உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 14 | பழ. நெடுமாறனைப் பேச அனுமதிக்கவில்லை !

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 14 | பழ. நெடுமாறனைப் பேச அனுமதிக்கவில்லை !
நூல்கள் 25 Oct 2016
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ஐந்தாவது கம்பன் விழா
25.09.1981
 
இவ்விழா 1981 செப்ரம்பர் 25, 26, 27, 28, 29 ஆகிய திகதிகளில் 
நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. 
எங்கள் கழகம் இவ்விழாவிலிருந்துதான் மக்கள் மத்தியில் முழுதாய்ப் பதிவானது.
என் குருநாதர் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்,
முதன்முதலாக இவ்விழாவிற்தான் கலந்துகொண்டார்.
விழாவில் கலந்துகொள்ள வருவதாய் குருநாதர் அறிவித்ததும்,
பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
விழா நடத்தப் பணம் வேண்டுமே எனத் திக்குமுக்காடிப் போனோம்.
அரும்பாடுபட்டு ஆட்களைத் தேடினோம்.
 

 

 
 
தொழிலதிபர்கள் வீரவாகு, குகன்
மதுரை மாநாடு பற்றி பருத்தித்துறைக்கு என்னைப் பேச அழைத்தபோது,
தொழிலதிபர் வீரவாகு எனக்கு அறிமுகமாகியிருந்தார்.
ஆளுமைமிக்க மனிதர் அவர்.
என்மேல் நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார்.
அவரிடம் உதவி கேட்டுப் போனேன்.
ஒருநாள் விழாப் பொறுப்பையேற்று ஆயிரம் ரூபாய் தரச் சம்மதித்தார்.
மிகுதிப் பணத்திற்கு என்ன செய்வது?
மீண்டும் குழம்பி நின்றோம்.
அப்போது, நல்லை ஆதீனத்தில்,
பண்டிதமணியின் கந்தபுராண நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்நிகழ்விற்கு நானும் சென்றிருந்தேன்.
சபையில் எனக்கு முன்னால் ‘நஷனல்’ வேட்டியோடு,
ஒரு மனிதர் அப்பாவியாய் உட்கார்ந்திருந்தார்.
அவரை ஒரு சாதாரண மனிதர் என நினைந்தேன்.
சபையில் நூல் விற்பனைக்கு வந்தபோது,
ரூபாய் ஆயிரம் கொடுத்து நான்கு புத்தகங்களை அவர் வாங்கினார்.
அதை வைத்து அவர் பணக்காரராய் இருக்கலாம் என முடிவு செய்து,
விழா முடிந்ததும் அவர் பின்னாற்சென்று,
நாங்கள் நடத்தவிருக்கும் விழாப்பற்றிய விபரங்களைச் சொல்லி,
உதவி கோரினேன்.
அவர் எந்த மறுப்பும் இல்லாமல்,
ஒரு நாள் விழாச்செலவைத் தான் பொறுப்பேற்பதாய் ஒப்புக்கொண்டார்.
பின்னர்தான்,
அவர் பருத்தித்துறை “குகன் ஸ்ரூடியோ” அதிபர் என்பது தெரியவந்தது.
பின்னாளில் எங்கள் கம்பன் கழகத்தின் முயற்சிகளுக்கு,
அவர் பெரிதும் துணைசெய்தார்.
கழக வரலாற்றில் மறக்க முடியாத இரு பெரு மனிதர்கள் அவர்கள்.
 
‘பொன்ட்’ கைகொடுத்தார்
ஐந்து நாட்கள் நடந்த அவ்விழாவுக்கான செலவு,
அந்த நாட்களில் ரூபா ஐயாயிரம்தான்.
மேற்சொன்ன பெரியவர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபா தந்தனர்.
மிகுதிப்பணத்திற்குத் திண்டாடினோம்.
அப்போது பிரபலமாக இருந்த ‘ரியூட்டரி’ அதிபர் ‘பொன்டிடம்’,
நண்பன் கிரி எங்களை அழைத்துச் சென்றான்.
அவர் மனமுவந்து ஐந்நூறு ரூபா தரச் சம்மதித்தார்.
பின் அப்பணத்தை அவரிடம் வாங்க மிகவும் சிரமப்பட்டோம்.
கைக்கு வந்தது அதில் அரைவாசித் தொகைதான்.
விழாவிற்குத் தேவையான மிகுதிப் பணத்திற்காய் நாம் பரிதவித்தபோது,
விழாவில் கலந்துகொண்ட மக்களே, 
ஐம்பதும், நூறுமாகத் தாங்களாகவே முன்வந்து தந்துதவினர்.
ஒவ்வொரு விழாவிலும் சிறுசிறு தொகையாகக் கடனும் வளர்ந்தது.
 
