அரசியற்களம் 17 | திறன் அறிந்து சொல்லுக சொல்லை!
அரசியல்களம் 07 Nov 2015
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
தமிழ்த்தலைவர்களுள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்வார் என,
பலரும் நம்பியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய,
அண்மைக்காலத் தடுமாற்றங்கள் சிலவே அவ்வருத்தத்திற்கான காரணங்கள்.
அதுபற்றி விரிவாய்ச் சொல்லுகிறேன்.
✸✸✸
அதற்கு முன்பாக சில நினைவூட்டல்கள்.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ஆயுதப் போராட்டச்சுழலுள் அகப்பட்டு,
சிக்கிச் சீரழிந்த நம் தமிழினம்,
அப்போராட்டக் காலகட்டத்தில்,
ஜனநாயக எல்லைகளைக் கடந்து வன்முறையின் வழியில் நின்ற,
தீவிரவாதத் தலைவர்களின் கைவயப்பட்டே இயங்கியது.
அத்தலைவர்களின் வீரமும், தியாகமும்,
நம்மையும், உலகையும் வியக்கவைத்தது என்னவோ உண்மைதான்.
எனினும் இக்காலகட்டத்தில்,
நாம் தகுதிபெற்ற அரசியல் தலைமையை,
பெற்றிருக்கவில்லை என்பது மட்டும் நிதர்சனம்.
✸✸✸
இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்பாக,
கற்ற, கண்ணியமான தலைவர்கள் பலர் தமிழர்தம் பிரதிநிதிகளாய்,
இலங்கைப் பாராளுமன்றத்தை அலங்கரித்தனர்.
அவ் ஆரம்பகாலகட்டத்தில் பாராளுமன்றினுள் இருந்த,
தந்தைசெல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், திருச்செல்வம் போன்ற
தமிழ்த் தலைவர்களை,
அப்போதைய சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட,
போற்றிக் கண்ணியப்படுத்தியது வரலாறு.
✸✸✸
நாட்டினுள் இனத்துவேசம் மெல்லமெல்ல வளரத்தொடங்கிய,
அடுத்த காலகட்டத்தில்,
இரண்டாம்கட்டத் தமிழ்த்தலைவர்களாய்,
பாராளுமன்றத்துள் நுழைந்த,
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், தர்மலிங்கம், நவரட்ணம்,
ஆனந்தசங்கரி, சம்பந்தன் போன்றோர்,
சிங்களவர்க்கு எதிராக,
தமிழர்தம் உரிமைப்போராட்டத்தில் முனைப்புக் காட்டியபோதும்,
சிங்களத்தலைவர்களால் மதிப்புடனேயே பார்க்கப்பட்டனர்.
அதற்கு அவர்தம் அறிவும், ஆற்றலும், ஆளுமையுமே,
காரணங்களாய் இருந்தன.
✸✸✸
போராட்டம் வெடித்ததன் பின்னான கடந்த முப்பதாண்டு காலத்தில்,
வலிமை பெற்ற தமிழ்த்தலைவர்கள்,
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
செய்தவர்களும் அங்கு சுயத்தோடு இயங்கமுடியவில்லை.
அதுமட்டுமன்றி, ஆற்றலாளர்களாய்த் திகழ்ந்த,
இரண்டாங்கட்டத் தமிழ்த்தலைவர்களுள் பலர்,
போராட்ட அலைகளால் அநியாயமாய் விழுங்கப்பட்டதும் வரலாறு.
✸✸✸
2009 இல் நிகழ்ந்த ஆயுதப்போராட்ட முடிவோடு,
இக் குழப்பச் சூழல்கள் ஓரளவு தீர்ந்தன.
சுயத்தோடு இயங்கும் வலிமைபெற்று,
மீண்டும் தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்றத்துள் நுழைந்தனர்.
அங்ஙனம் பாராளுமன்றம் சென்றோரில்,
அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றால் முதிர்ச்சி பெற்றிருந்த,
சம்பந்தனைத் தவிர,
மற்றையவர்கள் எல்லோரும் பெரும்பாலும் புதிய முகங்களாகவே இருந்தனர்.
அவர்களுள் ஒருசிலர் தமது போராட்டத் தகைமையை முன்நிறுத்தி உள்நுழைந்தனர்.
