உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 12 | "குருவிடம் திருவடி பெற்றேன்"

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 12 | "குருவிடம் திருவடி பெற்றேன்"
நூல்கள் 06 Sep 2016
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
 
திருவடிகள் பெற்ற படலம்

விழா முடிந்த அடுத்தநாட் காலை, ஒவ்வொருவராய்க் கம்பன் அடிப்பொடியிடம் விடைபெற்றுக் கொண்டிருந்தனர். ஒரு முனிவரது ஆச்சிரமம்போல, குடில் ஒன்று அமைத்து கம்பன் அடிப்பொடி அங்கு தங்கியிருந்தார். அவரது குடிலைச் சுற்றி பெரிய அறிஞர் கூட்டம் நின்றது. ஒவ்வொருவராய்க் குடிலின் உட்சென்று, கம்பன் அடிப்பொடியிடம் விடைபெற்றுத் திரும்பிக்கொண்டிருந்தனர். எங்கள் முறை வந்ததும் நானும் குமாரதாசனும் வசந்தனும், உள்ளே சென்று அவர் காலில் விழுந்தோம். நான் அவரின் காலில் இருந்த திருவடிகளைப்பற்றியபடி, “இவற்றைத் தந்தால்தான் நான் எழும்புவேன்” என்றேன். நான் மேடையில் சொன்னதை, ஏதோ சம்பிரதாயத்திற்குப் பேசியதாய் நினைந்து, யாரும் “சீரியஸாய்” எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கம்பன் அடிப்பொடியும் அப்படித்தான் நினைத்திருப்பார் போல. நான் திருவடிகளை நிஜமாகவே கேட்பேன் என்று, அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
 


நான் அப்படிக் கேட்டதும் 
அவருக்குக் கோபம் வந்துவிட்டது. 
அவர் கடுங்கோபக்காரர் என்று முன்பே சொல்லியிருக்கிறேன்
“சீசீ இது என்ன விளையாட்டு? சீக்கிரம் எழும்பு” என்றார். 
நான் எழும்பவில்லை. 
“ஐயா! மகானான உங்களை நாம் தரிசித்துவிட்டோம். 
எங்களுக்குப் பிறகு வரும் இளைய தலைமுறைக்கு, 
உங்களைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்குமோ தெரியாது. இத்திருவடிகளைத் தந்தால் அதன் மூலம், 
அடுத்த தலைமுறையும் உங்களைத் தொழுது ஆசிபெறும். 
 எனவே, நீங்கள் அடித்தாலும் பரவாயில்லை. 
 இத்திருவடிகளைத் தராமல் எழும்ப மாட்டேன்” என்றேன். 
இளமை தந்த பயமின்மை! அவர் ஒரு நிமிடம் கண்மூடி நின்றுவிட்டு, கால்களில் இருந்த திருவடிகளைக் கழற்றிப் பின் சென்றார். 
அவர் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர். 
அந்த இரும்பு மனிதர் அழுவதைக் கண்டு, 
சுற்றியிருந்த அறிஞர்கள் எல்லாரும் கண்ணீர்விட ஆரம்பித்தனர். 
எங்களது அச்செயல் அங்குள்ள அத்தனை அறிஞர்களதும் மனதில், 
எங்களை ஆழப்பதித்தது.

கம்பன் அடிப்பொடியிடம் கற்றவை
பின்னர் என் குருநாதர் திருவடியையும் அவர் வீட்டில் பெற்றுக்கொண்டேன். இன்றும் அவ்விருவரின் திருவடிகளும், எங்கள் பூசையறையை அலங்கரிக்கின்றன. கம்பனில் பற்று, கழகத்தைக் குடும்பமாய் நினைக்கும் இயல்பு, கட்டுப்பாடோடு விழா நடத்தும் முறை, மேடை அலங்காரம், விழாவில் விருந்தோம்பல், நீதியால் வரும் நிமிர்வு என, பலவற்றையும் இவ்விழா மூலம் கம்பன் அடிப்பொடி எமக்குக் கற்றுத்தந்தார்.

