'நீள நினைந்து ...'-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
இலக்கியக் களம் 11 May 2019
ஊர் உறங்கிக்கொண்டிருந்தது.
இரவு முழுதும் உறங்காத கண்கள் சிவந்திருக்க,
மீண்டும் ஒருதரம் கண்மூடி உறங்க முயற்சித்தாள் பூங்கோதை.
டாங்.... டாங்.... டாங்...,
தூரத்தில் சிவன்கோயில் மணியோசை.
மூடிய இமைகள் படீரெனத் திறக்க,
'சிவ சிவா' என மனம் ஓலமிட்டது.
படுக்கையில் கிடந்தபடி,
மணியோசை வந்த திசைநோக்கி வணங்கினாள் அவள்.
வசந்தகாலக் குயில்கள்,
துணைதேடிக் குரல் கொடுக்க,
அவள் மனம் மேலும் வாடிற்று.
✷✷✷
அடுப்பங்கரையில் எழுந்த ஓசை,
அன்னை விழித்ததை உணர்த்த,
வழமையாய்த் துள்ளியெழுந்து துணைசெய்யப் போபவள்,
ஏனோ இன்று எழும்ப மனமின்றி,
மீண்டும் ஒருதரம் புரண்டு படுத்தாள்.
நெற்றியில் 'சில்' என்று குளிர் பரவ,
மென்மையாய் அன்னையின் கரம் தொடுவதை உணர்ந்தும்,
பேசாமற் கிடக்கிறாள்.
'கோதாய்! என் கண்ணே!
மணியோசை கேட்டும் எழாதிருக்கிறாயே,
ஏதும் உடல்நலக் குறைவோ?'
ஒவ்வொரு அட்சரத்திலும் அன்பு கலந்த,
அன்னையின் வார்த்தைகள்,
அவள் மன நெகிழ்வை மேலும் அதிகரிக்க,
அருகமர்ந்த அன்னையின் இடையைக் கைகளாற்
கட்டிக்கொண்டு,
அவள் மடியில் தலையேற்றுகிறாள் கோதை.
'ஏதும் இல்லை அன்னாய்! இன்று ஏதோ சோர்வு,
சில நாழிகை இங்ஙனமே துயின்று வருகிறேனே...'
கோதை குரலில் கெஞ்சல்.
'நல்ல பெண்தான் போ,
வதுவை வயதாகிறது,
அதிகாலை எழுந்து பழக வேண்டாவோ?
தந்தை அறியின் கோபிப்பார்.
சரி.. சரி...
இன்று மட்டும் இன்னும் சில நாழிகை துயின்று வா என் செல்வமே!'
குனிந்து நெற்றியில் முத்தமிட்டுச் செல்கிறாள் தாய்.
அவள் ஈரமுடியின் ஓரிரு துளிகள் முகம் சிந்த,
தூக்கம் முற்றாய்த் தொலைத்து,
மீண்டும் ஒருதரம் திரும்பிப் படுக்கிறாள் பூங்கோதை.
✷✷✷
சடங்கவியார்,
புத்தூர் மதிக்கும் வேதவிற்பன்னர்.
மாணவர்க்கு மறை ஓதுவிக்கும் கலையில் தனிப்பெயர் பெற்றவர்.
சூரியன் எழுமுன் அந்த வீட்டு வாசலில்,
வேதகோஷம் தொடங்கிவிடும்.
ஒன்றாய்க் கூடி வேதம் ஓதும் மாணவர்களில்,
தவறாய் ஓதுபவனை,
குரலோசையாலேயே இனங்காணும் வல்லவர்.
அவரின் மாணாக்கர் என்பதே தனித்தகுதி.
கடலெனப் புலமை பெற்றவர்.
ஒழுக்க சீலர்.
புலமையும் பொருளும் ஒன்று சேருமோ?
இருவேறு உலகத்து இயற்கை.
அங்கும் திரு வேறாகியிருந்தது.
வறுமையிலும் செம்மை.
வாழ்க்கைத்துணை மீனாட்சியம்மை வளத்தக்க வாழ்வுடைய
தெய்வப்பெண்.
பூங்கோதை என்னும் ஒரே செல்லப் புதல்வி.
வறுமையிலும் செம்மையான வாழ்க்கை அவர்களது.
✷✷✷
உறக்கம் தொலைத்த பூங்கோதை மனதில்,
முதல்நாட்காலை நிகழ்ச்சிகள் விரிகின்றன.
இரவு முழுவதும் உறக்கம் தொலைக்க,
காரணமான நிகழ்ச்சிகள்...
