கி வெளிவிடும் அறிக்கைகள் கண்டு,
தற்போதைய கூட்டமைப்பு ஒரு தலைமையின் கீழ் இயங்குகிறதா என,
தமிழ் மக்கள் குழம்பியிருக்கின்றனர்.
கூட்டமைப்பினர் தமது தேர்தல் வெற்றி நோக்கி,
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை,
துரோகியாய் இனங்காட்டி ஓரங்கட்டிய துணிவில்
பத்திரிகையாளார் வித்தியாதரன் தலைமையில்,
முன்னாள் புலிப்போராளிகள் அமைத்த அணியையும்,
புலனாய்வுத்துறையின் ஆதரவோடு அவர்கள் இயங்குவதாய் கூறி,
ஓரங்கட்ட முனைந்தது போராளிகளின் மனதை மட்டுமன்றி,
தமிழ் மக்களின் மனதையும் புண்படச்செய்துள்ளது.
ஆனால் இவர் தம் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டு,
இவர்களின் தளர்வுகளை இனங்காட்டி,
தேர்தலில் குதித்திருக்கும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களின் அணியை,
இவர்களால் பழிகூறி முற்றாய் நிராகரிக்க முடியவில்லை.
அவர்கள் பின் திரண்டிருக்கும் அறிவுலக இளைஞர்களின் எழுச்சி கண்டும்,
தமக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் கண்டும்,
கூட்டமைப்புத் தலைமையும் இன்று தடுமாறியே நிற்கிறது.
***
ஈ.பி.டி.பி. கட்சி 

புலிகளின் போராட்டக் காலத்திலேயே அவர்களை எதிர்த்து நின்றதால்,
தமது பாதுகாப்புக்கருதி பேரின அரசுகளுடன் இணைந்து செயற்பட்ட காரணத்தால்,
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் அவர்களின்; ஈ.பி.டி.பி கட்சி,
தன்மேல் விழுந்த துரோகப்பட்டத்தை நீக்க முடியாது தடுமாறி நிற்கிறது.
இடைக்காலங்களில் அரசசார்போடு பதவி பெற்று இயங்கியதால்,
மக்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்த,
செல்வாக்கை மட்டும் நம்பியே அக்கட்சி இன்று தேர்தல் களத்தில் நிற்கிறது.
கடந்த தேர்தலில் அரசின் நெருக்கடியால் தனது சுய சின்னத்தை இழந்து,
அரசசின்னத்தில் தேர்தலில் குதித்ததால்,
அரசின் மீதான தமிழர்களின் அத்தனை அதிருப்திகளையும் தமதாக்கிக் கொண்டு,
ஓரளவு தனித்த இவர்கள்
இம்முறை சுயசின்னத்தில் தேர்தலில் குதிக்கின்றனர்.
முன்பு அரசுடன் இணைந்திருந்த காலத்தில்,
அவ் அரசை எதிர்த்து தமிழர் சார்பாக ஏதும் செய்யமுடியாத,
கையறு நிலையில் இருந்த இவர்கள்
மைத்திரி ஜனாதிபதியானதும்,
தமிழர் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனவும்,
தமிழர்தம் உரிமை நிலங்கள் வி;டுவிக்கப்படவேண்டும் எனவும்,
புதிய பாராளுமன்றத்தில் எழுப்பிய குரல்கள்,
இவர்கள் இக்கோரிக்கைகளை ஏன் முன்பு வைக்கவில்லை எனும் கேள்வியை எழுப்பி,
இவர்களின் நேர்மைமீதான ஐயப்பாட்டினை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
இவர்களின் கட்சி சார்ந்த சந்திரக்குமார் ஒருவரைத் தவிர,
மற்றெவரும் பதவிக்காலத்தில் மக்கள் ஆதரவினைப் பெற்று நிமிரவில்லை என்பது மற்றொரு உண்மை.