குருநாதரின் இல்லத் தொடர்பு
விழா முடிந்ததும் என் குருநாதரிடமும் திருவடிகளைக் கேட்டேன். அவர் “அதெல்லாம் உனக்கு வேணாம். எங்க ஆத்தில (வீட்டில) ரெண்டு திருவடி இருக்கு. அதை வந்து வணங்கு!” என்று கூறி, எங்களைத் தன்னோடு திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ‘சாரதாஸ் ஹோட்டலில்’ எங்களைத் தங்க வைத்தார். மதுரை மாநாட்டிற்குச் சென்றபோது, ஏழு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்து, அதில் ஏழு பேர் தங்கியிருந்தோம். ‘சாரதாஸ் ஹோட்டலில்’ ஒரு நாள் அறை வாடகை நாற்பது ரூபாய். அப்போது, அது எங்களுக்குப் பெரிய தொகை. முதன்முதல் நாம் இந்தியா சென்றபோது, ஒரு சோடி இட்டலி நாற்பது பைசா(சதம்), ஒரு சோடி பூரிக்கிழங்கு எண்பது பைசா (சதம்). அப்போதைய நாற்பது ரூபாயின் பெறுமதி, இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால், அன்றிலிருந்துதான், எங்கள் தரத்திற்கேற்ப வாழவேண்டும் என்பதை நாம் தெரிந்துகொண்டோம். “ஓய்வெடுங்கப்பா! எம் மகன் வருவான், முதலில் எம் பெயர் சொல்லி, அப்புறமா அவன் பெயர் சொல்லுவான். அவனோட சேர்ந்து ஆத்துக்கு வந்திடுங்க” என்று, சொல்லிச் சென்றார் குருநாதர். அன்றுதான் முதன்முதலில் குருநாதரின் மகன் மாதுவைச் சந்தித்தேன். இன்று அவன் பெரும் பேச்சாளன். தந்தையின் நற்பண்புகளை எல்லாம் பெற்று, இன்று அவன் வாழ்வதைக் கண்டு உளம் மகிழ்கிறேன். மாதுவோடு வீடு சென்றோம். பலநாள் பழகிய உறவாய் அந்த வீடு எங்களை வரவேற்றது. ஐயாவின் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், அயலவர் என, அனைவரும் எங்கள்மேல் அன்பைப் பொழிந்தனர். அன்றிலிருந்து நாங்களும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளானோம்.
குருவிடமும் திருவடி பெற்றேன்
நாங்கள் குருவினது இல்லத்திற்குச் சென்றதும் அவர் தனது பூஜையறையிலிருந்த திருவடிகளைக்காட்டி அவற்றை வணங்குமாறு எங்களுக்கு உத்தரவிட்டார். அத்திருவடிகள் காஞ்சி மகாபெரியவருடையவை எனவும், குருநாதரின் தந்தையார் காஞ்சி மடத்தில் கணக்கராய் இருந்தபோது அவற்றைப் பெற்றுக்கொண்டாரெனவும் அறிந்துகொண்டோம். குருநாதரின் உத்தரவுப்படி அத்திருவடிகளை வணங்கிய பின்பு மீண்டும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய நான் “அத்திருவடிகள் உங்களுக்குரியவை. உங்கள் திருவடிகள்தான் எனக்குரியன. அவற்றை எனக்குத் தந்துவிடுங்கள்” என்று கேட்டு கண்கலங்கினேன். நெகிழ்ந்துபோன குருநாதர் தனது மனைவியைச் சத்தமாய் அழைத்து, “ஏன்டி! இவன் ஏதோ கேக்கிறான். குடுத்திடு” என்றார். விசயம் விளங்காது வெளியே வந்த அம்மையார், நான் குருநாதரின் திருவடிகளைக்கேட்டதும் கண்கலங்கிப்போனார். பிறகு, குருநாதரின் ஒரு சோடித் திருவடிகளை பக்குவமாய் எடுத்துத் தந்தார். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டேன் நான். இன்றும் எங்கள் பூஜையறையில் கம்பன் அடிப்பொடியினதும், குருநாதரினதும் திருவடிகள் அமர்ந்து அருள்செய்தபடி இருக்கின்றன.
