வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 9 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

  வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 9 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 17 Mar 2017
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ங்கள் கவனத்திற்காய் ஒன்று.
ஆச்சரியமாக, இந்த வர்ணாச்சிரமக் கோட்பாட்டில்,
ஆச்சிரமதர்மம் பற்றி யாரும் அதிகம் முரண்படுவதாய்த் தெரியவில்லை.
வர்ணதர்மத்தில்தான் எல்லோருக்கும் முரண்பாடு.
ஏன் அப்படி என்று,
இன்றைய முற்போக்காளர் ஒருவரைக் கேட்டுப் பார்த்தேன்.
அவர் ஒரு தத்துவ விரிவுரையாளர்.
கேள்வி கேட்டதும் என்னை அவர் ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தார்.
பிறகு, தன் குறுந்தாடியைச் சொறிந்து ஆகாயம் பார்த்துக் கொஞ்சம் யோசித்தார்.
குழந்தைகள் பூவரசம் இலை பீப்பீக்குழலை வாயில் வைத்து இழுத்து இழுத்து ஊதுவது போல,
கையிலிருந்த சிகரெட்டை தன் வாயில் வைத்து ஆழ இழுத்து,
புகையை வெளிவிடாமலே என்னை நோக்கினார்;.
அதெல்லாம் அவர் சிந்திக்கிறார் என்பதற்கான அடையாளங்களாம்.
அவர் மாணவர் ஒருவர் பக்தியாய் முன்பு சொல்லியிருக்கிறார்.
அவரது பாணி விளங்கியபடியால் மௌனித்துக் காத்திருந்தேன்.
உள்ளிழுத்த சிகரெட் புகையைக் கடைவாயால் வெளியூதினார்.
பின் ‘யூ நோ..’ என்று தொண்டையைச் செருமித் தொடங்கினார்.
 

♦  ♦

மீண்டும் ஏனென்று தெரியாத ஒரு சிறு மௌனம்.
என்னைக் காக்க வைத்து,
‘ஐ சே’ நீங்கள் எல்லாம் கொஞ்சம் பிற்போக்குவாதிகள்.
இன்னும் கம்பனையும், வள்ளுவனையும் பிடித்துக்கொண்டு காலங்கழிக்கிறீர்கள்.
உங்களுக்கு நாங்கள் சொன்னால் விளங்கப் போவதில்லை.
அது ‘சோசியோலஜி சப்ஜெக்ட்’. அது உங்........,
“அப்படியென்றால் என்ன சேர்?” அவர்முடிக்குமுன்,
அப்பாவியாய்த் திரும்பவும் கேட்டேன்.
“ஹா....... ஹா........ ஹா.......”
அவர் சிரித்த சிரிப்புச் சத்தத்தால் பயந்து,
‘நர்சரி’ முடிந்து தாயுடன்போன ஒரு குழந்தை,
தாயின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டது.
பிள்ளையின் பயத்தை உள்வாங்கிய தாய்,
எங்களைப் பார்த்த பார்வையில் கோபம் தெரிந்தது.
அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர் என்னைப்பார்த்து,
"ஓ... உமக்கு இங்கிலீசும் தெரியாது போல,
அதுதான் உம்மால் ‘மொடேர்னா திங்’ பண்ண முடியவில்லை."
திரும்பவும் கேலியாய்ச் சிரித்தார்.

♦  ♦

சிந்திப்பதற்கு ஆங்கிலம் அவசியம் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.
என்ன என்றாலும் படித்த மனுஷன் என்பதால் எதிர்த்து ஒன்றும் சொல்லாமல்,
“எனக்கு விளங்கத்தக்கதாக அதை சொல்லுங்கோ சேர்” என்றேன்.
“ஐசே! ஆச்சிரமம் என்பது தனிமனித வாழ்வு.
அதுபற்றி எங்களுக்குப் பிரச்சினையில்லை.
வர்ணம் என்பது சமூகவாழ்வு.
அதனால்த்தான் அதில் எங்களுக்குப் பிரச்சினை.”
சொல்லிவிட்டுத் திரும்பவும் சிகரெட்டை எடுத்தார்.
அவர் விட்ட இடைவெளியில் குறுக்கிட்டேன்.
“சேர், திரும்பவும் ஒருசந்தேகம்” என்றேன்.
“என்ன? என்ன? கேளும்” என்று,
சிகரட்டை இழுத்து இப்போது எனக்குப்புகை அடித்தார்.
நான் பழுத்தது போதாது என்று நினைத்தாரோ என்னவோ?
அவர் புகையைச் சகித்துக்கொண்டு,
“இல்லை சேர், தனிமனிதன் இல்லாமல் சமூகம் வருமா?” என்று,
தயங்கியபடி மெல்லக் கேட்டேன்.

