பெருங்கருணைப் பேராறு !

பெருங்கருணைப் பேராறு !
 

லகு இறைவனின் கருணை வெளிப்பாடு.
உயிர்கள் தம் வினைநீங்கி உய்யும் பொருட்டு,
தனு, கரண, புவன போகங்களை,
மாயையினின்றும் உபகரிக்கின்றான் இறைவன்.
அவற்றுள் புவனமாகிய உலகே போகங்களை உள்ளடக்கி நிற்கிறது.
காரியமாகிய உலகைக் கொண்டே,
காரணனாகிய இறைவனை உணரல் கூடுமாம்.
அதனாற்றான், ஆதிபகவன் முதற்றே உலகு என்றார் வள்ளுவர்.
 



இறைவனின் கருணையின்றி,
உயிர்கட்கு என்றும் உய்வில்லையாம்.
தனக்கென்று விருப்போ, தேவையோ இல்லாத,
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய இறைவன்,
தன் பெருங்கருணையினால்,
மலவயப்பட்ட ஆன்மாக்களை,
அதனின் நின்றும் விடுவித்து,
தன்னிலைக்கு ஆளாக்க,
தனது சக்தியின் துணை கொண்டு,
அனைத்தும் நல்குகிறான்.
பிறவிக;டு ஆன்மாவைச் செலுத்தி,
அதன் ஆணவத்தை வலி கெடுத்து,
அதற்கு முத்தி வழங்கும் இறைவனின் கருணை,
மிகப்பெரிதாம்.



முதலமைச்சராய்,
படைபலம் பெருக்க குதிரை வாங்கச் செல்கிறார் வாதவூரர்.
பக்குவமுற்ற அவ் ஆன்மாவை தன்வயப்படுத்துதற்காய்,
உண்மை அடியார் உடனிருக்க,
மானுட வடிவேற்று,
குருந்த மரநீழலின் கீழ்,
குருவாய்க் காத்திருக்கிறார் சிவபெருமான்.
வாசகரை ஈர்க்க இறையனார் வந்தவடிவம்,
மானுட வடிவமேயாம்.
இதனை வாசகரே தனது திருச்சதகத்தின்,
தொன்நூற்றி ஓராவது பாடலில்,
ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்,
கீறிலாத நெஞ்சுடைய நாயினேன்,
கடையனாயினேன் பட்ட கீழ்மையே
என உறுதிசெய்கிறார்.



குதிரை வாங்கச் சென்ற வாசகரை,
வா! வென்றழைத்து,
தன் அடியார் சங்கமத்துள் அமர்த்தி, அருளீர்ந்து,
முத்தி அளிக்க முனைகிறான் முதல்வன்.
வாசகர் வாக்கில் இவ்விடயம் பதிவாகிறது.
வஞ்சகப் பெரும் புளையனேனை உன்கோயில் வாயிலில்
பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்குரியனாக்கினாய்
இறையின் அழைப்பேற்று,
உண்மை அடியார் உடன் அவன் பின்செல்ல,
முத்தித் தகுதி முழுமையுறா மணிவாசகர்,
பந்தமறுக்க மாட்டாமல் பரமனை விட்டுப் பாரில் நின்றார்.
அஃது திருவாசகத் தெய்வப் பனுவலை,
நாம் உணர்ந்து உருகி உய்யும் பொருட்டு,
இறைவனார் செய்த பெருங்கருணையேயாம்.



மணிவாசகர்,
முத்தித் தகுதி முழுமையுறாதவரா?
கேள்வி பிறக்கும்.
பந்தம், வீடு எனும் இரண்டிலும் பற்று வைத்து,
பரிதவிக்கும் தன்நிலையை வாசகரே உரைக்கிறார்.
இரண்டு மிலித்தனியனேற்கே  என்பது
தன்னிலை உரைக்கும் அவர்தம் கூற்றாம்.



இறைவன் வாசகரைத் தனியே விட்டு
மற்றை அடியாருடன் பிரிந்து ஏகிய பின்னர்தான்,
வாசகர்க்குத் தான் இழந்த வரத்தின் பெருமை தெரிகிறது.
வான நாடெறும் அறியொனாத
மறையின் ஈறு முன் தொடரொணாத
ஏனை நாடருந் தெரியொணாத அவ் இறைவன்,
தன்னை இனிதாய் ஆண்டு கொண்ட எளிமையைப் புரியாமல்,
இறையை இழந்து நின்று ஏங்குகிறார் வாசகனார்.
அவரது கழிவிரக்கக் கதறல் திருவாசகம் முழுவதும் கேட்கிறது.