வேறு சிலர் எதற்காக உள் நுழைய அனுமதிக்கப்;பட்டனர் என்று,
எவருக்கும் காரணம் தெரியாமலே உள்நுழைந்தனர்.
இங்ஙனமாய் பாராளுமன்றினுள் இடம்பிடித்த,
அம் மூன்றாங்கட்டத் தமிழ்த்தலைவர்களுள்,
அறிவு, ஆற்றல், ஆளுமை என்பவை பெற்று,
முன்னைத் தலைவர்களை ஒத்துத் திகழ்ந்தவர்,
சுமந்திரன் ஒருவரே! என்பது பலரதும் கருத்து.
✸✸✸
பாராளுமன்றத்தில் சுமந்திரன் ஆற்றிய உரைகளும்,
தமிழரசுக்கட்சியையும், கூட்டமைப்பையும் சரியாய் வழிப்படுத்தி,
அவற்றைப் பின்னின்று இயக்கிய அவரது ஆற்றலும்,
நடுநிலையாளரை மகிழ்வித்தது உண்மை.
தனது சட்ட நிபுணத்துவத்தாலும்,
உலகத்தொடர்புகளாலும்,
யதார்த்தம் அறிந்த நடைமுறைகளாலும்,
முதலாம், இரண்டாம் கட்டத்தலைவர்கள் போல,
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தையும் ஈர்த்தார் சுமந்திரன்.
✸✸✸
கூட்டமைப்பினதும், தமிழரசுக்கட்சியினதும் தலைவர்களாய்,
சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இருந்த போதும்,
அண்மைக்காலமாக இவ் அமைப்புக்களைச் சுமந்திரனே வழி நடத்திச் செல்வது,
அரசியல் தெரிந்தார் அனைவரும் அறிந்த உண்மை.
அவ்வத்தலைவர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளின் பின்னால்,
சுமந்திரனின் வலிய கரம் இருந்தது என்பது பரகசியமான விடயம்.
✸✸✸
அவரது அறிவும், ஆற்றலும், ஆளுமையுமே,
அத்தகுதிகளைச் சுமந்திரனுக்கு வழங்கின என்பதனை,
யாவரும் ஒப்பினர்.
தனது உலகத் தொடர்புகளாலும், சட்ட அறிவாலும்,
இவ் இடைக்காலத்தில் சுமந்திரன் இரகசியமாய்ச் சாதித்தவை பல.
இனப்பகையினின்றும் சற்று வெளியே வந்து,
இலங்கையில் மீண்டும் இன ஒற்றுமையை உருவாக்க,
சுமந்திரன் எடுத்த சில முன்னெடுப்புக்கள்,
தமிழ் உணர்ச்சியாளர்களால் வெறுக்கப்பட்டபோதும்,
யதார்த்தம் அறிந்த நடுநிலையாளர்களால் வரவேற்கப்பட்டன.
✸✸✸
ஜனவரி 8 இன் பின்னாக இங்கு நடந்த புதிய அரசியல் மாற்றத்தின் பின்னர்,
இலங்கை பற்றிய உலகநாடுகளின் பார்வை திடீரென மாற்றமடைய,
அந்த நிலைமையைச் சரிவர உணர்ந்து கொண்டு,
உலகத்தோடு பகைக்காமலும்,
அதே நேரத்தில் யதார்த்தம் உணர்ந்து சில விட்டுக்கொடுப்புக்கள் செய்தும்,
இனத்தை வழிப்படுத்த நினைந்த சுமந்திரனின் மதியூகம்,
அறிஞர்களால் வரவேற்கப்பட்டது.
புதிதாய் அமைந்த அரசுக்கு அவகாசம் கொடுத்து,
மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையை,
ஆறுமாதம் ஒத்திவைக்க ஐ.நா.சபை முன் வந்தபோது,
'அதனால் பாதகமில்லை' என்று அறிவித்து,
உணர்ச்சியாளர்களின் எதிர்ப்பினை மீறி,
உலகின் நன்மதிப்பினைப் பெற்றார் சுமந்திரன்.