✷✷✷
சடங்கவியார் இல்லம்.
அதிகாலை நேரம்.
தாயார்க்குத் துணையாய் எழுந்து,
பூங்கோதை தன் கடமை இயற்றுகிறாள்.
வாசலில் கையிட்ட கோலம்,
அவள் மனதின் அழகை உணர்த்திற்று.
மாணாக்கர் வருமுன் காலைக்கடமைகள் முடிந்தாக வேண்டும்.
ஆண்பிள்ளைகளின் வருகைக்கு முன்,
முன்றில் வேலைகள் முடித்து,
தாயும், பெண்ணும் உட்செல்வார்கள்.
அதிகாலை தொடங்கும் வேதபாராயணம் முடிய நடுப்பகலாகும்.
அதற்குள் தந்தையின் மதிய பூஜைக்கான ஆயத்தங்களை
மகள் செய்ய,
அட்டில் தொழிலை அன்னை செய்வாள்.
✷✷✷
இன்று என்னவோ தெரியவில்லை.
உளத்தில் கற்பனை விரிய விரிய,
கோதையிட்ட கோலமும் விரிந்தது.
காலத்தை மறந்தாள் பூங்கோதை.
சரக்... சரக்.... சரக்...,
வலிய காலோசை ஒன்று காதிற்பட,
காலம் உணர்ந்து சரேலென நிமிர்ந்தவள் கண்களில்,
அவன் பட்டான்!
✷✷✷
நாசிக்கூர்மையும் நயனக்கூர்மையும்,
அவன் அறிவுத்திறன் உணர்த்தின.
முன்மழித்த நெற்றியில், துலங்கியது நீற்றின் ஒளி.
நெற்றியின் ஓரத்தில் ஒரு கரிய மறு.
அது அவன் வெண்மை முகத்தை மேலும் ஒளி செய்தது.
ஈரம் தோய்ந்த தொய்ந்த குடுமி அவன் அழகை இன்னும் உயர்த்த,
பரமசிவனாய்க் காட்சி தந்தான்.
✷✷✷
பட்டாம்பூச்சியாய்க் கண்கள் படபடக்க,
கோலப்பொடிக் கிண்ணத்தைப் பூங்கோதை கை தவற விட்டாள்.
முதன்முதலாய் நிகழ்ந்த ஓர் ஆணின் கண் ஸ்பரிசம்.
'க்க்கும்...'
சங்கடம் தவிர்க்க கண்டம் செருமி,
வானம் பார்த்து அவன் பேசத்தொடங்கினான்.
'வந்து... குருநாதர்... இல்லத்தில்... இல்லையோ?'
அவன் வலிய குரலிலும் தடுமாற்றம்.
அவன் மழித்த முகத்தில்,
குமுதமாய்ச் சிவந்திருந்த உதடுகள் அசைய,
ஆண்மைக்கே உரிய அக்குரல்,
அவள் உள்ளத்தில் ஆழப்பதிந்தது.
பதிலேதும் சொல்லாது,
விரல் நிலம் கீற நின்ற பூங்கோதையை,
அவன் கண்கள் மொய்க்கின்றன.
குனிந்த அவள் முகத்தின் கரும்புருவங்களுக்கு மத்தியில்,
கோடிட்டாற்போல் நீண்டிருந்தது கூரிய நாசி.
கொவ்வைப்பழமாய்ச் சிவந்த அவள் உதடுகள் காண,
அந்நாசி வழிகாட்டுகிறதோ?
மயங்கினான் அவன்.
அவளைக் கூர்ந்து நோக்கி,
'இக்கோலம் எனை மயக்குகிறதே' என,
அவன் இரட்டுறப்பேசி வாய் மூடுமுன்,
'கோதாய்!' தாயின் குரல் கேட்டுத் தாவி அவள் ஓட,
வேத ஓலைகள் அவன் கையினின்றும் நழுவி வீழ்ந்தன.
✷✷✷
கோதையின் உறக்கங் கெடுத்த,
நேற்றைய அதிகாலைச் சம்பவம் அது.
அவன் பார்வையில் தன்னைப் பறிகொடுத்திருந்தாள் அவள்.
கண்மூடும் நேரமெல்லாம் அக்காளையின் நினைவு.
உறக்கம் நெருங்கும்போதெல்லாம்,
'இக்கோலம் எனை மயக்குகிறதே'
அவன் குரல் தட்டியெழுப்பியது.
இன்னும் சற்று அழகாய்க் குழல் முடித்திருந்திருக்கலாமோ?
