'பாவிகளை மன்னிப்பீராக!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'பாவிகளை மன்னிப்பீராக!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

ள்ளம் வருந்த இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
நாட்டினால் நான் ஒரு இலங்கையன்.
இனத்தினால் நான் ஒரு ஈழத்தமிழன்.
ஊரினால் நான் ஒரு யாழ்ப்பாணத்தான்.
சமயத்தினால் நான் ஒரு இந்து.
இவைதான் உலகில் என்னை அடையாளப்படுத்தும் விடயங்கள்.
மேற்சொன்ன வரிசையிலேயே என் அடையாளங்களை,
நான் முக்கியப்படுத்துகிறேன்.
ஓர் இலங்கையனாக நான் எனது தேசத்தை நேசிக்கிறேன்.
ஒரு ஈழத்தமிழனாக நான் எனது மொழியை நேசிக்கிறேன்.
ஒரு யாழ்ப்பாணத்தவனாக நான் எனது ஊரை நேசிக்கிறேன்.
ஒரு இந்துவாக நான் எனது சமயத்தை நேசிக்கிறேன்.

🏮🏮🏮🏮🏮


இந்த அடையாளங்கள் எனக்கு மட்டும் உரியவை அல்ல
நம் இலங்கை மண்ணில் வாழும் அனைவர்க்கும்,
இவை போன்ற அடையாளக்குறியீடுகள் உள்ளன.
இந்த அழகான சிறு தீவுக்குள்,
மேற்சொன்ன வேறுபட்ட அடையாளங்களால் பிரிவுபட்டும்,
இவ் அடையாளங்களால் பேதமுறாமல்,
இலங்கையர் என ஒன்றுபட்டும் நாம் வாழும் வரைதான்,
நம் இலங்கைத்தேசம் இந்துசமுத்திரத்தின் முத்தாகத் திகழும்.
என்று அதில் மாறுபாடு உண்டாகிறதோ,
அன்றே இத்தேசம் இந்துசமுத்திரத்தின் கண்ணீர்த்துளியாய் மாறிவிடும்.

🏮🏮🏮🏮🏮

மேற்சொன்ன ஒவ்வொரு அடையாளமும்,
என்னைப் பெருமைப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன்.
அவ் அடையாளங்களுள் தலையாயதான,
'இலங்கையன்' என்ற எனது முதல் அடையாளம்,
இந்நாட்டினுள் ஊராலும் மொழியாலும் மதத்தாலும் வேறுபட்டிருக்கும்,
பல்லாயிரக்கணக்கானவர்களை எனது சகோதரர்களாக்குகிறது.
அதனாற்றான், 'இலங்கையன்' என்ற அந்த எனது முதல் அடையாளத்தை,
முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

🏮🏮🏮🏮🏮

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற திசைகளால்,
நம் தேசத்தினுள் பிரிவுபட்டுக் கிடக்கும் பற்பல ஊர்களுள்,
தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பேசியும்,
பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எனும் மதங்களைப் பின்பற்றியும்,
பிரிவுபட்டு இருந்தாலும், 'இலங்கையர்' என்ற அந்த ஒரு வார்த்தை,
இத்தேசத்தவர் அனைவரையும் ஒருகுடைக்கீழ் கொணர்ந்துவிடுகிறது.

🏮🏮🏮🏮🏮

தலைவர்கள் என்று தம்மைத்தாம் சொல்லிக்கொண்டோர்,
இந்த அற்புதமான ஒருமைப்பாட்டை தமது அரசியல் இலாபம் கருதி,
என்றைக்கு உடைக்கத் தலைப்பட்டனரோ,
அன்றைக்கே, இத்தேசத்தின் உன்னதங்கள் எல்லாம் வீழத்தொடங்கின.
இனங்களுக்கிடையில் பகை மூட்டி, பிரிவுகள் உண்டாக்கி,
அப்பொய்மைத் தலைவர்கள் செலுத்திய புதுவிஷம்,
இத்தேசவிருட்சத்தின் வேர்வரை சென்று,
இன்று அவ் அழகிய விருட்சத்தை வீழ்த்த முனைந்து நிற்கிறது.

🏮🏮🏮🏮🏮

உண்மைத் தேசப்பற்றுள்ளோர் அவ்விஷத்தை முறிக்க,
படாதபாடுபட்டுவரும் இன்றைய நிலையில்,
கொடுமையிலும் கொடுமையாக,
அவ் அரசியல் தலைவர்களுக்குப் போட்டியாக முளைத்து,
மதத்தலைவர்கள் சிலர் இன்று மதப்பிரிவுகளாலும் பேதங்களை உருவாக்கி,
அதன் மூலம் இத்தேசத்துள் இன்னொரு விஷத்தையும் புகுத்த முயன்றுவருவது,
இம்மண்மீது பற்றுக்கொண்ட அனைவரையும் மருளச்செய்கிறது.

