ஓங்கி இசைப் பணிபுரிந்து உயர்ந்து நின்றோன் !
கவிதை முற்றம் 08 Jul 2015
உ
-கம்பவாரிதி இ. ஜெயராஜ்-
உயர் புகழைத் தனதாக்கி ஓங்கி இசைப்பணி புரிந்து உயர்ந்து நின்றோன்
அயர்வறியா தென்னாளும் அமர இசை அனைவர்க்கும் அள்ளித் தந்தோன்பெயர் புகழைப் பெரிதாக்கி பேணியதோர் ஒழுக்கத்தால் பெரியனென்று
வியந்திடவே உலகமெலாம் வென்றிட்ட பெருமனிதன் விண்ணைச் சேர்ந்தான்.
விண் முட்டும் பெருஞானம் வெற்றியிலே சிதையாத நிறைந்த பண்பும்
மண் முற்றும் சென்றடைந்த மாபுகழில் மதிமயங்கா மாண்பும் கொண்டோன்
எண்ணற்ற விருதுகளால் ஏற்றங்கள் பலபெற்றும் எதிலும் மூழ்கா
பண்பட்ட பெருமனிதன் பாரினிலே பணிமுடித்து பாதம் சேர்ந்தான்.
அதிர்ந்தறியா தன்மையொடு அன்பதனில் ஊறியதோர் அழகுப் பேச்சும்
கதிதனக்கு இசையென்று காலமெலாம் வாழ்ந்திட்ட கனிந்த வாழ்வும்
மதியதனில் மருந்துக்கும் மற்றவரை வெறுத்தறியா மாண்பும் கொண்டோன்
விதி முடிய மண் விட்டு விண்ணவரில் ஒருவனென விரைந்து சென்றான்.
மாறறியாச் சுருதியொடு மன்னவனே நீ இசைக்க மகிழ்ந்து நாங்கள்
ஊரறிய உன்புகழை ஓங்கிநிதம் சொன்னோமே உதிரம் தன்னில்
ஊறுகிற இசையதனால் உலகமெலாம் மயக்கியவா உன்னைப் போல
வேறெவர்தான் உலகதனில் வீறான இசையோடு சீலம் பெற்றார்.
உத்தமனாய் ஒழுக்கமொடு உயர்ஞானம் பெற்றிசையின் சிகரமெல்லாம்
வித்தகனாய் தன்குழலால் வீறோடு நடைபோட்ட வேந்தன் நல்ல
பத்தியொடு பண்பதுவும் பார் போற்றும் பெரும் புகழும் பணிந்து தாங்கி
எத்திசையும் ஆதவனாய் எழுந்து ஒளி வீசியவன் இன்று போனான்.
ஓங்குபுகழ் பஞ்சாபிகேசன் என உரைத்தாலே உயர்ந்தோர் எல்லாம்
ஏங்கி அவர் இசை கேட்க எழுந்திடுவர் எந்நாளும் இவர்க்கு இங்கே
பாங்குடனே நிகர் நிற்க பாரதனில் எவர் உள்ளார்? பணிவால் என்றும்
வீங்குபுகழ் பெற்றிட்ட வித்தகனார் நமை விட்டு விண்ணைச் சேர்ந்தார்.
பழந்தமிழன் எனக் குடுமி பாரினிலே தாங்கியவன் பாயும் நல்ல
தளர்வறியா இசைக்கடலை தவமெனவே தாங்கி நிதம் தந்த வள்ளல்
விழுதுபல விட்டெங்கள் வீறான தமிழ் மண்ணை விளங்கச் செய்தோன்
நலங்களெலாம் தந்தின்று நாம் உருக நாதன்தாள் சேர்ந்துவிட்டான்.
மாறாத புன்னகையும் மனத்தினிலே மற்றவரை மதிக்கும் பண்பும்
ஏறாத ஆணவமும் எப்போதும் பணிகின்ற இனிய அன்பும்
ஓராதார் தமைக்கூட உள்ளத்தால் நேசிக்கும் உயர்ந்த நண்பும்
வேறார்தான் பெற்றிடுவார் வித்தகனே உனையன்றி விண்ணைச் சேர்ந்தாய்.
கம்பனவன் பணியதனில் கனிவோடு நாம் நடக்க கைகள் தந்து
அம்புவியில் எமை ஊக்கி அரும்பணிகள் ஆற்றியவா! ஐய உந்தன்
செம்மையுறு திருத்தொண்டை சேர்ந்தாற்ற நற்புதல்வர் தம்மை ஈந்தாய்
நம்பி உனைத் தொழுகின்றோம் நல்லவனே இறையடியில் நாளும் நிற்பாய்.
****