✸✸✸
அதுமட்டுமன்றி அவ் அறிக்கைக்காய்,
ஊர்வலம், கொடும்பாவியெரிப்பு என,
ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பலைகள்,
ஒட்டு மொத்த தமிழ்மக்களின் கருத்தல்ல என்பதை நிரூபிப்பதற்காக,
அதுவரை தேசியப்பட்டியலில் பாரளுமன்றம் சென்று வந்த அவர்,
இம்முறை தேர்தலில் நின்று மக்கள் ஆதரவை அமோகமாகப் பெற்று வெற்றியீட்டி,
தன்னிலையை துணிவுடன் உறுதி செய்தார்.
நிறைவேற்றப்பட்ட ஐ.நா. சபைத் தீர்மானத்தை,
முன்னமே ஊகித்துச் சொன்னதன் மூலம்,
தனது அரசியல் தீர்க்கதரிசன அறிவை,
அல்லது உலகநாடுகளுடனான தன் தொடர்பை,
அவர் வெளிப்படுத்தியபொழுது பலரும் வியந்தது உண்மை.
✸✸✸
தக்க தலைமையின்றித் தவித்திருந்த தமிழினத்திற்கு,
மீண்டும் அறிவும், ஆளுமையும், நிதானமும் கொண்ட,
ஒரு தலைவர் கிடைத்துவிட்டாரோ என,
பலரும் நினைந்து மகிழும் வண்ணம்,
தனித்துவமான தனது செயற்பாடுகளால்,
சுமந்திரன் அனைவரையும் ஈர்த்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாய்,
அண்மைக்காலமாக வெளிவரும் சுமந்திரனின் சில அறிக்கைகள்,
அவரும் தடுமாறத் தொடங்கிவிட்டாரோ? என்றும்,
தொடர்ந்த வெற்றிகள், அவரது நிதானத்தையும் குழப்பிவிட்டனவோ? என்றும்,
தமிழ்மக்களைக் கவலையடையச் செய்திருக்கின்றன.
✸✸✸
அங்ஙனம் தமிழ்மக்களைக் கவலை அடையச் செய்த விடயத்தில்,
அவர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் முக்கியம் பெறுகின்றன.
ஐ.நா.சபைத் தீர்மானம் நிறைவேற இருந்த காலத்தில்,
'இங்கு நடந்தது இன அழிப்பே!" என,
வடமாகாண சபையால் அவசரமாய் அனுப்பப்பட்ட பிரேரணை,
ஐ.நா. சபையில் கவனிக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டது.
இலங்கை பற்றிய ஐ.நா. சபைத் தீர்மானத்தின் பின்பாக,
'இங்கு நடந்தது இன அழிப்பு இல்லை' என,
சுமந்திரனால் விடப்பட்ட அவசர அறிக்கை,
மேற்படி அறிக்கைகளில் ஒன்று.
✸✸✸
மற்றது அண்மையில் சுமந்திரனால் வெளியிடப்பட்டிருக்கும்,
'முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் வெளியேற்றியது,
இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையே!' என்னும் அறிக்கை.
சுமந்திரனது இவ்விரண்டு அறிக்கைகளும்,
இதுவரையான அவரது நடவடிக்கைகளுக்குப் பொருத்தமின்றி இருப்பதோடு,
தக்க தலைவரென அவரை மதித்த பலரையும் தலைகுனியவும் செய்திருக்கின்றன.
✸✸✸
நடந்தது இன அழிப்பு இல்லை என்ற,
அவரது முதல் அறிக்கைக்கான சட்ட ஆதாரங்களை,
சுமந்திரன் அப்போது வெளியிட்டிருந்தார்.
சட்ட அடிப்படையில் அவரது கூற்று சரியானதாகவும் இருக்கலாம்.
பிரச்சினை அதுவல்ல.
சுமந்திரனால் அந்த அறிக்கை வெளியிடப்படவேண்டியதன் அவசியம் என்ன?
இதுவே பிரச்சினைக்குரிய கேள்வியாகியது.
இன அழிப்பினைச் செய்த பேரினவாதிகளால்,
அல்லது இன அழிப்புக்கருத்தை நிராகரித்த ஐ.நா. சபையினரால்,
வெளியிடப்பட்டிருக்கவேண்டிய அறிக்கை அது.
அதனைத் தனது சட்ட அறிவினால் நிரூபணம் செய்து,
சுமந்திரன் வெளியிட்டதன் நோக்கம் என்ன?