அவள் வீணாய்க் கவலை கொண்டாள்.
ஆண்குரல் இத்தனை ஈர்ப்புடையதா?
வேதம் சொல்வதால் விளைந்த ஈர்ப்போ?
பூணூலன்றி வேறு மறைப்பில்லாத,
அவன் வெற்றுடலிற் கண்ட விம்மும் தோள்களும்,
உரோமம் நிறைந்த மார்பும்,
கண்களில் வந்து வந்து போயின.
ஆண்மை இத்துணை கவர்ச்சியானதா?
தந்தையையும் மூத்தோரையும் தவிர,
வேறெந்த ஆண்களையும் கண்டிராத அவள் மனத்துள் கேள்வி.
அவளையறியாமல் பெண்மை மலர,
தனித்துத் தவித்தாள்.
✷✷✷
அப்பூஞ்சோலையுள் இரு பச்சைக்கிளிகள்,
சொண்டுகளால் ஒன்றையொன்று கொத்த,
புன்னைமர நிழலிலிருந்த பூங்கோதையின் கன்னங்கள்,
தொடுவாரின்றிச் சிவந்தன.
ஏனோ அவள் கண்கள் கலங்கின.
அருகிருந்த அவள் உயிர்த்தோழி மங்கை அதுகண்டு பதறினாள்.
'என்ன பூங்கோதை?
காலையிலிருந்து ஏதோ சொல்லத் துணிகிறாய்,
ஆனால் சொல்கிறாயில்லை.
உதயத்தில் வந்தோம், உச்சிவேளையுமாகிறது.
இப்போது திடீரெனக் கண் கசிகிறாய்.
என் ஆருயிர் அல்லையோ நீ!.
தயைகூர்ந்து சொல்ல வந்ததைச் சொல்வாய்.
இதற்குமேல் என் இதயம் தாங்காது கண்ணே!'
கைபிடித்த தோழியின் மடியில் விழுந்து,
குலுங்கி அழுகிறாள் பூங்கோதை.
அழுகை தன்னிலும் தொற்றிக்கொள்ள,
மங்கை, மனம் பதறுகிறாள்.
'என்னடி பெண்ணே? யாது நடந்தது? ஏன் இக்கண்ணீர்?'
பதறும் மங்கையின் கைபிடித்து,
முதல்நாட் காலை நடந்ததை,
உரைக்கத் தொடங்கினாள் பூங்கோதை
✷✷✷
'என்னது?........'
அடிவயிற்றிலிருந்து எழுந்த காற்றுப்பந்து,
தொண்டையை அடைக்க,
பதறிக் கேட்கிறாள் மங்கை.
'ஆடவனிடம் மனம் பறிகொடுத்தாயா?
அதுவும் தந்தையின் மாணாக்கனிடமா?
தன் புதல்வியிடமே மாணவன் களவியல் கற்றான் எனக்
கேள்வியுற்றால்,
தந்தை உயிர் துறப்பாரே! அறியாயோ?
சிவனே இஃது என்ன குழப்பம்?'
தலையிற் கைவைத்து அதிர்கிறாள் மங்கை.
✷✷✷
'மங்கை, சற்றுப்பொறு!
வார்த்தைகளை வீணே ஓடவிடாதே.
யான் தந்தைக்கு தீங்கிழைப்பேனோ?'
'அங்ஙனமாயின் அந்த ஆடவனை மறப்பையோ?'
'அது நடக்குமேல் உயிர் துறப்பேன்.'
'பைத்தியக்காரி! என்ன உளறுகிறாய்?
தந்தையையும் மறவேன்; தலைவனையும் மறவேன் என்கிறாயே,
அங்ஙனமாயின் உன்வழி?'
'என் ஐயன் என்னைக் கைவிடான்.'
'ஐயனா! தந்தையைச் சொல்கிறாயா?'
'இல்லை.'
'பின் கண்ட தலைவனைச் சொல்கிறாயா?'
'இல்லை.'
'பின் யாரைத்தானடீ... சொல்கிறாய்?'
மீண்டும் கண்கலங்க,
ஆலயத்திசை நோக்குகிறாள் பூங்கோதை.
'பிறந்தநாள் தொட்டு,
நமசிவாய, நமசிவாய என்று பயில்கிறேனே!
அந்த நாதனைச் சொல்கிறேன்.'
டாங்.... டாங்.... டாங்...,
உச்சிவேளைப் பூசைக்காய்
சிவன்கோயில் மணியோசை ஒலிக்கிறது.