புலிகள் காலத்தில் அவர்களோடு இணைந்து இயங்கிய பலரை,
இவர்கள் தம்வயப்படுத்தி தேர்தலில் நிறுத்தியிருக்கும் செயலினையும்,
தமிழ்மக்கள் பெரிய அளவில் ரசிக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.
இம்முறை சுயசின்னத்தில் நிற்பதால்,
இதுவரை இவர்கள் மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் செய்த உதவிகள் வாக்குகளானால்தான்
இவர்கள் சிறிய வெற்றியையேனும் அடைதல் கூடும்.
அவ்வெற்றி தம் கைசேருமா? என இக்கட்சியும் தடுமாறியே நிற்கிறது.
***
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ஒரு காலத்தில் கொழும்பில் இருந்தபடி,
தமிழர் சார்பான கருத்துக்களைத் துணிந்து வெளியிட்டு,
தன் சட்ட அறிவால் தமிழர்தம் உரிமைக்குரலை உலகளாவி வெளிப்படுத்தி,
அதனாலேயே உயிர் பறிக்கப்பட்ட,
திரு குமார் பொன்னம்பலம் அவர்களின் மைந்தரான,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் இக்கட்சி,
தேர்தல் களத்தில் இம்முறை,
தமிழ் தேசியக்கூட்டமைப்பினை மிரட்டும் தகுதி பெற்றிருக்கிறது.
ஆரம்பத்தில் கூட்டமைப்போடு இணைந்திருந்து,
பின் கொள்கை முரண்பாட்டால் வெளியேறிய,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்,
கூட்டமைப்பில் இணைந்திருந்து,
பின்னர் கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்ட,
செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் இணைந்து,
உருவாக்கிய இக்கட்சி ஒருநாடு இருதேசம் என்ற கொள்கையை முன்வைத்து,
தமிழ் வாக்காளர்களை ஈர்க்க முனைந்துள்ளது.
ஒருகாலத்தில் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டு,
பின்னர் மெல்ல மெல்ல கைநழுவவிடப்பட்ட சமஷ்டிக் கொள்கையை,
மீண்டும் தூசுதட்டி வெளிக்கொணர்ந்து மக்கள் உணர்ச்சியைக் கிளப்பி,
அரசியல் களத்தில் சற்று அழுத்தமாய்க் கால் ஊன்றியுள்ளது இக்கட்சி.
அறிவுலகத்தின் ஆதரவும் கூட்டமைப்பின் உள்குத்துகளும்,
இக்கட்சிக்கான இன்றைய பலமாகியிருக்கின்றன.
சமஷ்டி ஆட்சி பெறுவதற்கான சரியான வழிமுறையை,
உறுதியாய் உரைக்கமாட்டாத இவர்களது பலயீனம்,
அளவுக்கதிகமான கோரிக்கைகளின் ஆபத்தை,
கடந்த கால வரலாற்றில் உணர்ந்திருக்கும் தமிழ்மக்களின் அச்சம்,
உண்மையை ஆராயாது ஒருவர் பின்னே ஓடும் தமிழ்மக்களின் ஆட்டுமந்தை இயல்பு,
தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அறிமுகம் இல்லாத புதுமுகங்கள்,
ஊடகங்களின் ஒத்துழைப்பின்மை என்பவற்றால்,
இக்கட்சித் தலைமையும் இன்றைய தேர்தல் களத்தில் தடுமாறியே நிற்கிறது.
***

புதியபோராளிகளின் கட்சி

முன்னாள் பத்திரிகையாளர் திரு வித்தியாதரன் அவர்களால்,
இம்முறை தேர்தல் களத்தில் முன்தள்ளப்பட்டிருக்கும் இக்கட்சியின் நிலையும்,
மகிழ்ந்து சொல்லத்தக்கதாக இல்லை.
ஒரு பத்திரிகையாளனாய் போர்க்காலத்தில்,
வித்தியாதரன் செய்த துணிந்த சாதனைகளை,
எவரும் சுலபமாக புறந்தள்ளிவிட முடியாது என்பது உண்மையே.