நிச்சயம் இவரது அந்த அறிக்கை,
இனநலம் சார்ந்ததாய் அமையவில்லை என்பது மட்டும் திண்ணம்.
✸✸✸
இவ்விடயத்தில்,
சுமந்திரனின் சமநிலைத் தடுமாற்றத்திற்கான காரணம் வெளிப்படையானது.
கூட்டமைப்புத் தலைவர்களோடு ஆலோசிக்காமல்,
வடமாகாணசபையில் இன அழிப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதும்,
அப் பிரேரணை கூட்டமைப்பை மீறி ஐ.நா.சபைக்குக் கொண்டு செல்லப்பட்டதும்,
வடமாகாண முதலமைச்சர் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்தியிருக்கும் பிளவும்,
சுமந்திரன் போன்றோரை வெறுப்படையச் செய்தது வெளிப்படை.
அவ்வெறுப்பின் வெளிப்பாடாகவே,
எதிர்ப்பாளர்களின் பிரேரணை ஐ.நா.சபையில் நிராகரிக்கப்பட்டதும்,
சமநிலை தவறி, உள்மகிழ்ந்து,
தம்மை மீறிச்சென்றோரின் தலையில் தட்டுவதாய் நினைந்தே,
சுமந்திரனால் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டது என்பதை,
ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறது.
✸✸✸
ஆனால் ஒன்று.
எதிராளியின் பிழை நம் பிழையைச் சரி செய்யாது என்பது,
நிச்சயமான உண்மை.
எதிரிக்குச் சகுனப்பிழை வரவேண்டும் என்பதற்காக,
தன் மூக்கை அரிந்துகொள்ளும் செயல்,
நிச்சயம் அறிவின்பாற்பட்டதன்று.
சுமந்திரனால் அவசரமாக வெளியிடப்பட்ட இவ் அறிக்கை,
கூட்டமைப்புக்குள் இருந்த அவரது எதிராளிகளை காயப்படுத்தியதோ இல்லையோ,
நம் இனத்தை அது காயப்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இது சுமந்திரனின் முதற்சறுக்கல்.
✸✸✸
அவரது இரண்டாவது அறிக்கையும்,
நிச்சயம் காலம் அறியாது வெளியிடப்பட்ட ஒன்றே!
அவர் அவ்வறிக்கையை ,
யாழிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட,
இருபத்தைந்தாண்டு நிறைவு நிகழ்வில் வெளியிட்டிருக்கிறார்.
அக்காலத்தில் புலிகளின் அப்பாதகச்செயலுக்கு,
தமிழ் மக்கள் தம் எதிர்ப்பை தெரிவிக்காதது,
பிழையெனக் கொதித்திருக்கிறார்.
எல்லா யதார்த்தங்களையும் விளங்கும் சுமந்திரன்,
இந்தவிடயத்தில் யதார்த்தம் உணராது பேசியிருப்பது வியப்புத் தருகிறது.
ஆயுதங்கள் ஆட்சி செய்த அக்காலத்தில்,
தமிழ் மக்கள் சுயமாக ஏதும் செய்யமுடியாதிருந்த உண்மையை,
சுமந்திரன் அறியாதவரா என்ன?
தமிழ் மக்களை கேள்விகேட்கும் சுமந்திரன்,
புலிகள் இருந்த காலத்தில் இத்தகைய வலிமையான ஓர் அறிக்கையை,
ஏன் விடவில்லை என்று கேட்டால், அவரால் பதில் சொல்லமுடியுமா?
✸✸✸
புலிகள் பற்றிய கருத்து முரண்பாடு பலருக்கும் உண்டு.
ஆனாலும் அவர்களது தியாகமும், வீரமுமே,
நம் பிரச்சினையை உலகளாவி எடுத்துச் சென்றது என்பதையும்,
இன்று இலங்கையை உலகமன்றின்முன் நிறுத்தி,
தமிழர்க்கான நீதி வழங்கும் அழுத்தத்தை கொடுத்திருக்கிறது என்பதையும்,
எவரும் மறுக்கமுடியாது.