♦  ♦

கோபத்தோடு அவர் இழுத்த இழுப்பில் சிகரெட் தன் உயிரைவிட்டது.
எரிச்சலை அடக்குகிறார் என்று தெரிந்தது.
“இதுதான் ‘மொடேர்ன் திங்கிங்’ இல்லாத ஆட்களோடு பேசக்கூடாது” என்று உறுமினார்.
“இல்லை சேர். தெரியாமல்த்தான் கேட்டனான்” என்று நான் சொல்ல,
“உம்முடைய கிண்டல் எனக்கு விளங்கும்.
உமக்கு சமூகவியல் விளங்காது,
அக்கறையோடு நாங்கள் செய்த சமூகஆராய்ச்சிகளை,
உமக்குச் சொல்லத் தொடங்கியது என்னுடைய பிழைதான்.”
நெருப்புடன் இருந்த சிகரெட் கட்டையை நடுரோட்டில் எறிந்துவிட்டு,
அடுத்த சிகரெட்டைக் கொளுத்தி, இழுத்து ஊதினார்.
அவர்விட்ட புகையைச் சுவாசித்து,
அருகில் நின்ற இரு குழந்தைகளும் இருமின.
அணைக்காமல் அவர் நடுவீதியில் போட்ட சிகரட் கட்டையில் கால்வைத்து,
ஒரு பெரியவர் ‘ஊ..ஊ’ எனக் காலை உதறினார்.
சமூகவியல் பேராசிரியரின் சமூகம் பற்றிய கவலையில்லாத கைங்கரியம்.
“நீர் ஓரு ‘சோசியோலஜி’ தெரியாத ‘ஃபூல்’”.
என்னைப் பார்த்துச் சொன்னபடி நகர்ந்தார் சமூகவியல் அறிஞர்.
குழந்தைகள் என்னைப் பார்த்த பார்வையில் இரக்கம் இருந்தது.

♦  ♦

என்ன உங்கள் முகத்தில் கொஞ்சம் சந்தோஷம் தெரிகிறதே !
என்னைப்பற்றி நீங்கள் நினைப்பதை,
முன்பந்தி முடிவில் பேராசிரியர் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டதில்,
உங்களுக்கு பரம திருப்திபோல.
நீங்கள் என்னவும் சொல்லிவிட்டுப் போங்கள்,
எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.
விடயத்திற்கு வருகிறேன்.

♦  ♦

வர்ணதர்மத்தில்,
சூத்திரன், வைசிகன், சத்திரியன், பிராமணன் என,
சமூகம் பிரிக்கப்பட்டதால் தான்,
சமூகத்தில் உயர்வு, தாழ்வு வந்ததென்றும்,
இதிலிருந்துதான் சாதிப்பிரச்சினைகள் தோன்றின என்றும்,
இந்த வர்ண அமைப்பில் அதியுயர் நிலையிலிருந்த பிராமணன்,
மற்ற எல்லாரையும் தன்சுயநலத்திற்காய்ப் பயன்படுத்தினான் என்றும்,
அவனுக்கு அடுத்தநிலையிலிருந்த சத்திரியன் அதேபோல,
தனக்குக் கீழேயிருந்த மற்றவர்களை அடக்கியாண்டு அனுபவித்தான் என்றும்,
இவ்வமைப்பே முதலாளித்துவத்தின் அடிப்படையென்றும்,
பிராமணனும், சத்திரியனும் சேர்ந்து,
தர்மத்தில் தங்களுக்குச் சலுகை அமைத்துக்கொண்டனர் என்றும்,
அவர்கள் தமக்குக் கீழ்ப்பட்ட வர்ணத்தாரைச் சுரண்டி வாழ்;ந்தனர் என்றும்,
தம்மில் கீழ்ப்பட்டவர்கள் மேல்எழ முடியாமல்,
நீதிகளையும், தர்மங்களையும் தமக்கு வாய்ப்பாக ஆக்கிக்கொண்டனர் என்றும்,
இந்துமதத்தின் இவ்வடிப்படை தர்மம்தான்,
மேல், கீழ், உயர்வு, தாழ்வு என சமூகத்தைப்பிரித்தது என்றும்,
குறிப்பிட்ட பகுதியினர் எப்போதும் மேல்மக்களாய் இருக்கவும்,
குறிப்பிட்ட பகுதியினர் எப்போதும் கீழ்மக்களாய் இருக்கவும்,
இத் தர்மமே வழி செய்தது என்றும்,
இந்துமதத்தில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம்,
இவ்வர்ண வரிசையில் மேல்நின்றவர்களால்,
தம் சுயநலத்திற்காக அமைக்கப்பட்டவையேயன்றி,
அவை தர்மங்களே அல்ல என்றும்,
ஆயிரமான குற்றச்சாட்டுக்கள் பின்னாளில் வைக்கப்படுகின்றன.
(பொறுங்கள். நான் கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்கிறேன்.)

