சொல் ஒக்கும் !

சொல் ஒக்கும் !
 
லக ஜீவராசிகளின் தலைமை மானுடர்க்கேயாம்.
மற்றைய ஜீவராசிகளுக்கில்லா மானுடரின் தனித் தகைமைகளுள்,
விரிந்த மொழிப் பிரயோகமும் ஒன்று.
நம் தமிழ்மொழி செம்மொழியாய்ச் சீருற்று நிற்கிறது.
நம் தமிழ்ச் சான்றோர்,
மொழிப் பிரயோகத்தின் கூறுகளை,
விரிய ஆராய்ந்து விளம்பியுள்ளனர்.
ஆயிரமாய் விரியும் எண்ணங்களை,
அடுத்தவரோடு பகிர்ந்து கொள்வதற்கே மொழியாம்.
 


மனிதகுலம் இடப் பிரிவால் பல குழுக்களாயிற்று.
ஆதலால், மொழியும் பலவாயிற்று.
உறவு நோக்கிய கருத்துப் பரிமாற்றத்திற்காய் விளைந்த மொழியினை,
பகைக் கருவியாய் மாற்றிக் கீழ்மை செய்தனர் மானுடர்.
மனித மன ஆணவத்தின் காரணமாய்,
தத்தம் மொழியே சிறந்ததெனப் பூசல் விளைவித்து,
மொழிப் பிரயோகத்தின் நோக்கத்தையே அவர்கள் சிதைத்தனர்.
உறவுக்காய்ப் பிறந்த மொழி,
பகைக்காம் காரணமாயிற்று.
கலி வென்றது.
 
 ஆணவ விளைவான மொழிப் பற்றினைக் கடந்து,
உண்மை அறிவுநோக்கில் காண,
மொழியின் உண்மைப் பயன்பாடு தெரியவரும்.
சொற்கள்,
அவை தரும் பொருள்,
அப்பொருள் தரும் உணர்வு.
இம்மூன்று படிநிலைகளே,
மொழிப்பிரயோக அங்கங்களாம்.
இவ்வரிசை கொண்டு நோக்க,
சொற்களாற் பொருளும்,
பொருளால் உணர்வும் விளையும், உண்மை வெளிப்படும்.


பொருள் வெளிப்பட்ட பின் சொல்லும்,
உணர்வு வெளிப்பட்ட பின் பொருளும் பயனற்றவையாம்.
அம்மா என்பது சொல்.
அச்சொல்லை நினைத்ததும் நினைவில் வரும் தாயின் வடிவம் பொருள்.
அத்தாயை நினைந்ததும் வெளிப்படும் அன்பே, உணர்வாம்.
பொருள் தராத சொல்லும்,
உணர்வு தராத பொருளும் வீணானவை.
அது நோக்கியே,
குமர குருபரசுவாமிகள் தனது சகலகலாவல்லி மாலையில்,
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய் என்றனர்.
இங்கு பாட்டு எனும் சொல், சொற்கூட்டத்தைக் குறிக்கின்றது.


மேற்சொன்ன மொழிப் பயன்பாட்டின் மூன்றுநிலைகளில்,
முதல் நிலையான சொல்லளவிலேயே,
மொழிப்பேதம்  பெரிதும் நிகழ்கிறது.
பொருள் அளவில் அது மிகக்குன்றி,
உணர்வளவில் அப்பேதம் இல்லாமலே போகிறது.
அன்னையைக் குறிக்கும் சொல்,
பல மொழிகளிலும் பலவேறு விதமாய் உரைக்கப்படும்.
தாய் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள்,
இனங்களை வேறுபடுத்திக் காட்ட,
அவ்வுரைப்பினால் மொழிப்பேதம் நிகழ்கிறது.
இஃது முதல் நிலை.


அச்சொல்லுரைக்கும் தாய் என்ற பொருளில் அதிக பேதம் இல்லை.
அவரவர் மொழிசார் சமய, கலாசார, பண்பாட்டு வேறுபாடுகளிற்கேற்ப,
அத்தாயின் புற வடிவில் மட்டுமே பேதங்கள் தோன்றும்.
அம்மா என ஒரு தமிழன் சொல்லும் சொல்லின் பொருளாக,
பொட்டோடும், பூவோடும் ஒரு தாயின் வடிவம் நினைவில் வரும்.
‘உம்மா’ என ஒரு இஸ்லாமியன் சொல்லும் சொல்லின் பொருளாக,
‘பர்தா’அணிந்த ஒரு தாயின் வடிவம் நினைவில் வரும்.
அது போலவே ‘மம்மி’ என,
ஒரு ஆங்கிலேயன் சொல்லும் சொல்லின் பொருளாக,
சட்டையும், தொப்பியும் அணிந்த,
ஒரு தாயின் வடிவம் நினைவில் வரும்.
இப்புற வடிவ மாற்றங்களே பொருளில் ஏற்படும் பேதங்களாம்.