🏮🏮🏮🏮🏮

என் மத அடையாளம் இந்து என்று முன்னர் உரைத்தேன்.
சரியாகச் சொல்லப்போனால் இந்துசமயத்தின் ஒரு கூறான,
சைவசமயமே எனது உண்மைச் சமய அடையாளம்.
நான் ஓர் இந்துவாகவோ அல்லது சைவனாகவோ என்சமயத்தின்மீது,
எல்லையற்ற பற்றுதலையும், காதலையும் கொண்டிருக்கிறேன்.
என்சமயத்தின் மீது நான் கொண்டிருக்கும் பற்றுதல் என்பது,
நிச்சயம் மற்றொரு சமயத்தின்மீதான பகையன்றாம்!
இந்த விடயத்தில் என் அறிவு பூரண தெளிவு பெற்றிருக்கிறது.

🏮🏮🏮🏮🏮

இத்தெளிவையும் என் சமயமே எனக்கு ஊட்டிற்று.
என் சமயத்தைச் சார்ந்த ஞானியருள் ஒருவரான திருமூலர் உரைத்த,
'அன்பே சிவம்' என்ற மகுடவாசகமே என் சமயத்தின் அடிப்படைக் கொள்கையாம்.
அன்பையே கடவுளாக வழிபடும் என் சமயத்தவர்க்கு,
மற்ற எந்தச்சமயத்தின்மீதும் பகையில்லை என்பது உறுதி.
எனது சமயமான சைவம் சிறந்தது என்று நான் சொல்வதன் அர்த்தம்,
மற்றொரு சமயம் தாழ்ந்தது எனும் பொருளை உட்கொண்டதன்று.
என்தாய் அழகி என்று நான் உரைப்பது,
மற்றவரின் தாய் அழகில்லாதவள் எனும் ஒப்பீட்டில் விளைந்ததன்றாம்.
அதனாற்றான் என் இந்துமதத்தைச் சார்ந்தவர்கள்,
எல்லா மதத்தவரையும் அணைத்து நின்றனர்.

🏮🏮🏮🏮🏮

சைவசமயத்தின் அனுபூதிமான்களின் வரலாற்றைத் தொகுத்துரைத்த,
'பெரியபுராணம்' எனும், எங்கள் சமயத்தின் தலைமை இலக்கிய நூலில் உரைக்கப்பட்ட,
அறுபத்துமூன்று அடியாருள், மாற்றுச் சமயத்தவரான சாக்கிய நாயனாருக்கும்,
இடம் கொடுத்து மகிழ்ந்தது என் சமயம்.
என் சமய முன்னோடிகளைத் தொழுது திருத்தொண்டர் தொகை பாடிய,
எங்களின் தலைமைக் குருமார் நால்வருள் ஒருவரான சுந்தரர்,
அப்பாலும் அடிசார்ந்த அடியாருக்கும் அடியேன் என்று பாடி,
மாற்று சமயத்தவரையும் மதிக்க எமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
அதனாற்றான்,
மதபேதம் காட்டி மனிதர்களுக்குள் பகையூட்டும் பழக்கம்,
எங்கள் இந்துமதத்தில் என்றும் இருந்ததுவுமில்லை.
எவரிடமும் அது இருந்தால், அதனை நாம் ஏற்பதுவும் இல்லை.

🏮🏮🏮🏮🏮

நான் வணங்கும் எனது கோயிலும்,
நெற்றியில் பூசும் விபூதியும் கழுத்தில் அணியும் உருத்திராக்கமும்,
எனக்கு எவ்வளவு புனிதமானதோ, அதே அளவு புனிதமானதாய்த்தான்,
பௌத்தர்களின் விகாரையினையும், அவர்கள் போற்றும் தர்மசக்கரத்தினையும்,
கிறிஸ்தவர்களின் தேவாலயத்தையும், அவர்கள் போற்றும் சிலுவையையும்,
இஸ்லாமியர்களின் பள்ளிவாசலையும், அவர்கள் போற்றும் பிறை வடிவையும்,
நான் கருதுகிறேன்.
நான் மட்டும் என்றில்லை பெரும்பான்மை இந்துக்களின் மனநிலையும் இதுவேயாம்.

🏮🏮🏮🏮🏮

நான் சொல்வது மிகை என்று நீங்கள் கருதினால்,
கிறிஸ்தவ தேவாலயங்கள் பலவற்றில் போய்பாருங்கள்,
நெற்றியில் விபூதியோடும் குங்குமத்தோடும் கூடிய,
இந்துப் பண்பாட்டு அடையாளங்களுடனேயே,
எம்மவர் பலர் அவ்வாலயங்களில் வழிபடுதலை நீங்கள் காணலாம்.
அதுமட்டுமல்ல,
கிறிஸ்தவர்களின் 'கிறிஸ்மஸ்' பண்டிகையை நம் இந்துக்கள் பலர்,
தமது இல்லங்களில் இயேசுபிரான் பிறந்தது போன்ற அலங்காரக் குடில் அமைத்து,
அம்மதத்தார் போலவே கொண்டாடுவதையும் நீங்கள் வெளிப்படையாய்க் காணமுடியும்.