சிலிர்த்த பூங்கோதை தலையிற் கைவைத்து வணங்க,
'நாழியாயிற்று அன்னை தேடுவள் போகலாம் வா.'
இழுத்துச் செல்கிறாள் மங்கை.
✷✷✷
சடங்கவியார் வீட்டில் பெருங்கூட்டம்.
ஒரே பரபரப்பு.
பட்டுப் பளபளக்க,
பிரமுகர்களாய்ச் சிலபேர் அவர்முன்.
'ஐயன்மீர் வந்த நோக்கம்?'
நிமிர்வுடன் சடங்கவியார் வினவுகிறார்.
'யாம் திருமுனைப்பாடி நாட்டிலிருந்து வருகிறோம்.
சக்கரவர்த்தி நரசிம்மமுனைவர் தம் தூதர்கள்.'
'சக்கரவர்த்தித் தூதா? இவ்வேழையேனிடமா? யாது விடயம்?'
வியந்து வினவுகிறார் சடங்கவியார்.
'தங்கள் பொருளொன்றை இரந்து நிற்கிறார் சக்கரவர்த்தி'
'பேரரசர்க்கு என் சொத்தா?
யாதுண்டு என்னிடம் அரசர்க்கு வழங்க?'
'ஒழுக்கத்தை விடவும் உயர்ந்த ஒரு சொத்துண்டா?'
தூதரில் தலையானோன் பேசுகிறான்.
'அதனைக் கொடுத்தலும் கூடுமா?'
வியக்கிறார் சடங்கவியார்.
'தாராளமாக,
ஒழுக்கமே வடிவான தங்கள் மகளாரை தானமாய்த் தரலாமே!'
'சிவ சிவ, என்ன கொடுமை!
அரசர்க்கு அந்தணர் குலத்திற் பெண்ணா?'
செவி பொத்திக் கலங்குகிறார் சடங்கவியார்.
'அஞ்சாதீர்! அந்தணர்க்கேதான் பெண்கேட்டு அனுப்பியிருக்கிறார்.'
'இஃதென்ன குழப்பம்?'
'உங்கள் கல்வியும் ஒழுக்கமும் அறிந்து,
திருமுனைப்பாடி அந்தணரான,
சடையனார் இசைஞானியார் தம்பதிகளின் ஏகபுதல்வனும்,
தன் வளர்ப்பு மைந்தனுமான ஆரூரர்க்கு,
பெண்கேட்டு அனுப்பியிருக்கிறார் சக்கரவர்த்தி.
தயை செய்தல் வேண்டும்.'
சடங்கவியார் முகத்தில் சூரியோதயம்.
✷✷✷
உள்நின்ற மீனாட்சியம்மை உச்சியில் கைவைத்து,
'சிவனே!' என்கிறார்.
மகளுக்கு அமையப்போகும் அரசவாழ்வு நினைந்து,
அருகிருந்த பூங்கோதையை அவர் அணைத்து உச்சிமோர,
நெஞ்சம் பதறுகிறாள் பூங்கோதை.
பதறும் அவள் உணர்வறிந்து,
சிதறும் தன் கண்ணீர்த்துளி மறைத்து நிற்கிறாள் தோழி மங்கை.
✷✷✷
அதே புன்னைமரம்.
ஒற்றைக்கிளி ஒன்று,
அதன் கிளையில் துணைதேடி அங்குமிங்கும் பார்க்கிறது.
அதன் உணர்வறிந்து உள்ளுருகுகிறாள் கோதை.
அவள் அருகில் மங்கை.
'மூடப்பெண்ணே! இனி யாது செய்வாய்?
திருமணம் நிச்சயமாகிவிட்டது நாளை வதுவை.
அந்நேசனை மறந்துவிடு.' - மங்கை சொல்ல,
'உயிரைத் துறந்து விடட்டுமா?' - கோதை வினவுகிறாள்.
'என்னடீ பேதைப்பெண்ணே?
உன் திருமணத்தால் ஊரே திருவிழாக்கோலம் கொண்டிருக்கிறது.
நாளை மாப்பிள்ளை வருகிறாராம். அவ் ஆரூரர் சுந்தரராம்.
அவர் அழகு காண ஊரே ஆவலாய் இருக்கிறது.
நீயோ தந்தையை எதிர்க்கிறாயுமில்லை.
மனங்கொண்ட தலைவனை மறக்கிறாயுமில்லை.
ஏதுதான் செய்வாய்?' - பதறுகிறாள் மங்கை.
'நாயகன் கைபிடிப்பேன்'. - கோதை குரலில் உறுதி.