குருநாதரின் வீடு
குருநாதரின் வீடு என்னை ஆச்சரியப்படுத்தியது. குருநாதரின் துணைவியார், குருநாதரைவிட எங்கள்மேல் அன்பு செலுத்தினார். அந்த வீட்டாருக்கு அன்பைத் தவிர வேறொன்றும் தெரிந்திருக்கவில்லை. குருநாதரின் மூத்த மகன் ரவி அண்ணா, அவர் மனைவி சித்திரா. மூத்த மகள் மைதிலி அக்கா, அவர் கணவர் அம்மாஞ்சி, மற்ற பிள்ளைகளான கோபால், அகிலா, மௌலி, மாது, சுந்தர், சாரதா என, அனைவரும் நீண்டநாள் பழகியவர்போல், எங்கள்மேல் அன்பைப் பொழிந்தனர். குருநாதரே, உட்கார்;ந்து காய்கறி நறுக்கிக் கொடுத்து, என்னென்ன சமைக்க வேண்டுமென்று ‘மெனு’ கொடுப்பார். அம்மா, அக்கா, அண்ணி எல்லாருமாக நிறையவே சமைப்பார்கள். எங்களுக்கு என்று மட்டுமென்றல்லாமல், அயல் வீடுகளில் இருக்கும் பெரியவர்களையும் அழைத்து, எல்லாருக்கும் சேர்த்து விருந்திடுவார்கள். அவர்கள் பேச்சில் நகைச்சுவை எப்போதும் கலந்திருக்கும். அம்மாஞ்சி நகைச்சுவை மன்னர். நான் வீட்டிலிருந்து ‘ஹோட்டலுக்குப்’ புறப்படும்போது, வீட்டுப் பெண்கள் எனக்குப் பிடிக்கும் என்பதற்காக, “நாளைக்கு பூரி பண்ணுகிறோம் வாங்கப்பா!” என்று அன்பாக அழைப்பார்கள். குருநாதர், “அவனுக்கு மட்டும் இரண்டு டஜன் பூரி போடுங்கடி” என்பார். அம்மாவும் அக்காவும் அண்ணியும் “அப்பிடியெல்லாம் சொல்லாதேள்! நீ கட்டாயம் வந்துடுப்பா, நாளைக்கு பூரிய மறந்திடாதப்பா!” என்று, திரும்பத் திரும்பச் சொல்வார்கள். அம்மாஞ்சி சிரிக்காமல், “ஏண்டி உங்க பூரியைக் காட்டி அவன மிரட்டுறேள்?” என்று, ‘கொமன்ட்’ அடிப்பார். எல்லோரும் வாய்விட்டுச் சிரிப்போம். அங்கு நாங்கள் தங்கிவிட்டு இலங்கைக்குக் கிளம்பும்போது, புளிக்காச்சல், அப்பளம், வடாம் என, பலவகையான உணவுகள் எல்லாம் செய்து தந்து, குருநாதரின் மனைவி ‘ரெயில்வே ஸ்ரேஷன்’ வரை, அழுதழுது எங்களுடன் வருவார். “அங்கே சண்டயாமேப்பா? நீங்க அங்க போகத்தான் வேணுமா? இங்கேயே எங்ககூட இருக்கக் கூடாதா?” என்று, அந்தத் தாயார் கெஞ்சுகிறபோது, நெஞ்செல்லாம் கரைந்து போகும். குருநாதரின் தெளிவு, நிதானம், அறிவு, கம்பீரம் எல்லாம், நெஞ்சை ஈர்க்கும் அற்புதங்கள். அந்த இல்லத்துடன் தொடர்புபட நான் என்ன தவம் செய்தேனோ?