🏮🏮🏮🏮🏮

இந்த விடயத்தில் பௌத்தர்கள் இந்துமக்களோடு மிக நெருக்கமானவர்கள்.
இலங்கையில் பெரும்பான்மையாய் அமைந்துவிட்ட தமது சனத்தொகையை வைத்து,
இந்நாட்டில் தமது பௌத்தமதத்திற்கே முதலிடம் என்று பிடிவாதம் பிடித்து நின்றாலும்,
அவர்கள், தம்மையறியாமல் இந்துமதத்தோடு நெருங்கிநிற்பது யதார்த்த உண்மை.
இந்து ஆலயங்கள் பலவற்றிலும், இன்று அவர்கள்,
நம்மவரைவிட அதிக பக்தியோடு வழிபட்டு வருகின்றனர்.
எப்படி எமது இந்துமக்கள் கிறிஸ்தவ ஆலயத்திற்கும் செல்கிறார்களோ,
அதுபோலவே பௌத்தர்கள் இந்து ஆலயத்திற்குச் செல்வதில் தயக்கம் காட்டுவதில்லை.
அவர்களது விகாரைகள் பலவற்றிலும் கூடத் திருமால், முருகன், காளி, விநாயகர் என,
பல இந்துத் தெய்வ சொரூபங்கள் ஸ்தாபிக்கப்பட்டே இருக்கின்றன.
கதிர்காமத்தை அவர்கள் தம்வயப்படுத்தியிருந்தாலும்,
முருகனைத் தமது தெய்வமாய் உருகிப்போற்றுவதை,
நாம் கண்கூடாகக் காணமுடிகிறது.

🏮🏮🏮🏮🏮

இந்த விடயத்தில் இஸ்லாமியர்களின் கட்டுப்பாடு உறுதியானது.
அவர்கள் தமது சமய மார்க்கத்தை உறுதியாகப் பற்றி நிற்பதோடு,
தமது வழிபாட்டினை பெரும்பாலும் முடித்துக்கொள்கின்றனர்.
அவர்கள் மாற்றுச் சமய ஆலயங்களுக்குப் போவதுமில்லை.
அதுபோலவே மாற்றுச் சமயத்தவரும் அவர்களின் பள்ளிவாசலுக்கு அதிகம் செல்வதுமில்லை.
நம்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமிய மத அமைப்புக்கள்,
மதமாற்றப் பிரச்சாரங்கள் செய்து மற்றைச் சமயத்தவரை,
தமது மதத்தின்பக்கம் ஈர்ப்பதான செய்திகளை,
நான் அதிகம் அறிந்ததில்லை.
வேற்றுமதத்தவர் பலர் தேவைகள் நோக்கி இஸ்லாமிய மதத்திற்கு மாறி வருவதை,
பத்திரிகைகளில் வரும் பெயர் மாற்ற விளம்பரங்கள் உரைத்து வருவது உண்மையேயானாலும்,
அம்மாற்றம் எவரது அழுத்தமுமின்றி அவரவர் விருப்பப்படி நடப்பதாகவே பெரும்பாலும் கருதப்படுகிறது.
இதுதான் இலங்கைச் சமயங்களின் இன்றைய ஒருமைப்பாட்டு நிலை.

🏮🏮🏮🏮🏮

சம்பந்தா சம்பந்தமில்லாமல்,
இலங்கையின் மத நிலை பற்றியதான,
இவ்வளவு நீண்ட ஓர் முன்னுரையினை,
இங்கு நான் எழுதுவதன் காரணம் என்ன என்று,
உங்களில் பலர் குழப்பமுறுவீர்கள்.
காரணத்தோடுதான் இந்நீண்ட முன்னுரையை எழுதினேன்.
இனி அக்காரணத்தை விபரிக்கத் தலைப்படுகிறேன்.

🏮🏮🏮🏮🏮

இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என்ற,
இம்மதத்தவர்களிலிருந்து வேறுபட்டு,
நம்நாட்டுக் கிறிஸ்தவர்கள் மட்டும்,
மதமாற்றப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்து,
மற்றைய மதத்தவரை வெளிப்படையாய் விழுங்க முற்படுவதோடு,
இத்தேசத்திற்கு ஆபத்தான மதவெறி என்ற விஷத்தை ஊட்டி,
இனபேதம் போல மதபேதம் ஒன்றையும் உருவாக்கி,
இந்நாட்டு மக்களைப் பிரிக்க முயல்வது,
மிகுந்த மனவருத்தத்தினைத் தருகிறது.
அதுபற்றியே இக்கட்டுரையில் விபரிக்கப்போகிறேன்.

🏮🏮🏮🏮🏮

                                                                                                              (மிகுதி அடுத்தவாரத்தில்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.