'வாய்திறந்து காதலும் உரைக்காத அவனையா?'
'கண்ணால் காதலுரைத்த அவரை.'
'அவன் ஊர்?'
'அறியேன்.'
'அவன் பெயர்?'
'அறியேன்.'
'பின் அவனை எங்ஙனம் இனங்காண்பாய்?'
'நெற்றியில் மறு உள்ளவர்.'
'நல்ல அடையாளம் சொன்னாய், போடீ பைத்தியக்காரி.
இந்நிலையிலும் அவனை மறவாயா?'
'எந்நிலையிலும் மறவேன்.'
'அங்ஙனமாயின் தந்தையின் கதி?'
'ஏதும் நேராது.'
'எங்ஙனம்?'
'ஈசன் இருக்கிறான்.'
கோதையின் குரலில் உறுதி.
✷✷✷
அரச சபைபோல் இருந்த அந்தக் கல்யாண மண்டபத்தில்,
பெருங்குழப்பம்.
அரச தோற்றத்திலிருந்த அந்தண மணமகனைப் பார்த்து,
'அடிமை' என்கிறான் அந்தக் கிழவன்.
ஊரே பதற,
'பித்தா!' என அக்கிழவனை ஏளனம் பேசிச் சிரிக்கிறான் மணமகன்.
நடுங்கும் அக்கிழவன் முகத்தில் தெய்வஒளி.
'பித்தனும் ஆக! பின் பேயனும் ஆக!
வித்தகம் பேசவேண்டாம் பணி செய்யவேண்டும்!'
உறுதிபட உரைத்த கிழவன், சான்றாய் ஓலை காட்டுகிறான்.
அவன் கையிருந்த ஓலை பறித்து எரியுள் இடுகிறான் மணமகன்.
அருகில் பூங்கோதை.
அவள் கண்கள் மூடியிருக்கின்றன.
'சிவ சிவ' என்று வாய் முணுமுணுத்தபடி,
கண்ணில் நீர்வழிய அருகில் மங்கை.
'மூல ஓலை காட்டி வழக்குரைப்பேன் வருக' - கிழவன் அழைக்க,
ஊர்; அவன் கூற்றுக்கு ஒருப்படுகிறது.
மறுக்க இயலாமல் மணமகன் செல்கிறான்.
திருமணம் நிற்கிறது.
✷✷✷
பதறுகிறார் சடங்கவியார்.
கன்னியின் திருமணம் நின்றால் பின் அது கைகூடுமோ?
சிவனே! சிவனே! என்று,
அவர் வாய் முணுமுணுக்க உடல் பதறுகிறது.
மணப்பந்தலில் நின்ற வாழையில் சாய்கிறார்.
கற்று நிமிர்ந்த அவர் தலையும் அவ்வாழைமரக் குலையாய்.....
கணவனார் முதுகின்பின்,
தோள் மூடிய சீலைத்தலைப்பால் வாய்பொத்தி,
விம்முகிறாள் மீனாட்சியம்மை.
'மணப்பந்தல் ஏறிய இவளுக்கு,
இனி மாங்கல்யம் ஏற்ற எவர் முன்வருவார்?
இக்கன்னியை எவர் கொள்வார்?'
அவ் அறிவு மலை வாய்விட்டுக் கதறுகிறது.
சபை கலையத் தொடங்க மாணாக்கர் முகத்தில் மருட்சி.
பலபேர் வெளி பார்க்க,
'அடியேன் கொள்வேன்' ஒரு மாணாக்கன் எழுகிறான்.
ஓசை வந்த திசைநோக்கி,
தோழி மங்கையின் கண்கள் செல்கின்றன.
எழுந்த அவ் இளைஞனின் நெற்றியில் ஒரு மறு.
'சிவனேஏ.... !' தோழி மங்கை கூவி விழ,
பூங்கோதை கண்ணில் வெள்ளமாய்க் கண்ணீர்.
காரணம் தெரியாது சபை திகைக்கிறது.
✷✷✷
சாந்திமுகூர்த்தம்.
கோதையின் கைபற்றி,
நெற்றி மறுவுள்ள அவள் நேசன் வியப்போடு உரைக்கிறான்.
'கோதை,
ஆரூரனை ஆட்கொள்ள,
அவ் ஆண்டவரே கிழவராய் வந்தாராம்.
ஊரெல்லாம் ஒரே பேச்சு,
அறிந்தாயோ?'
கண்கள் கரைந்தோட,
கோதையின் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பு.
✷✷✷