♦  ♦

பிரச்சினை இதுதான் ஐயா!
இக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து,
இந்துமதத்தையும், இந்துதர்மத்தையும், இந்துமத ஞானிகளையும்,
இந்துமதம் சார்ந்த புலவர்களையும், இலக்கியங்களையும்,
இப்புதிய சிந்தனையாளர்கள் மொத்தமாகவே குற்றக்கூண்டில் ஏற்றுகின்றனர்.
இவர்களின் புதிய தாக்குதலில் இந்துமதம் பிற்போக்கு மதமாயிற்று.
யேசுநாதரைப்போல இப் புரட்சியாளர்களால்,
இந்துமதமும் பிற்போக்கு மதமெனும் முள்முடி சூட்டப்பட்டு,
வர்ணஆச்சிரமதர்மம் எனும் சிலுவையில் அறையப்பட்டு தொங்கவிடப்பட்டது.

♦  ♦

மூன்றாம் நாளில் கர்த்தர் உயிர்க்கப்போவது தெரியாமல்,
அவரைச் சிலுவையில் அறைந்து மெய்யைப் பொய்யாக்கிய,
அன்றைய அறிவில்லா யூதர்கள் போல,
இன்றைய அறிவில்லா இப்புதிய முற்போக்கு யூதர்களும்,
தாம் சாதனையியற்றியதாய் நினைந்து அதேவிதமாய் மகிழ்கின்றனர்.
அவர்தம் கற்பனைக்கோட்டை தகரத் தொடங்கியிருக்கிறது.
கோட்டை தகர்வது தெரிந்தும்,
உண்மையை ஒத்துக்கொள்ள இவர்களுக்கு மனமில்லை,
இப்புதிய வர்ணதர்மத்துப் பிராமணர்கள்,
தாம் நாட்டிய சிலுவைகள் தமக்காகவே காத்திருப்பது தெரியாமல்,
இன்னும் சமூகத்தை ஏமாற்ற நினைப்பதைத் தகர்ப்பதுதான்,
இக்கட்டுரையின் மூலநோக்கம்.

♦  ♦

மேல்நிலைநின்ற அரசர்க்கும், அந்தணர்க்கும் வாய்ப்பாக,
வர்ணதர்மம் வகுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு,
சென்ற கட்டுரையில் பதிலுரைத்திருந்தேன்.
ஆதி வர்ணாச்சிரமதர்மத்தில்,
தர்மத்தை மீறிய பேதங்கள் இருந்திருக்க நியாயமில்லை.
சிலருக்குச் சார்பாய் உயர்வுதாழ்வை விரித்துரைத்த வர்ணாச்சிரமதர்மம்,
பின்னாளில் வந்த அந்தணர்களாலும் அரசர்களாலும்தான் வகுக்கப்பட்டிருக்கும்.
அத்தனிமனிதர்களின் குற்றங்கள் பின்னாளில்,
வர்ணாச்சிரமதர்மத்தின் மேல் ஏற்றப்பட்டன.
இந்நிலை எந்தத் தத்துவத்திற்கும், எந்தக் காலத்திலும் ஏற்படக்கூடிய ஒன்றே.
இதனைச் சென்ற அத்தியாயத்தில் நான் விளங்கப்படுத்தியதை,
மீண்டும் ஒருதரம் நினைத்துக்கொள்ளுங்கள்.