✸✸✸
புலிகளின் அழிவுக்குப் பின்னர் உலகம் அழுத்தம் கொடுக்க,
தமிழர் பிரச்சினையில் இறங்கி வரவேண்டிய நிலைமைக்கு,
பேரினவாதிகள் ஆளாகியிருக்கும் இன்றைய சூழ்நிலையில்,
இனம், மதம் கடந்து தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு,
தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்க,
அதை மறந்து, என்றோ நடந்து முடிந்த ஒரு தவற்றினை,
மீண்டும் ஊதிப் பெருதாக்கும் ஆபத்தை,
தனது கருத்துக் கொண்டிருப்பதைக் கூட உணராமல்,
சுமந்திரனால் வெளியிடப்பட்டிருக்கும் மேற்படி முஸ்லிம்கள் பற்றிய அறிக்கை,
நிச்சயம் அவருக்கு மதிப்பை உண்டாக்கக் கூடிய ஒன்றல்ல.
✸✸✸
மனவருத்தத்துடன் தம்மண்ணை விட்டு வெளியேறிய,
முஸ்லிம் சகோதரர்களே,
பகை மறந்து, மீண்டும் தமிழருடன் ஒன்றுபட்டு வாழவேண்டும் என,
உண்மையாய் நினைக்கத் தலைப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில்,
புலிகளைத் தாழ்த்துவதாய் நினைத்து,
சுமந்திரனால் வெளியிட்டிருக்கும் மேற்படி அறிக்கை,
ஆறிக்கொண்டிருக்கும் மனப் புண்களைக் கிளறிவிட்டு,
தமிழர்தம் ஒற்றுமையை நிச்சயம் குழப்பும் என்பதை,
எவரும் மறுக்கத் துணியார்!
✸✸✸
'விநாசகாலே விபரீத புத்தி' என்பது ஒரு வடமொழித்தொடர்.
தமது விபரீத புத்தியால் விநாசங்களுக்கு வழிவகுத்து,
பல தலைவர்களும் தமிழினத்தை பேரிருளில் தள்ளினர்.
இதுவரை அவ் இருளுள் அகப்பட்டு,
இன்னலுற்றுக் கிடந்த தமிழர்தம் வாழ்வில்,
மெல்லிய ஒளிக்கீற்றுக்கள் விழத்தொடங்கியிருப்பதால்,
விடிவு வருமோ? எனத் தமிழர்கள் ஏங்கியிருக்கும் இன்றைய நிலையில்,
யதார்த்தம் உணர்ந்து இனத்தை வழிநடத்துவார் என,
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சுமந்திரனின் மேற்படி தடுமாற்றங்கள்,
நிச்சயம் மகிழ்வு தருவதாய் இல்லை.
✸✸✸
சுமந்திரன் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டியிருக்கிறது.
➥ உலகத்தோடும் பேரினவாதிகளோடும் சூழல் அறிந்து நாம் சில சமரசங்களைச் செய்யவேண்டியிருப்பது உண்மையே! ஆனாலும் அந்தச் சமரச முயற்சிகள் தமிழினத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுப்பதாய் நிச்சயம் இருந்து விடக்கூடாது என்பது முதலாவது விடயம்.
➥ தனது அறிக்கைகளுக்கெல்லாம் அண்மைக்காலமாக சட்ட ரீதியிலான நியாயப்படுத்தல்களைச் சுமந்திரன் வெளியிட்டு வருகிறார். அவர் வெறும் சட்டஅறிஞராக மட்டும் இருந்தால் அவரது நியாயப்படுத்தல்களை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சட்ட அறிஞர் எனும் அந்நிலையைக் கடந்து, தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் எனும் உயர் நிலையை இன்று அவர் எய்தியிருக்கிறார். எனவே, அவரது அறிக்கைகள் வெறும் சட்ட அறிஞரின் அறிக்கைகளாய் மாத்திரம் இல்லாமல் தமிழினத்தின் தலைவர் ஒருவரின் அறிக்கைகளாய் இருக்கவேண்டுமென்பது இரண்டாவது விடயம்.
➥ இனத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் நடக்கும் முரண்பாடுகளை மனங்கொண்டு, அவசரப்பட்டுத் தான் எறியும் வார்த்தைகள், இனத்தைக் காயப்படுத்தாமல் இருக்கவேண்டுமெனும் பொறுப்புணர்ச்சியை நிச்சயம் பொதுமக்கள் சுமந்திரனிடம் எதிர்பார்க்கின்றனர் என்பது மூன்றாவது விடயம்.
