திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 2: "சீசி இவையும் சிலவோ?” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 2: "சீசி இவையும் சிலவோ?” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
றங்கிக் கிடந்தவள் உடன்வர மகிழ்ந்துமே,
அடுத்த இல்லினை அடைந்தனர் மங்கையர்.
சிவன் பெயர் சொல்லாச் சீவர்தம் மனம்போல,
இருண்டு கிடக்கிறது அவ் ஏந்திழையாள் தனதில்லும்.
தூங்கிக் கிடந்து துயிலெழுந்த முதற்தோழி
தன்னை, ஒத்தாள் இத்தளிர்மேனியாள் எனவே,
எண்ணி மனஞ்சோர்ந்து ஏந்திளையார் எல்லோரும்,
பன்னிப் பன்னி அப்பாவையவள் தன்னினையே,
எள்ளி நகையாடி இகழ்ந்தே உரைக்கின்றார்.

✠ ✠ ✠
 


ஓயாது பேசுகின்ற ஒரியல்பு கொண்டவளே!
இராப்பகலாய் பேசும்போதெங்கள் பரஞ்சோதி
அன்னவர்க்கே எந்தன் அன்பு முழுதென்பாய்.
சோதிக்கன்பென்று சொல்லிய வாய் மூடும் முன்,

இருளின்மேல் அன்பாகி இயங்காமல் கிடக்கின்றாய்.
பாசம் பரஞ்சோதிக்கென்றவளே! பற்றதனை
வாசமலர் பொருந்தி வளமாய்க் கிடக்கின்ற,
பஞ்சணைமேல்  வைத்தனையோ பகராய்! எனச்சொல்லி,
நையாண்டி செய்து நங்கையர்கள் நகைத்தார்கள்.
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போ தெப்போ திப்போதாரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்?

✠ ✠ ✠

உள்ளிருந்த பாவையவள் உறங்கிக் கிடக்கவிலை.
நல்லிருளில் நின்றவளும் நாதன் திருநாமம்,
சொல்லிச் சுகானந்த சுகநிலையில் நின்றிருந்தாள்.
சிவம் நினைந்து நின்ற அவள் செபநிலையை உணராது,
அவமாகத் தன்னை அம்மங்கையர்கள் இகழ்ந்துரைக்க,
மங்கை நல்லாள் அவளும் மனம் சலித்து உள்ளிருந்து,
சீச்சி இவையும் சிலவோ விளையாடி,
ஏசும் இடம் ஈதோ என்றே சினக்கின்றாள்.

✠  

ஆண்டின் அதிகாலை அற்புதமாம் மார்கழியில்,
நீண்ட இருள் நீங்கி நிலம் புலரும் வேளையிலே,

சாத்வீகம் நிலம் எங்கும் சார்ந்து கிடக்கிறது.
கூக்கூ எனும் அந்தக் குயில் கூவும் ஓசையிலே,
ஓங்காரநாதம்தான் ஒங்கி ஒலிக்கிறது.
பார் எங்கும் குளிராகப்பனி படர்ந்து ஈசனவன்,
சீர்பாதச் சீதளமாய்ச் சிதறிக் கிடக்கிறது,
கோயில்மணி ஓசையொடு குமுறுகிற சங்கோசை,
வாயில்வரை வந்து வாவென்று அழைக்கிறது.
உள்ளமெலாம் அச்சிவத்தின் ஓங்கும் ஒளி பெருகி,
வெள்ளம் எனப்பொங்கி விளைந்து கிடக்கிறது.
மாசில்லா நிலைகூடி, மயங்கும் மனமதுவும்,
தூசளவும் இருளின்றித் துலங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில் ஈசனவன் ஏந்தும் பெரும்புகழை,
சொல்லாமல் நீரெல்லாம் சும்மா விளையாடி,
என்னைப் பழிப்பதற்கு ஈதோ நேரமென,
சொன்னபடி மங்கையவள் சோதி விளக்கேற்றி,
வண்ணப்படி தாண்டி வாசலிலே வருகின்றாள்.
நேரிழையீர்!
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ?

✠  

அன்னவளைப் பழிசொன்ன அன்பான தோழியரும்,
சீச்சி! எனச்சொல்லி சினக்கின்ற அவள் தன்னை,
ஆற்ற நினைந்து, அன்பான பெண்பாவாய்!
மாற்றமிலா உன்னன்பை மங்கையர்கள் அறியோமோ?
போகம் விளைந்து புகழ்வேண்டித் துதிக்கின்ற,
தன்னலத்துத் தேவர்களும் தாம் காண முடியாது
கூசிக்குறுகி குளைந்தே தான் நின்றிருக்க,
பாசப் பெருமரத்தின் பற்றென்னும் வேரறுக்கும்,
ஈசனவன் மனமகிழ்ந்து ஏந்திழையாள் உனைத்தேடி,
அருள் சுரக்கும் திருவடியை அன்புடனே உந்தனுக்கு
தந்தருள வந்தருளும் தகுதி அறியோமோ?
சிவலோகத்தேசன் அத்தில்லைச் சிற்றம்பலத்து
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரே? அயலாரோ?
உனையொத்த அன்பாலே உறவெமக்கும் இருந்ததனால்,
திணையொத்த நகைசெய்தோம். சேர்வாய் எனும் கருத்தே.
உண்மை உணர்வாய்; உளம் தெளிவாய்; ஓர்ந்திடுவாய்,
பாவாய்! எம்கண்ணின் பாவாய் எனச்சொல்லி,
மங்கையர்கள் எல்லோரும் மனம்நிறைந்து வரவேற்றார்.
விண்ணோர்கள் ஏற்றுதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர் ஏலோரெம்பாவாய்.