♦  ♦

இக்கட்டுரையைப் படித்த என் மாணவன் ஒருவன்,
‘கூறியது கூறல் எனும் குற்றம் பல இடங்களில் பதிவாகியிருக்கிறது” என்றான்.
அவன் சொன்னது உண்மையே!
எனினும் ஒரு விடயத்தை வலியுறுத்தற்பொருட்டு,
கூறியது கூறல் குற்றமில்லை என்கின்றனர் இலக்கணநூலாசிரியர்கள்.
அரச அதிகாரம் பெற்றவர்களால் அன்று எங்ஙனம் வர்ணாச்சிரமதர்மத்துள்,
பிழைகள் பொருத்தப்பட்டனவோ
அங்ஙனமே, இக்காலத்திலும் அரசஅதிகாரம் பெற்றவர்களாலேயே,
வர்ணாச்சிரமதர்மத்தின்மேல் வீணான பழிகள் சுமத்தப்படுகின்றன.
அதிகாரம் மிக்க அவர்களால் சுமத்தப்படும் பழியினைத் துடைக்கவே,
சில விடயங்களை மீண்டும் மீண்டும் உரைக்கிறேன் என்று உணர்க.

♦  ♦

இந்த அத்தியாயத்தில் முக்கியமான இரண்டு விஷயங்களைச் சொல்லவேண்டும்.
ஒன்று, விரும்பியோ விரும்பாமலோ வர்ணாச்சிரமதர்ம வரையறையுள்தான்,
இன்றும் உலகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருப்பதைப் பற்றியது.
மற்றது, ஆதி வருணாச்சிரமதர்மத்துள்,
இயல்பாய் இருந்த பேதங்களுக்கான விளக்கம் பற்றியது.
அவைபற்றி ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.

♦  ♦

வர்ணாச்சிரமதர்மம் என்ற தொடருக்கான,
உண்மை அர்த்தத்தை அறிந்துகொள்ளாத பலர்,
அத்தொடர் வடமொழியில் அமைந்துள்ளதால்,
அது ஏதோ இந்துமதத்திற்கே உரியவொன்று என நினைந்து,
இந்துமதத்தைத் தாக்குவதாய் கருதி,
வர்ணாச்சிரமதர்மத்தைத் தாக்கி வருகின்றார்கள்.
பாவம்! அவர்களுக்கு வர்ணாச்சிரமதர்மத்துள்தான்,
இன்றும் உலக சமுதாயம் இயங்கிக்கொண்டிருப்பது தெரியவில்லை.
மேலைத்தேசங்களிலும் சமூகஅமைப்பு,
அன்று இத்தர்மத்தில் சொன்னபடிதான் அமைந்திருக்கிறது என்பது தெரிந்தால்,
அவர்கள் வாயே திறந்திருக்கமாட்டார்கள்.

♦  ♦

என்னது? மேலைத்தேசங்களிலும் வர்ணாச்சிரமதர்மமா?
உங்களில் பலரின் புருவம் உயர்வது தெரிகிறது.
மேலைத்தேசத்திலிருக்கும் எதுவென்றாலும் உங்களுக்கு அது உயர்வுதானே!
அங்கும் வர்ணாச்சிரமதர்மப்பிரிவு இருப்பது தெரிந்துவிட்டால்,
யார் கண்டது?
நீங்களே வர்ணாச்சிரம தர்மத்தைப் புகழத்தொடங்கினாலும் தொடங்கிவிடுவீர்கள்.
சரி. அதைச் சற்று விளக்கிச்சொல்கிறேன்.

♦  ♦

அமெரிக்காவிலோ, ரஷ்யாவிலோ,
அல்லது உங்கள் மனதின் உயரத்தில் நீங்கள் வைத்திருக்கும் எந்தநாட்டிலோ
தனிமனித வாழ்வையும் சமூக வாழ்வையும் எப்படிப் பிரித்திருக்கிறார்கள் என்று ஒருதரம் சிந்தியுங்கள்.
நான் சொன்ன அதே வர்ண, ஆச்சிரமப் பிரிவுகள்தான் அங்கும் இருக்கும்.
உற்பத்தியாளன், விநியோகஸ்தன், நிர்வாகி, கல்வியாளன் என்ற வரிசைதான்,
நீங்கள் உயர்வாய் நினைக்கும் எந்தநாட்டிலும் சமூகப்பிரிவுகளாய் வகுக்கப்பட்டிருக்கும்.
இன்னும் அழுத்திச்சொல்லப்போனால்,
இந்த நான்கு பிரிவுகளைவிட அதிகமாய் ஒரு பிரிவோ,
குறைவாய் ஒரு பிரிவோ  சமூக அமைப்பில் ஒருக்காலும் இருக்க முடியாது.
‘நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்’ என்று பாரதி சொன்னது போல,
இந்தவிடயத்தை என்னால் உறுதிபடச் சொல்லமுடியும்.