“விளையாடும் மழலையின் கையில்,
பொற்கிண்ணம் கிடைத்தால் அதன் அருமை,
அக்குழந்தைக்குத் தெரியுமோ?
அதுபோல,
நீயாய் வந்து ஆட்கொண்ட எளிமையை அறியாது,
அரியை என்றுணைக்கருதாமல்,
நின் பெருமை உணராது,
மழலை தவறவிட்ட பொற்கிண்ணம் போல்,
யானும் நின்னைத் தவற விட்டேனே”,
என்று கதறுகிறார் வாசகனார்.

மையிலங்கு நற்கண்ணி பங்கனே
வந்தெனைப் பணி கொண்டபின் மழக்
கையிலங்கு பொற்கிண்ணம் என்றலால்
அரியை என்றுனைக் கருதுகின்றிலேன்
மெய்யிலங்கு வெண்ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவதோ சொலாய் பொருத்தமாவதே!



“உண்மை அடியார்,
வாசனை பொருந்திய நின்மலர்ப்பாதங்களை அடையக் கண்டும்,
அத்தகு செய்திகளை முன்னரே கேட்டிருந்தும்,
அரிதாய்க் கிடைத்த வாய்ப்பை இழந்து,
பொய்யனான நான் இப்பூவுலகில்,
உண்டும் உடுத்தும் காலங்கழித்திருக்கிறேனே” என ஓலமிடுகிறார்.

மெய்யர், வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு
இருப்பதானேன் போரேறே.



“பல பெரிய முனிவர்கள்,
எல்லையற்ற காலம்,
தம் உடலுறுப்பையும் வெறுத்து,
தவம் செய்து உனைக்காண வாடிக்கிடக்க,
பாவியாகிய என்னை நீயாய் வந்து பணிகொண்டாய்,
மலம் நிரம்பிய இப்பெரிய உடம்பை நீக்கமாட்டாத யான்,
உனைக்காண இன்று அவாவி நிற்கின்றேன்.
உண்மை அன்பும் இலேன்.
இத்தகைய தகுதியற்ற நான் எங்ஙனம் மீண்டெழுவேன்?” என,
வருந்தி வாடுகிறார் வாசகனார்.

உலவாக் காலம் தவமெய்தி
உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான்
பல மா முனிவர் நனிவாடப்
பாவியேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இது மாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான்.
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண்டு எழுகேன் எம்மானே



“தலைவா!
உன்னுடைய திருக்குறிப்பை உணரும் மெய்யடியார்,
நின் பாதங்களை வந்து சேர,
ஊன் நிறைந்த புழுக்கூடான இவ்வுடம்மைபக் காத்து,
இங்கு இருக்கின்றேனே,
என்னை உடையவனே!” என்று ஏங்கி அழுகிறார்.

கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடுவார் நின் கழல் கூட
ஊனார் புழுக் கூடிது காத்து இங்கு
இருப்பதானேன் உடையானே



“கடைப்பட்ட யான்.
நீ தேடி அருள் செய்தும் நெஞ்சுருகாது நிற்கின்றேன்.
கல்லாத என்மனம் கசிவதுமில்லை.
நாற்றம் மிகுந்த உடம்பாகிய இப்புழுக் கூட்டினைக் காத்து,
இங்கு இருக்கும்படி என்னை விட்டுவிட்டாயே!”
என மருண்டு மயங்குகிறார்.

கடையானேன் நெஞ்சு உருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூடு இதுகாத்து இங்கு
இருப்பதாக முடித்தாயே



“பொய்யுக்கு வித்துக்கேடு விளையாவண்ணம்,
என்னை இங்கு வைத்துவிட்டாயே
உன் திருவடிமேல் விருப்புற்றார் எல்லாரும்
உன்தாளை வந்து சேர்ந்தனர்.
இனி என் நிலை என்ன? என்று,
அச்சத்தாலே ஆழ்ந்து நிற்கின்றேன்.
ஆரூர் பிச்சைத் தேவா!
இனி நான் என்ன செய்வதென்று பேசமாட்டாயோ?”
என்று வேதனையால் விம்முகிறார்.

விச்சுக்கேடு பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்துன் தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூரெம்
பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே



“தலைவா!
நான் செய்த கொடுமைகள் சிறிதோ?
மெய்யடியார் எல்லோரும் உன்னுடனே உடன் போனார்.
நானும்பொய்யும் புறம்போனோமே!”
எனப்பொங்கிப் புலம்புகிறார்

கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே



“சிவந்த மேனியை உடையவனே,
நின்னால் அருள் செய்யப்பட்ட அன்பரும் நீயும்,
சிவலோகம் சென்று,
என்னை இவ் அவலோகத்தில் இருத்தியது முறையோ?
இப்பாவியேன் தீவினைக்கு இறுதியிலையோ?”
என அலமந்து அரற்றுகிறார்.

அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்
நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான்
வம்பனேன் வினைக்கு இறுதியில்லையே



இங்ஙனமாய் பலகாலம் அழுது அரற்றிய மணிவாசகர்தம் மனத்தில்,
தெளிவுண்டாகிறது.
இரந்து நின்றவர் இப்போது ஏசிநிற்கிறார்.

உரிப்பிச்சன்! தோல் உடைப்பிச்சன்!  
நஞ்சு ஊண் பிச்சன்! ஊர்ச்சுடுகாட்டு 
எரிப்பிச்சன் ! என்னையும் ஆளுடைப் பிச்சன் !
என்று ஏசுவனே.



உரிமைக் கோபம் பெருக,
அவர் நிந்தனை மேலும் பெருகுகிறது.

சிரிப்பிப்பன் ! சீறும் பிழைப்பைத்
தொழும்பையும் ஈசற்கு என்று விரிப்பிப்பன் !



குலைந்த உள்ளத்தில் கோபம் நிற்குமா?
ஏசியவர் மீண்டும் ஏத்துகிறார்.

ஏசினும் யான் உன்னை ஏத்தினும்
என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்



ஒன்பது வாயில் கொண்ட ஓட்டைக் குடமான இவ் உடம்பினுள்,
இறை அமுதத்தை ஏந்துவது எங்ஙனம்?
வாசகர் மனம் குழம்புகிறது.
ஆசையால் நிரப்பும் அமுதமெல்லாம்,
ஒன்பது ஓட்டை வழி ஓடிவிட,
தன்னுள் நில்லா இறைவனை நினைந்து வருந்துகிறார் வாசகர்.
ஓட்டைக் குடத்துள் இறை அமுதத்தை நிறுத்துதல் எங்ஙனம்?
விடை காணாது விம்மிய வாசகர்,
கற்றாரைக் கேட்க அவரோ,
ஒன்பது வாயிலையும் ஒக்க அடைக்கும்படி உரைக்கின்றனர்.
ஒன்பது வாயிலும் அடைபட்டால்,
இவ் உடம்பாகிய ஓடே உடைந்துவிடும் என்பதறியாமல்,
ஓட்டைகளை அடைக்கும்படி உரைத்த,
அவர்தம் அறியாமையை என் சொல்ல?



தன் எண்ணம் நிறைவேற்ற வழியற்று வாடிய வாசகனார்,
விட்டுடுதி கண்டாய் எனக் கதறி,
என்னை ஏற்பது நின்கடன் என்று உரைத்து,
சிவனது தாள்களைச் சிக்கெனப் பிடிக்கின்றார்.



அவ் அரிய சிவன்,
அறிஞர்க்கெல்லாம் அறிஞன்.
பெரியர்க்கெல்லாம் பெரியன்.
முத்தர்க்கெல்லாம் முத்தன்.
சித்தர்க்கெல்லாம் சித்தன் அன்றோ.
அச்சிவ சித்தன்.
வாசகர்க்காய் ஓர் சித்தினைப் புரிகின்றான்.
புழுக்கூடெனப் புகன்று,
வாசகர் வருந்திய அவர்தம் உடலாகிய,
ஒன்பது வாயில் ஓட்டைக் குடத்தை,
இறை அமுதக் கடலுள் தூக்கி இனிதே அவன் போட,
எந்த வாயில்களால் சிவ அமுதம் வெளியேறியதோ,
அந்த வாயில்களின் வழியாகவே,
குடத்துள் அமுதம் நிறைந்து,
நிறைவில் குடமே அவ் அமுதக்கடலுள் ஆழ்ந்து போயிற்றாம்.



அவ் அரிய அனுபவத்தை தன் பாடலில் பதிவு செய்கிறார் வாசகனார்.

காயத்துள் அமுது ஊற ஊற நீ
கண்டுகொள் என்று காட்டிய 
சேய மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னித் திகழுமே



பற்றினால் பதமிழந்து கிடந்த தன்னை,
மாறிலாத மாக்கருணையன்,
மீண்டும் ஆண்ட பரிசு எண்ணி பரவசப்படுகிறார் மணிவாசகர்.
இறைவன் கருணையை ஏத்தி உரைக்க அவர் இதயம் விரும்புகிறது.
அப்பெருங்கருணைக்கு உவமை எது?
வாசகர் வாக்கில் ஓர் உவமை வந்து விழுகிறது.
பெருங்கருணைப் பேராறே!
இறைவனது பெருங்கருணைக்கு,
பேராற்றை உவமை ஆக்குகிறார் மணிவாசகர்.
இவ் உவமை பொருத்தமா?
ஆராய விளைகிறது நம் அறிவு.