ஆசிரியர்களின் அச்சம்!
குருநாதர் இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு,
“இராமானுஜம்” கப்பலிலேயே வருவதாக எழுதியிருந்தார்.
நாள் கிட்டக்கிட்ட எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
எனது ஆசிரியர்களுக்கு, குருநாதர் வந்து சேர்வார் என்பதில்,
முழுமையான நம்பிக்கை இருக்கவில்லை.
அக்காலத்தில் இந்தியப் பேச்சாளர்கள் இங்கு வந்துபோவது,
மிக அருமையாகவே இருந்தது.
பெரும் செல்வர்களே, தாம் நடத்தும் விழாக்களுக்கு,
இந்தியப் பேச்சாளர்களை அழைப்பர்.
அப்படியிருந்தும் சில இந்தியப் பேச்சாளர்கள்,
வருவதாய்ச் சொல்லிவிட்டு வராமல் நின்றுவிடுவார்கள்.
வேறு சிலர் இங்கு வந்து ‘ஷொப்பிங்’ செய்வதாய்ச் சொல்லி,
அழைத்தவர்கள் தலையில்,
பெருந்தொகைச் செலவைக் கட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
“உங்கள் குருநாதரும் அங்ஙனம் செய்துவிட்டால், 
என்ன செய்வீர்கள்?” என,
எங்கள் ஆசிரியர்கள் எங்களை மிரட்டினார்கள்.
என் குருநாதர் அப்படிச் செய்யமாட்டார் என, என் உள்மனம் சொல்லிற்று.
 
ஒரு ரேடியோ வாங்கணும்ப்பா!
தலைமன்னாரில் கப்பலில் வந்து இறங்கிய குருநாதரை,
வங்கி முகாமையாளர் வைத்தியநாதன் ஒழுங்குசெய்து தந்த இரவல் காரில்,
ஆசிரியர் சிவராமலிங்கம் அவர்களோடு சென்று அழைத்து வந்தோம்.
குருநாதரை “இராமானுஜம்” கப்பல் அதிகாரிகள்,
கார் வரை அழைத்துவந்து மரியாதை செய்து அனுப்பினார்கள்.
அது ஒரு பழைய கார்.
அப்போது கார்களில் ‘ஏ.சி.’ இருப்பதில்லை.
குருநாதரை அழைத்துக்கொண்டு கார்  கொஞ்சத்தூரம் சென்றதும்,
பின் ‘சீற்றில்’ உட்கார்ந்திருந்த குருநாதர் என்னைப் பார்த்து,
“திரும்பிப் போறபோது ஒரு ‘ரேடியோ’ வாங்கணும்ப்பா!” என்றார்.
முன்னால் இருந்த சிவராமலிங்கம் மாஸ்ரர்,
கடைக்கண்ணால் என்னைப் பார்த்து வாய்க்குள் சிரித்தார்.
“முன்னரே சொன்னேனே கேட்டியா?” என்று,
அவர் புன்னகை பொருளுரைத்தது.
ஓரிரு நிமிடங்கள்கூட ஆகியிருக்காது.
என் குருநாதர் தன் கையில் வைத்திருந்த ‘பேர்சைத்’ திறந்து,
“இந்தா இத வச்சுக்கோ!” எனக் கத்தையாய்க் காசை அள்ளித்தந்தார்.
எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
இப்போது நான்,
சிவராமலிங்கம் மாஸ்ரரைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகைத்தேன்.
“என் குருநாதர் மற்றவரைப் போல் இல்லையாக்கும்” என
என் புன்னகை பொருளுரைத்தது.
 