புலிகளின் தலைவர் பிரபாகரன், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆகியோரது,
முழுமையான நட்பைப் பெற்று அவர்களின் நம்பிக்கைக்குரியவராய் இயங்கி வந்தவர் வித்தியாதரன்.
அக்காலத்தில் அவர் செயலாற்றிய உதயன் பத்திரிகையூடு,
தமிழர் உரிமை சம்பந்தமான பல காரியங்களை துணிந்து சாதித்தவர் அவர்.
உதயன் பத்திரிகையின் உரிமையாளரான,
மைத்துனர் சரவணபவனும் வித்தியாதரனும்,
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகச் செயற்பட்டு,
அகமும் புறமுமாக நின்று ஆற்றிய வேலைகள் பல.
தனிமனிதனாய் வித்தியாதரன் பாலசிங்கத்தின் இறுதிக்கிரியைகளில் கலந்து திரும்பியதும்,
கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு,
அதிசயமாய் மீண்டு வந்ததும் பழைய வரலாறுகள்.
புலிகளின் தோல்வியின் பின் பலம் பெற்ற கூட்டமைப்பு,
தமது தேர்தல் வெற்றிகளுக்கு ஒரு பத்திரிகையின் தேவையை அறிந்து,
இவர்களுக்கு ஓர் பாராளுமன்ற இருக்கையை ஒதுக்க முன்வர,
வித்தியாதரன் பத்திரிகையாளனா? பாராளுமன்ற உறுப்பினனா? என,
மனம் குழம்பி நின்ற வேளையில்,
கண்ணிமைக்கும் நேரத்தில் சரவணபவன் அப்பதவியைத் தட்டிச் சென்றார்.
அதன் பின்னர் மாகாண முதலமைச்சர் பதவி,
தனக்கு வருமென விரும்பிய வித்தியாதரன் அம்முயற்சியிலும் தோல்வியுற்றார்.
இம்முறையும் தான் நிராகரிக்கப்பட்ட கோபத்தில்,
எந்த இடத்தில் தொட்டால் தமிழர் மனம் நெகிழும் என அறிந்து,
புதியதோர் உலகம் செய்ய முனைந்து,
வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியே இக்கட்சியாகும்.
போராளிகளுக்கான மறுவாழ்வு என வித்தியாதரன் ஆயிரம் சொன்னாலும்,
இது வித்தியாதரனின் அரசியல் மறுவாழ்வுக்கான அடித்தளமே எனக் கருதுவாரும்,
இருக்கவே செய்கின்றனர்.
அத்தோடு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கூட்டமைப்பு,
புலனாய்வுத் துறையின் பின்னணியில் இவர்கள் இயங்குவதாய்,
அவிழ்த்து விட்டிருக்கும் ஆதாரமற்ற கதையும்,
மக்கள் மத்தியில் ஓரளவு எடுபடவே செய்திருக்கிறது.
அதுமட்டுமன்றி வித்தியாதரன் ஒரு மூத்த ஊடகவியளாளனாய் இருந்தும்,
அவரது கட்சியின் மீதும் கொள்கைகள் மீதும்,
பிற ஊடகங்கள் செய்யும் இருட்டடிப்பும்,
அவர் கட்சியை தேர்தல் களத்தில் ஓரளவு தடுமாறவே வைத்திருக்கிறது.

இப்படியாய் தலைமைகள் தடுமாறி நிற்கும் தேர்தல் களமாய் நடைபெறப்போகும் தேர்தல்களம் அமைந்திருப்பது ஓர் புதுமையே. தேர்தல் முடிவு வந்தபின்னர்தான் தடுமாறும் இத்தலைமைகளில் எவை எவை வீழப்போகின்றன? எவை எவை வாழப்போகின்றன எனும் உண்மை தெரியவரப்போகிறது. விடைதெரியாத வினாக்களோடு காத்திருக்கும் தலைவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதிக்காய் காத்திருக்கின்றனர். நாமும் காத்திருப்போம்.
*****
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.