வேறுபட்ட மொழிகளால் சொல்லப்படும் தாய் என்ற சொல்லால்,
வேறுபட்ட அன்னையர் வடிவங்கள் பொருளாய்த் தோன்றினும்,
அத்தாய் பற்றிய எண்ணம் தரும் அன்புணர்வில்,
எவர்க்கும் பேதம் இல்லையாம்.
எனவே, மொழியின் முடிவுப் பயனான உணர்வு நிலை உற்றாரே,
பேதங்களற்று மொழியின் உண்மைப்பயனையும்,
உலக நேசிப்பையும் பெற்றுய்வர்.
மொழிபற்றிய மேற் சிந்தனைகளின் ஒரு பகுதியினை,
அடிப்படையாய்க் கொண்டு,
கம்பன் அமைத்த ஒரு பாடலை விரித்துரைப்பதே,
இக்கட்டுரையின் நோக்கமாம்.


மொழிப்பயன்பாட்டின் முதல் நிலையான சொல்,
மற்றவர் செவியிற் பொருளை ஏற்றும் அளவில்
தன் பயன்பாட்டை இழக்கிறது.
இவ்வுண்மை உணரின்,
மொழிப் பிரிவு காட்டி முரண்பாடு விளைவிக்கும் மூடர் ஓய்வுறுவர்.
மற்றவர் செவி வரையிலேயே,
மொழியின் தொடர்பு எனும் பேருண்மையை,
கம்பன் தன் காவியத்துள் வடித்துக் காட்டும் திறன்,
இரசிக்கத்தக்கது.
அது காண்பாம்.


கம்பராமாயணம் பாலகாண்டம்.
வனத்தில் தான் செய்யும் யாகம் காக்க,
இராம, இலக்குவரை வனத்திற்கு அழைத்துச் செல்கிறார்,
விசுவாமித்திர முனிவர்.
செல்லும் வழியில் ஒரு பாலைநிலம் குறுக்கிட,
அப்பாலை பற்றி இராம, இலக்குவர் முனிவரிடம் வினவுகின்றனர்.
அப்பாலை உருவானதற்குக் காரணளாய் இருந்த,
தாடகையின் வரலாறு உரைக்கத் தொடங்குகிறார் முனிவர்.
அந்நேரம், மானுட வாசனை அறிந்து,
அம்மூவரையும் கொல்லவென வருகிறாள் தாடகை.
நிலம் அதிர நெடுமலையென வரும் அவள் கால்களிற் சிலம்பு.
அச்சிலம்புகளில் ஓசைதரும் மணிகளாய்,
மலைகளையே இட்டிருக்கிறாள் அம்மாயக்காரி.
அவள் ஓங்கி மிதிக்க நிலம் குழியாகிறது.
அக்குழியின் அளவு?
கடல் வந்து புகுமளவாய் விரிந்திருந்ததாம்.
கம்பன் கற்பனையும் கடலாய் விரிகிறது.
இயமன் அவளுக்கு அஞ்சிப் பாதாளத்திற் புக,
தான் நடக்கும் விசையால்,
நில மலைகள் பிடுங்கப்பட்டு,
தன் பின் தொடர்ந்து வர நடந்து வருகிறாள் அவள்.

சிலம்புகள் சிலம்பிடைச் செறித்த கழலோடும்
நிலம்புக மிதித்தனள் நெளித்த குழி வேலைச்
சலம்புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி
பிலம்புக நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள்.

மலைகள் நிலத்தில் இருத்தல் இயல்பன்றோ!
அங்ஙனமிருக்க மலைகளை வெறுமனே கிரிகள் என்றுரைக்காது,
நிலக்கிரிகள் என, கம்பன் வேண்டாது உரைத்ததேன்?
அவளே மலைபோல் வருதலின்,
மற்றைய மலைகளைப் பிரித்து உரைத்தற்காய்,
அவற்றை நிலக்கிரிகள் என்கிறான் கம்பன்.


வரும் அவளைக் கொல்க! என,
விசுவாமித்திரர் கட்டளை இட,
பெண்ணைக் கொல்லலாமா? என,
குழம்பித் தயங்கி, பின் முனிவர் கூற்றால் தெளிவுற்று,
தாடகைமேல் அம்பு போடுகிறான் இராமன்.
அவன் தொடுத்த கன்னிப்போர்,
‘கன்னி’ப்போர் ஆகிறது.