துணைசெய்த வைத்தியநாதன் தம்பதியினர்
இவ்விழாவில் வங்கி முகாமையாளர் வைத்தியநாதன் ஐயா 
எமக்கு நிறைய உதவிகள் செய்தார்.
கல்வியங்காட்டில் அமைந்திருந்த குமாரதாசன் வீட்டில்தான்,
முதலில் குருநாதர் வந்து தங்கினார்.
எங்களுக்கு இந்தியப் பிராமண உணவினைத் தயாரிக்கத் தெரியவில்லை.
குருநாதர் நாங்கள் கொடுத்ததை முகஞ்சுழிக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஒரு நிலையில் அவரது சங்கடத்தைத் தெரிந்துகொண்டு,
வசதி கருதி, வைத்தியநாதன் ஐயா வீட்டிலேயே 
அவரைத் தங்க வைத்தோம்.
வைத்தியநாதனின் துணைவியார் வசந்தா அம்மையார்,
குருநாதருக்கு விதம் விதமாகச் சமைத்துப்போட்டார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதாலும்,
பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதாலும்,
அவரது சமையல் ஐயாவுக்கு நிரம்பப் பிடித்துப்போனது.
எந்தக் குறையுமின்றி குருநாதரை அவர்கள் பார்த்துக் கொண்டனர்.
இடையிடையே விழா நாட்களில்,
எங்களையும் அன்போடு அழைத்து அம்மையார் விருந்திடுவார்.
குருநாதரின் வருகையோடு,
வைத்தியநாதன் ஐயா குடும்பம் எங்களுக்கு மிக நெருக்கமாயிற்று.
 
கேசரி மண்ணாயிற்று!
எனக்குச் சமையலில் விருப்பம் அதிகம்.
இரண்டு தரம் தமிழகம் சென்றுவந்த அனுபவத்தில்,
நானும் இந்தியச் சமையலைப் பழகிவிட்டதாய் 
அப்போது நினைத்திருந்தேன்.
ஆனாலும் முப்பது ஆண்டுகள் கழிந்தும்,
அந்தச் சமையல்க் கைவண்ணம் 
இன்றுவரை முழுமையாய்க் கைவரவில்லை.
அப்போது நான் நன்றாகக் கேசரி செய்வேன்.
குருநாதர் வந்ததும்,
அவருக்கு இனிப்பாக ஏதாவது செய்து போடவேண்டும் என நினைந்து,
என் கைவண்ணம் காட்ட, கேசரி செய்யத்தொடங்கினேன்.
அப்போது நெய் கிடைப்பது பெரிய கஷ்டம்.
குமாரதாசன் வீட்டில், நெடுந்தீவிலிருந்து கொண்டுவந்த நெய் இருந்தது.
நிறைய முந்திரிப்பருப்பு, திராட்சை வற்றல் எல்லாம் வாங்கிப்போட்டு,
வழிய வழிய நெய் விட்டு,
அற்புதமான ஒரு கேசரியைக் செய்து முடித்தேன்.
முடிந்ததும் அதனை வாயில் போட்டுப்பார்த்தால்,
அதில் நறநறவென ஒரே மண்ணாய்க் கடிபட்டது.
அன்று நான்பட்ட கவலைக்கு ஓர் அளவே கிடையாது.
எப்படி மண் வந்தது என ஆராய்ந்து பார்த்தோம்.
எங்கள் பிழையால் மண்வர வாய்ப்பிருக்கவில்லை.
பிறகுதான் அந்த வாரத்தில் யாழ்ப்பாணக் கடைகளுக்கு வந்த,
அவ்வளவு ரவையிலும்,
மண் கலந்திருந்த செய்தி தெரியவந்தது.
பெருங் கவலையோடு அவ்வளவு கேசரியையும் குப்பையில் கொட்டினேன்.
 