➥ இன்று அரசுப் பொறுப்பேற்றிருக்கும் பேரினவாதத் தலைவர்கள் தமது முன்னை நிலையிலிருந்து சற்று இறங்கி வந்திருக்கிறார்கள் என்பது உண்மையே! ஆனால் அது அவர்தம் மனமாற்றத்தால் மட்டும் ஏற்பட்ட விடயம் என்று நினைந்தால் அது தவறு! உலகம் தரும் அழுத்தம், வல்லரசுகளின் குறிவைப்பு இவற்றிலிருந்து தப்பவே இலங்கை அரசு 'கருவாடு தின்னாத கள்ளப்பூனையாய் சாமியார் வேஷம் போடுகிறது.'
எந்தப்பகையும் திடீரென மாறிவிடாது. அவர்களது அப்பொய்மாற்றத்தை மெய்மாற்றமாக்க, நாமும் சில பங்களிப்புக்களைச் செய்தே ஆகவேண்டும் என்பது நிஜமே! இனங்களுக்கிடையிலான நட்பும், நம்பிக்கையுமே உண்மை மாற்றத்தைக் கொண்டுவரும். அவ் உண்மை மாற்றம் வரும்வரை, ஜாக்கிரதையாய் இருக்கவேண்டியது நம் கடமை. நட்பு நோக்கி உண்மைக்கரத்தை நாம் நீட்டுவதோடு, அவர்கள் இழுப்பில் நாம் வழுக்கி விழுந்துவிடாதிருக்கும் இராஜதந்திரத்தையும் கையாளவேண்டும். இன்றைய நிலையில் மாற்றாருக்குப் பெருந்தன்மை காட்ட சுமந்திரனால் விடப்படும் அவசர அறிக்கைகள் சில, இவ்விடயத்தில் தவறிழைக்கின்றன என்பது நான்காவது விடயம்.
➥ தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தின் பின், கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 7இல் அவர்களை விடுவிப்பதாய் ஜனாதிபதி தந்த வாக்கு, இன்றைக்குப் படும்பாடு ஒன்றே பேரினத்தாரின் உண்மை மனநிலைக்காம் சான்று. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சட்டம் பேசி மறுத்து நிற்கும் நமது நீதியமைச்சர் "'அவன்கார்ட்" களஞ்சியச்சாலை விவகாரத்தைப் பயன்படுத்தி முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவை கைது செய்ய ஒருபோதும் இடமளியேன்' என்று அறிக்கை விடுகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு. இதுதான் இனப்பிரச்சினையின் இற்றைவரையான யதார்த்த நிலை. இதனைச் சுமந்திரன் தெளிவுறப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது ஐந்தாவது விடயம்.
அரசியலைப் பொறுத்தவரை,
சில உண்மைகளைக்கூட காலம் அறிந்தே நாம் பேசவேண்டும்.
''பொய்மையும் வாய்மை இடத்த'' என்றார் வள்ளுவர்.
அதுபோலவே,
வாய்மையும் சில இடங்களில் பொய்மை இடத்தவாம்.
இவை சுமந்திரனுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
✸✸✸
தமிழ் மக்களின் மனத்தில் எழுந்திருக்கும் மேற்சலிப்புக்களை,
அறிவாளியான சுமந்திரன் புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.
மற்றைத் தலைவர்கள் சிலர் போல்,
என்னை விமர்சிக்க இவர்கள் யார்? என,
சுமந்திரனும் நினைக்கத் தலைப்பட்டால்,
அது தமிழினத்தின் துரதிர்ஷ்டமே!
சுமந்திரன் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அரசின் மதிப்பும், வல்லரசுகளின் ஆதரவும் சிறந்தவைதான்.
அவற்றின் பலம் சிலகாலத்திற்கே!
ஒரு ஜனநாயக நாட்டில் மற்றைப் பலங்கள் எல்லாவற்றையும் விட,
மக்கட்பலமே பெரியது என்பது நிதர்சனமானது.
அப்பலத்தை இழக்க அறிவாளிகள் எவரும் துணியார்.
இன்னும் ஐந்தாண்டுகளின் பின்னர்,
மீண்டும் மக்களைச் சந்திக்க வந்தேயாகவேண்டும்.
சுமந்திரன் அதனை நினைவில் கொள்வது நல்லது.
✸✸✸✸✸✸