இராமனின் வில்லாற்றல் முதன் முதலாய் வெளிப்படும் இடம் இது.
தான் படைத்த தன்நேரில்லாத் தலைவனின்,
வில்லாற்றலின் வீரியத்தை வெளிப்படுத்த விரும்புகிறான் கம்பன்.
காற்றைக் கிழித்து இராமபாணம் பாய்கிறது.
இராமபாணத்தின் வேகத்திற்காம் உவமை தேடிய கம்பன்.
காற்றை விட, மின்னலை விட வேகமான ஒன்றை,
இராமபாணத்தின் வேகத்திற்கு உவமை சொல்ல விரும்புகிறான்.
அவ்வுவமையாகவே, சொல்லினையே தேர்ந்தெடுத்து,
பாடலைத் தொடங்குகிறான்.
சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்
சரம்,
சுடுசரம்,
வேகச் சுடுசரம்,
கடிய வேகச் சுடுசரம்
எனப் பிரித்து,
பின், அஃது சொல் ஒத்தது என உரைக்க,
சரத்தின் வேகம் சொல்லாலும்,
சொல்லின் வேகம் சரத்தாலும்,
கற்பார் நெஞ்சில் ஆழப்பதிகின்றது.


அவ் வேகச் சரத்தை,
இருளினை ஒத்த நிறம் கொண்ட தாடகைமேல்,
கரிய செம்மல் விடுகிறான்.
கரிய செம்மல் அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும்
இராமன் விட்ட அம்பு அவள் நெஞ்சிற் பாய்கிறது.
எத்தகைய நெஞ்சு அவளது?
கடுமையான மலையைப் போன்றது என்கிறான் கம்பன்.
இவ்வுவமை அவள் நெஞ்சின் வலிமை உரைத்தற்கு மட்டுமன்று.
அந்நெஞ்சைத் துளைத்துச் செல்லப் போகின்ற,
இராமபாணத்தின் வலிமையை உரைத்தற்குமாம்.
கல்லொத்த தாடகையின் நெஞ்சில் புகுந்த இராமபாணம்,
வினாடியும் அவ்வயிர நெஞ்சில் இடைநில்லாது,
அப்புறம் போயிற்றாம்.
வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சிற் தங்காது அப்புறம் கழன்று


நெஞ்சின் நடுவில் வினாடியும் நில்லாது,
அப்புறம் கழன்று சென்ற,
அம்பின் தன்மை உரைக்க,
மீண்டும் உவமை தேடுகிறது கம்பனின் மனம்.
நல்லார் அறிவுரை  நில்லா,
கல்லாப் புல்லர் நினைவில் வர,
அவரையே உவமையாக்குகிறான் கம்பன்.
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருளெனப் போயிற்றன்றே.


இப்பாடலில்,
முன்சொன்ன மொழி நுண்மையின் ஒரு பகுதியை,
தெளிவுறக் கம்பன் பதிவு செய்கிறான்.
இராமபாணத்தின் இரு செயல்கள் இப்பாடலில் பதிவாகின்றன.
முதன் நிலையில்,
வெளியிலிருந்து இராமபாணம் தாடகையின் உடலுட் செல்கிறது.
இரண்டாம் நிலையில்,
தாடகையின் உடலுள் இருந்து இராமபாணம் வெளியிற் செல்கிறது.
இவ்விரு நிலைகளுக்கும் உவமை உரைக்கத் தலைப்பட்ட கம்பன்,
மொழியின் இருநிலைகளையே அவற்றுக்கு உவமையாக்குகிறான்.
உள்நுழைகையில் இராமபாணம் சொல்லை ஒத்தது என்ற கம்பன்,
வெளிச் செல்கையில் அதுவே பொருளை ஒத்தது என்கிறான்.
சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்
பொருளெனப் போயிற்றன்றே


மேலிரு தொடர்களிலும்,
சொல்லையும், பொருளையும்  உவமையாக்கிய கம்பன்,
அதன் மூலம் அம்பினது வேகத்தை மட்டுமன்றி,
மொழிப் பயன்பாட்டின் கூறினையும் நமக்கு உணர்த்தி விடுகிறான்.
உள் நுழைகையில் சரம் சொல்லாய்ச் சென்றது,
வெளிச் செல்கையில் அதுவே பொருளாய்ப் போகிறது.
கம்பனின் இவ் விளக்கம் கொண்டு,
பொருளை, செவியின் உள் நுழைக்கும் வரையிலேயே,
மொழி, சொல்லாய்ப் பயன்படுகிறது என்பதையும்,
உள் நுழைந்து எஞ்சி நிற்பது பொருளே என்பதையும்,
தெளிவுறக் கண்டு கொள்கிறோம்.


அம்பு ஒன்றேதான்.
எனினும், உட்செல்கையிலும், வெளிச்செல்கையிலும்,
அதற்காம் உவமை மாற்றி,
அவ்வுவமையை மொழிக்கூறாக்கி,
சொல் பொருளாகும் தன்மையையும்,
பொருளானதும் சொல் தன் தன்மையை இழக்கும் நுட்பத்தையும்,
அற்புதமாய் வெளிப்படுத்துகிறான் கம்பன்.
கம்ப உவமைகளின் கருத்தாழம் தெரிய,
வியந்து நிற்கிறது நம் மனம்.
➹➷
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.