பேராசிரியர் சிவத்தம்பி முரண்பட்டார்
குருநாதரின் உரைக்கு யாழ்ப்பாணத்தில் பெரிய வரவேற்பு.
ஆதீனம் நிரம்பி வழிந்தது.
அந்தணர்கள் பலர் மேடையில் நிரம்பியிருந்தனர்.
இவ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்ற,
பேராசிரியர் சிவத்தம்பியை அழைத்திருந்தோம்.
அப்போது, அவர் தன்னை முழுமையான ‘மார்க்சீயவாதியாய்’ 
காட்டி வந்தார்.
அக்காலத்தில் அவர்கள் மரபுக் கல்வியை ஏற்கவில்லை.
மரபுக்காரர்கள் நவீன எழுத்தாளர்களை ஒதுக்கிய காலம்போய்,
‘மார்க்சீயப்’ பலத்தால் நவீன வாதிகள்,
மரபு அறிஞர்களை இழிவு செய்யத் தொடங்கியிருந்த காலமது.
சிவத்தம்பியும் அந்த நவீன குழுவைச் சார்ந்தவராயிருந்தார்.
ஆனாலும், நாங்கள் சென்று அழைத்ததும் விழாவிற்கு வரச் சம்மதித்தார்.
எங்கள் குருநாதரையும், சிவத்தம்பியையும் முதல் நாளன்று,
நல்லூர் கோயில் வாசலிலிருந்து ஊர்வலமாய் அழைத்துவந்தோம்.
ஆதீன வாசலில் அவர்களுக்கு பாதபூசை செய்தோம்.
குருநாதர் கண்மூடி மௌனித்து,
எங்கள் பூசையை ஏற்றுக்கொண்டார்.
பின்னால் வந்த பேராசிரியர் சிவத்தம்பி,
“Are You Mad?” எனக்கேட்டுக் காலுதறிச் சென்றார்.
அவர் செயலால் மனம் நொந்தோம்.
அன்றைய தொடக்கவுரையில்,
சிவத்தம்பி எம்மரபுக் கல்வி முறையை இழித்துப் பேச,
அம்மேடையிலேயே அவருக்குக் கழகத்தாலும், 
எங்கள் ஆசிரியர்களாலும் பதிலுரைக்கப்பட்டது.
இவ்விழாவிலிருந்தே,
சிவத்தம்பிக்கும் கழகத்திற்கும் முரண்பாடு தொடங்கிவிட்டது.
அம்முரண்பாடு பின்னும் தொடர்ந்தது.
வேடிக்கை என்னவென்றால்,
எங்கள் பாதபூஜையை இழித்துரைத்த பேராசிரியர்,
பிற்காலத்தில் அவரது மணிவிழாவின்போது,
அவரது மாணவர்கள்  நாம் செய்ததுபோலவே,
நல்லூர் வாசலில் இருந்து அவரை ஊர்வலமாய் அழைத்து வந்து,
பாதபூஜை செய்ய,
கண் கலங்கி உருகினார்.
அக் காட்சி மறக்கமுடியாதது.
எல்லாம் காலத்தின் கோலம்!
 
விழாவில் அமிர்தலிங்கம் பேசினார்
அப்போது யாழில் புகழ்பெற்ற பிரமுகராயிருந்த,
‘எஸ்.ரி.ஆர். பிலிம்’ அதிபர் தியாகராஜா அவர்கள்,
எங்கள் கழகத்தின் ஆதரவாளர்.
யாழ்ப்பாணத்தில் இருந்த  “ராஜா தியட்டர்” அவருடையதுதான்.
யாழ். இந்துக் கல்லூரிக்கருகில் மாளிகைபோன்ற,
பெரிய வீடு அவருக்கிருந்தது.
அந்த வீட்டிற்குப் பெரும்பெரும் கலைஞர்கள் எல்லாம் வந்து போவார்கள்.
அந்தக் காலத்தில், எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவியையும்,
யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தவர் அவர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் 
அவருக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது.
என் குருநாதரின் பேச்சில் மயங்கிப்போன அவர்,
குருநாதரின் பேச்சுத்திறன் பற்றி எடுத்துச் சொல்ல,
அது கேட்டு,
அப்போதைய  எதிர்க்கட்சி முதல்வராய் இருந்த அமிர்தலிங்கமும்,
சிவசிதம்பரம், யோகேஸ்வரன், நவரட்ணம் போன்ற,
மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களும்,
விழாவின் முதலிரண்டு நாட்களிலும்,
முழுமையாய்க் கலந்து கொண்டு,
குருநாதரின் பேச்சை மிகவும் இரசித்துக் கேட்டனர்.
 