குருநாதரின் பெருந்தன்மைகள்
குருநாதரைத் தெரியாதவர்கள், எண்பதுகளில் வெளியான ‘சங்கராபரணம்’ சினிமாவில் வந்த, சாஸ்திரியைப் பார்த்தால் போதும், வடிவாலும், இயல்பாலும் எங்கள் குருநாதர் அவர் போலவே இருப்பார். காரைக்குடி விழாவில்தான் குருநாதருடன் நெருங்கிப் பழக முடிந்தது. அப்பழக்கத்தில் அவரது பெருந்தன்மைகள் பலவற்றைக் கண்டு நான் வியந்தேன். முதல் நாள் அவருக்கருகில் இருந்து உண்ணும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது எச்சில் சாப்பாட்டில் ஒரு பிடி வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று, எனக்குள் ஓர் ஆசை. பயந்து பயந்து அருகிலிருந்த அவரிடம், மெல்ல என்விருப்பத்தைச் சொன்னேன். வாய்விட்டுச் சிரித்தார். அருகிலிருந்த அறிஞர் என்னவென்று விசாரிக்க, “அவன் ஆதீனப் பிரசாதம் கேட்கிறான்” என்றார். அன்பாக என்னைப் பார்த்துவிட்டு, என் கேள்விக்குப் பதில் தராமலே எழும்பிச் சென்றார். அவர் என்ன நினைத்தாரென்றே எனக்குத் தெரியவில்லை. அந்த விழாவின் நிறைவுநாள் அன்று, நாட்டரசன் கோட்டை நிகழ்ச்சியில், அற்புதமான பேச்சொன்றைப் பேசிவிட்டு வெளியில் வந்த குருநாதர், காற்று வாங்குவதற்காக வெளியில் வந்து, காரொன்றில் சாய்ந்து கொண்டு நின்றார். அவர் பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்துப்போன நான், அருகில் சென்று, “ஐயா, நான் உங்களுடனேயே இருக்க விரும்புகிறேன். ஒரு வேலைக்காரனாகவாவது, என்னை உங்களுடனேயே வைத்திருங்கள்” என்றேன். கருணை பொங்க என்னைப் பார்த்தார். அருகில் இழுத்து என்னை அணைத்துக்கொண்டு, “வேண்டாண்டா, நீ அங்கேயே இரு. ரொம்ப அருகில் வந்தால், என் குறையெல்லாம் உனக்குத் தெரிய ஆரம்பித்துவிடும்” என்றார். வியந்து போனேன். மற்றொரு நாள், அறிஞர்கள் எல்லாம் சூழ என் குருநாதர் அமர்;ந்திருக்க, நானும் குமாரதாசனும் அவர்பின் அமர்;ந்திருந்தோம். அப்போது, பட்சிராஜன் என்கின்ற வயது முதிர்ந்த பேரறிஞர் ஒருவர், அவ்விடத்திற்கு வந்தார். உடனே, எனது குருநாதர் என்னையும் குமாரதாசனையும் பார்த்து, “சாரிடம் ஆசீர்வாதம் வாங்குங்கடா!” என்றார். நாங்கள் ஏற்கெனவே அப்பெரியவரைக் கண்டபோது ஆசி பெற்றிருந்தோம். குருநாதர் சொன்னதும் அப்பெரியவர், “அதெல்லாம் பேஷா ஏற்கெனவே ஆயிட்டுது!” என்றார். என் குருநாதர் விடவில்லை. “அதனால் என்ன? அந்தப் பசங்கள இன்னொருதரம் நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்கோ! அவங்க இன்னும் நல்லா இருக்கட்டும்!” என்றார். குருவின் கருணை கண்டு நெகிழ்ந்தேன்.
இச்சம்பவம் குருநாதர் இலங்கை வந்தபோது நிகழ்ந்தது. குருநாதர், தனது குருவான கி.வா.ஜ. பற்றி எப்போதும், மேடையில் பெருமையாய்ச் சொல்லுவார். கி.வா.ஜ. அவர்களும் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்துபோகிறவர். முதல்தரமாய் எனது குரு, யாழ்ப்பாணம் வந்து சென்ற பின்பு, வேறொரு பேச்சுக்காக கி.வா.ஜ. யாழ். வந்திருந்தார். அவர் வந்தால் ஒரு பிராமணர் வீட்டில் தான் தங்குவார். எனது குருவின் குரு என்ற காரணத்தால், வைத்தியநாதனோடு அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டின் கூடத்தில், பலரும் கி.வா.ஜ.வைச் சூழ்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். என்னை அழைத்துச்சென்ற வைத்தியநாதன், “உங்கள் மாணவரின் மாணவன் இவன்” என்று என்னை அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல், “உங்க மாணவர் ரொம்ப அற்புதமாய்ப்பேசினார்” என்று, எனது குருநாதரைப் புகழ, கி.வா.ஜ.விற்கு அது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. அச்செய்தி காதில் விழாதது போல் அவர் இருந்தார். வைத்தியநாதன் மீண்டும் அதே செய்தியைச்சொல்ல, அதற்கு கி.வா.ஜ., “ஆமா ஆமா இராதாகிருஷ்ணனா?, அவன் நல்லா கத்துவான். அவனுக்கு ஒரு மாணவன் இருக்கான், சத்தியசீலன்னு பேரு, அவன நான் கத்தியசீலன்னுதான் கூப்பிடுவேன்” என்று சிலேடையில் பெயர்பெற்ற அவர் சொல்ல, கூடியிருந்த கூட்டம் சிரித்தது. என்னால் மதிக்கப்பட்ட அப்பெரியவர் அன்று என் மனதிலிருந்து வீழ்ந்தார்.