✠  

நங்கையவள் உளம்குளிர்ந்து நல்லோர் தமைச்சேர்ந்தாள்.
பாவையர்கள் ஒன்றாகிப் பரமன்தன் புகழ்பாடி,
நாவைத் தேனாக்கி நல்லபடி சென்றார்கள்.
மங்கையர்கள் விளையாட்டை மாண்பாகச் சொல்வதுபோல்,
ஆன்ம நிலைதன்னை அற்புதமாய்ச் சொல்கின்ற,
வாசகர்தம் வாசகத்தில் மனமொன்றிச் சிலிர்க்கின்றோம்.

✠  

வாசகனார் மனமுருகி வளமாகத் தரும் இந்த,
பாசமிகு பாடலிலே பக்தியதன் சுவை துலக்கும்,
தேசுடைய விடயங்கள் தெளிந்திடவே உள் நுழைந்து,
ஆசையுடன் மீண்டும்நாம் அப்பாடல்தனைக் காண்போம்.

✠  

முன்னவனை சோதியென முதற்பாட்டில் சொன்னவர்கள்,
பாங்காக இப்பாட்டில் பரஞ்சோதி என்கின்றார்.
பரம் என்ற வார்த்தைக்குப் பைந்தமிழில் மேல் என்னும்,
சிறந்த பொருள் உண்டு சேர்த்ததனைச் சிந்தித்தால்
பரஞ்சோதி என்றேதான் பகர்கின்ற கூற்றதனால்,
தத்துவங்கள் தனைத் தாண்டி தனித்திருக்கும் அச்சிவனே,
முத்தி தருகின்ற முதற்கடவுள் என்பதையும்...............,

✠  

பாதமதைத் தந்தருள பற்றோடு வருவனென,
ஓதியதால் சிவனவனும் ஓங்கும் அடியவர்தம்,
பக்திவலை தன்னில் படுகின்ற பெருமையையும்........,

✠  

பகலிரவாய் என்னாமல் இராப்பகலாய் என்றுரைத்து,
மறுதலையாய்க் காலத்தை மாற்றி உரைத்ததனால்,
விழித்திருக்கும் பகல் போன்றே விழிமூடும் இரவினிலும்,
ஒயாதப் பெண்பாவை உளமுருகிப் பரமன்பேர்,
மாயாது எப்போதும் மருகி உரைப்பதையும்.....................,

✠  

நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? எனும் கூற்றில்,
'ஓ'வென்னும் ஓரெழுத்தின் உள்நிற்கும் வினாப்பொருளால்,
பஞ்சணையில் பாவைக்குப் பற்றில்லை என்பதனை,
வஞ்சமிலாத் தோழியரும் வாகாய் உரைப்பதையும்
நெஞ்சம் மகிழ்ந்திடவே நேசமிகு வாசகனார்,
கொஞ்சும் தமிழதனால் கூறியிருப்பதையும்.............,

✠  

ஆறறிவு கொண்டும் நீ ஐயன் திருவடியை,
நாடாது நிற்கின்றாய் நங்காய் இப்பூவைப்பார்!
ஓரறிவு கொண்டே உதித்திடினும் பொழுதுற்றால்
தானே மலர்ந்தந்தத் தன்னிகரில் திருவடிக்கு,
ஆளாகி நிற்கும் அவ்வற்புதத்தை அறியாயோ?
பூமேலே கிடக்கின்ற பூவாய்! அப்பூவை விட,
நீ கீழே நின்றால் நின்னைச் சிரியாரோ?
என்ற குறிப்பதனை இயல்பாக உள்ளடக்கி,
போதார் அமளிக்கே என்பதுவாம் பொன்வார்த்தை,
ஆன்ற பொருள்தந்து அற்புதமாய் அமைவதையும் ...................,

✠  

மாணிக்கவாசகர்தம் மருந்தான வார்த்தைகளில்,
கண்டு, களிப்புற்றுக் கண்சோர நின்றழுது,
விண்ணார்ந்த பெரும் சிவனை வீறோடு போற்றுகிற
பண்ணை நினைந்தோதி, பாடிப்பரவிடுவோம்.

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போ தெப்போ திப்போதாரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்!
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ? விண்ணோர்கள் ஏற்றுதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர் ஏலோரெம்பாவாய்.

✠  
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.