அமிர்தலிங்கத்தோடு அவருடைய துணைவியார்,
மங்கையர்க்கரசி அவர்களும் விழாவுக்கு வருகை தந்தார்.
அக்காலத்தில் அரசியல் மேடைகளில் புகழ்பெற்றிருந்த 
பெண் பேச்சாளர் அவர்.
பிரபாகரனைப்போல அமிர்தலிங்கத்திற்கு 
பெரும் ஆதரவு இருந்த நேரம் அது.
விழாவுக்கு வந்த அமிர்தலிங்கத்தையும் துணைவியாரையும்,
முதலிரண்டு நாட்களும் மேடையிலேற்றாமல்,
பொதுமக்களோடு சபையிலேயே உட்கார வைத்தோம்.
கூட்டணி ஆதரவாளர்கள் பலர் அதை எதிர்த்தனர்.
பிரதமவிருந்தினராய் அழைத்தாற்கூட செல்லமுடியாத அளவுக்கு,
அமிர்தலிங்கம் “பிஸி” யாய் இருந்த காலம் அது.
எவ்வித அழைப்புமின்றி வெறும் பார்வையாளர்களாய், 
மூன்று நான்கு மணித்தியாலங்கள் நிலத்தில் இருந்து,
பேராசிரியரின் சொற்பொழிவு கேட்டு,
தங்கள் தமிழார்வத்தை அவர்கள் நிரூபித்தனர்.
நாங்கள் தனித்த மரியாதை ஏதும் செய்யாதபோதும், 
அதைப் பொருட்படுத்தாமல் அமிர்தலிங்கம் தம்பதியினர்,
அடுத்தநாள் விழாவிற்கும் வர,
உண்மையில் நாங்கள் மகிழ்ந்து போனோம்.
தொடர்ந்தும் குருநாதரின் உரையைக் கேட்க வந்ததால்,
அவர்களின் தமிழார்வத்தை மதித்து,
விழாவின் நிறைவு நாள் அன்று நடந்த குருநாதரின் பாராட்டு நிகழ்வில்,
அமிர்தலிங்கத்தை மேடையேற்றிக் கௌரவித்தோம்.
மேடையில் அவர் குருநாதரைப் பாராட்டிப் பேசினார்.
எங்கள் கழக ஆதரவாளர்களான,
அப்போதைய கூட்டணியின் மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்கள்,
திருமதி மங்கையற்கரசியையும் மேடையேற்ற வலியுறுத்தினார்கள்.
எதிர்க்கட்சி முதல்வருக்கு மட்டுமே மேடையில் இடம் என,
அப்போதும் அவர்கள் கோரிக்கையை நிராகரித்தோம்.
அரசியல் சார்பற்றுத் தமிழை முதன்மைப்படுத்தி,
நிகழ்ச்சிகளை நடத்தும் ஆளுமையை நாம் பெற்றதற்கு,
இந்நிகழ்வே வித்திட்டது.
 
பழ. நெடுமாறனைப் பேச அனுமதிக்கவில்லை
இவ்விழாவின் நிறைவு நாளில் எஸ்.ரி.ஆர். தனது வீட்டில்,
குருநாதருக்கும் கழக உறுப்பினர்களுக்கும் ஒரு பெரிய விருந்தளித்தார்.
அவ்விருந்தில் அமிர்தலிங்கம், 
திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் உட்பட,
பல கூட்டணித் தலைவர்களும்,
அப்போது, ஏதோ காரணமாய் யாழ் வந்திருந்த,
தமிழக அரசியற் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களும் கலந்துகொண்டனர்.
அரசியல் தலைவர்களோடு அதிகம் நெருங்க எனது குருநாதர் விரும்பமாட்டார்.
விருந்து முடிந்ததும் எஸ்.ரி.ஆர். அவர்கள்,
அன்று நடக்கவிருந்த கம்பன் விழாவின் நிறைவுநாள் நிகழ்வில்,
பழ. நெடுமாறனைப் பேச அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நானும் சம்மதித்து வந்துவிட்டேன்.
அலுவலகம் வந்ததும்,
அரசியல்வாதிகளை மேடையேற்றுவதில்,
எங்கள் ஆசிரியர்களுக்கும், குருநாதருக்கும் 
உடன்பாடில்லாதது தெரிய வந்தது.
உடனே தொலைபேசியில் எஸ்.ரி.ஆருடன் பேசி,
 
அந்நிகழ்வை இரத்துச்செய்தோம்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பாகம் 015ல்...
  • பிராமணியத்தை வெறுத்த குருநாதர்
  • குரங்கு வந்தது
  • “இங்கே இனி அழைத்து வராதே!”
  • இரும்பும் கரைந்தது
  • என்ன தவம் செய்தேனோ!
  • சால்வை பறந்தது!
  • கோப்பிக்காக நடைப்பயணம்
  • தாயும் ஆனான்!
  • காமமும் கடப்பித்தார்

 

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.