சிலகாலம் சென்று எனது குருநாதர் மீண்டும் யாழ். வந்தார்.
எனக்கோ எப்படியும் கி.வா.ஜ. சொன்னதை, அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்னும் உந்துதல். ஆனால் அதை அவர் எப்படி எடுப்பாரோ? என்ற பயம். குருவைக் குறைசொல்வது அவருக்குப் பிடிக்குமா? தயங்கித் தயங்கி ‘உங்களின் குரு வந்தார்...’ என்று தொடங்கி விட்டு, விடயத்தைச் சொல்லமுடியாது தயங்கி விட்டுவிடுவேன். இப்படியே இரண்டு, மூன்று முயற்சிகள். நாலாந்தரம் நான் இழுத்துத் தொடங்க, “டேய் அவர் என்னப்பத்திக் குறையா சொன்னாராடா? அதுக்கேன் நீ கவலைப்படுற? பெரியவங்க என்ன சொன்னாலும் அதை ஏத்துக்கவேண்டியதான், போ போ உன் வேலையைப் பாரு” என்று, பெருந்தன்மையாய் அவ்விடயத்தைத் தாண்டினார். எனக்கு மகிழ்ச்சியும், ஆச்சரியமும். என் மனதைக் குரு படித்துவிட்டதில் மகிழ்ச்சி. அவர் பெருந்தன்மை கண்டு ஆச்சரியம். நெகிழ்ந்தேன்.

கலங்கிய ஆசிரியர்கள்
இலங்கை திரும்பியதும், இந்தியப் பயணத்தில் நடந்த விடயங்களையெல்லாம். நாம் எங்கள் ஆசிரியர்களான, வித்துவான் வேலன், சிவராமலிங்கம் மாஸ்ரர், வித்துவான் ஆறுமுகம் ஆகியோரிடம் விபரமாய்ச் சொன்னோம். கம்பன் அடிப்பொடியினதும், குருநாதரினதும், திருவடிகளைப் பெற்ற செய்தியை நாம் சொன்னபோது, அவர்கள் உணர்ச்சிவயப்பட்டுப் போயினர். அவர்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் ஆறாய்க் கொட்டியது. அப்பெரியார் தம் கண்ணீர்தான், இன்று ஆலமரமாய் விரிந்திருக்கும் கம்பன் கழக விருட்சத்தின் வேர்களுக்கு, உயிர்ப்பூட்டிய அமுததாரைகள்.
அன்றும் இன்றும்
எங்களது இந்தியத் தொடர்பு இப்படித்தான் ஆரம்பித்தது. முதன்முதலில் நாம் அங்கு சென்றபொழுது, ஒருவரைக்கூட எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. குருநாதரதும் கம்பன் அடிப்பொடியினதும் தொடர்பால், அங்குள்ள அறிஞர்தம் உறவு மெல்ல மெல்லப் பெருகிற்று. இன்று, இந்தியாவின் எல்லா ஊர்களிலும், எம்மை உறவாய் நினைக்கும் அன்புள்ளங்கள், ஆயிரமாய் விரிந்து எங்களை வரவேற்கின்றன. இயற்கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், இலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் என, நல்லோர் பலரோடும் இன்று நாம் தொடர்புபட்டிருக்கிறோம். ஆனாலும், எம் தெய்வங்களைச் சந்தித்த, அந்த முதற்சந்திப்புத் தந்த சுகத்திற்கு, வேறெந்தச் சந்திப்பும் நிகரில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அப்பெரியோர்தம் ஆசியே, நல்லோர் பலரை எமக்கு உறவாக்கிற்று என்பதே உண்மை.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
பாகம் 013ல்...
 
· நான்காவது கம்பன் விழா · வாலிவதை நியாயமானதா? · வாலி விதைப் படலம் · பிரதமர் பிரேமதாசாவை அழைத்தோம் · ஈ. சண்முகம் முதலாளி · கல்லூரி விழா · கழகத்தின் முதலாண்டு நிறைவு · கம்பன் அடிப்பொடியின் வருகை தடைப்பட்டது
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.