எல்லையற்ற இறையின் பெருங்கருணைக்கு,
இவ்வுலகில் உவமை ஏது?
உவமை என்பது ஒருபுடை ஒப்பு.
இஃது இலக்கணச் சூத்திரம்.
உண்மையின் ஒரு பகுதியை விளக்கம் செய்வதே உவமையாம்.
இறையின் கருணைக்கு உவமை இவ்வுலகில் இல்லை எனத்தெரியினும்
ஒருபுடை ஒப்பாய் ஏதும் உரைக்க வேண்டுமெனின்,
அளக்க மாட்டாது எல்லையற்று விரிந்து ஆழ்ந்து கிடக்கும் கடலன்றி,
அவன் கருணைக்கு உவமையாய் வேறெதனை உரைப்பது?



வாசகரோ!
பெருங்கருணைப் பெருங்கடலே என்றுரைக்காமல்,
பெருங்கருணைப் பேராறே என்கிறார்.
இவ் உவமை,
இறையின் கருணைத் திறத்திற்கு கலங்கமன்றோ!
இறைக் கருணைக்கு விரிந்த கடலை விடுத்து,
ஆற்றை உவமையாய் உரைத்தது அழகா?
ஆழ்ந்து அறிய ஆனந்திக்கிறது நம் மனம்.



கடல் நீர் உவர்ப்பானது.
ஆற்று நீர் இனியது.
இறைவனின் இன் கருணைக்கு,
இவ்விடயத்தில் ஆற்றுவமை கடலை விடப்பொருந்துமன்றோ!
கடல் ஓர் இடத்தில் நிற்பது.
ஆறு பள்ளம் தோறும் பாய்ந்தோடுவது.
அன்பர்தம் உண்மை உள்ளம் தேடி ஓடும் இறைக்கருணைக்கு,
இவ்விடயத்தில் ஆற்றுவமை கடலை விடப்பொருந்துமன்றோ!
அறிவைக் கடந்து ஆச்சரியம் தருவது கடல்.
அறிவுக்குட்பட்டு ஆனந்தம் தருவது ஆறு.
அன்பர்தம் அறிவுக்குட்பட்டு,
அவர்களை ஆனந்தப்படுத்துவது இறைக்கருணை.
இவ்விடயத்தில் ஆற்றுவமை கடலை விடப்பொருந்துமன்றோ!
இப் பொருத்தப்பாடுகள் நோக்கியே,
கடலை விடுத்து,
ஆற்றினை இறைக்கருணைக்கு உவமையாக்குகிறார் மணிவாசகர்.



மீண்டும் ஒரு கேள்வி பிறக்கிறது.
ஓர் இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது ஆற்றின் இயல்பு.
இறைக்கருணையோ, அன்பர் உள்ளம் எலாம் நிறைந்து நிற்பதன்றோ,
நிற்கும் இறைக்கருணைக்கு ஓடும் ஆறு பொருத்த உவமையா?
கேள்வியால் குழம்புகிறது மனம்.
வாசகர் வாக்கில் பிழை வருமா?
இறைக்கருணையை,
பெருங்கருணை பேராறு என்றுரைத்த வாசகர்,
அதற்கு முன்னே,
இயற்கை முரணாய் அவ் ஆற்றின் இயல்புரைக்கிறார்.
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே என்பது அவர் கூற்று.



இஃது பொருத்தமான கூற்றா?
வாசகரின் வாக்கா தவறும்.
ஆற்று நீர் ஓடிக்கொண்டே இருப்பினும்,
குறித்த ஒரு இடத்தில்,
காட்சியளவில் எப்போதும் நின்று கொண்டேயும் இருக்குமாம்.
இதனையே,
பிரவாகநித்தம் என்பர் பெரியோர்.
இறைக்கருணை எனும் பேராறு,
அன்பர் நெஞ்சம் தோறும் பாய்ந்தோடும் அதேவேளை,
அவரவர் நெஞ்சில் அஃது பேராதும் நிற்குமாம்.
உலகமுரணாய்த் தோன்றினும்
உள்நுழைந்து ஆய்வார்க்கு
உண்மையை  உணர்த்தி,
இறைவன் கருணைத் திறத்தை எடுத்தியம்பும்
மணிவாசகரின் தனிவாக்கு நம் நெஞ்சை அள்ளுகிறது.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.