♦  ♦

அதே போலத்தான் தனிமனிதவாழ்வுப் பிரிவிலும்,
கற்கும்பருவம், வாழும்பருவம், ஓயத்தொடங்கும் பருவம், முற்றாய் ஓயும் பருவம்,
எனும் நான்கு கூறுகளும் எந்த நாட்டிலும் மாற்றமுடியாதவை.
உலக சமுதாயம் அத்தனையினதும் தனிமனித, சமூகப்பிரிவுகள்,
நம்மவர் சொன்ன பெயர்களால் சுட்டப்படாவிட்டாலும்,
நமது வர்ண ஆச்சிரமப் பிரிவுகளில் வகுக்கப்பட்டது போலவே வகுக்கப்பட்டிருக்கின்றன.

♦  ♦

என்ன? உங்கள் விழிகள் ஆச்சரியத்தால் மேலும் விரிவடைகின்றன.
“மூதாதையரின் மூத்தகொள்கையை,
மூடக்கொள்கை என்று நாம் சொல்லத்தலைப்பட்டால்,
இவன் ஒருவன் வந்து,
அம்மூடக்கொள்கைதான் முழுஉலகக் கொள்கை என்கிறானே!”
என்று திகைக்கிறீர்களாக்கும்.
நான் சொன்ன கருத்தை மறுக்கவும் முடியாமல்,
நீங்கள் திக்குமுக்காடுவதும் தெரிகிறது.
இப்போது வர்ணாச்சிரமதர்மத்தில் கொஞ்சம் மதிப்பு உண்டாகியிருக்குமே?
அநியாயம்! உங்கள் அடிமைப்புத்தியை என்னவென்பது?
சமூகஅமைப்பை வரையறை செய்து அனைவருக்குமான தர்மங்களைக் கட்டமைத்த,
நம்பாட்டன் ‘மனு’தான் உலகத்தின் முதற்சமூக சிந்தனையாளன் என்னும் உண்மை தெரிய,
இன்னும் உங்கள் விழிகள் விரியப்போகின்றன. தயாராயிருங்கள்.

♦  ♦

தனிமனிதவாழ்வும், சமூகவாழ்வும் உலகம் முழுவதும்,
நம் தர்மத்துள் சொன்னவாறு நன்னான்கு பிரிவுகளாய்த்தான் பிரிந்துகிடக்கின்றன.
அந்நான்கு பிரிவுகளை ஐந்து பிரிவுகளாய் ஆக்கவும்முடியாது,
மூன்று பிரிவுகளுக்குள் அடக்கவும் முடியாது.
அது மட்டுமல்ல, எங்கள் வர்ணாச்சிரமதர்மத்தில் சொல்லப்பட்ட,
அத்தனை கட்டமைப்புக்களும் கூட,
எல்லாத்தேசங்களிலும் இன்றும் அப்படியேதான் கடைப்பிடிக்கப்படுகின்றன.
அதனை அடுத்தவாரத்தில் சற்று விரிவாய்ச்சொல்கிறேன்.

♦  ♦

‘கொசுறாக’ கட்டுரைபற்றி கருத்துரைத்து வரும்,
புரட்சியாளர்களுக்கு ஒரு செய்தி.
பெறுமதிமிக்கவை சமுதாயத்தில் மதிப்புப் பெறுவதும்,
பெறுமதி குறைந்தவை அம் மதிப்பைப் பெறமுடியாமல் தாழ்வதும்,
இயற்கையே என்கின்ற எனது வாதத்தை மறுத்து,
இல்லை இல்லை எல்லாம் சமம், எதுவும் சமம் என்று,
சமத்துவம் பேசும் முற்போக்காளர்களிடம் ஒரே ஒரு கேள்வி.
மாம்பழம் வாங்க நீங்கள் சந்தைக்குச் செல்வதாய் வைத்துக்கொள்ளுங்கள்.
அங்கு சுவை மிகுந்த தமிழ்நாட்டின் மல்கோவா
அல்லது ஈழத்தின் கறுத்தக்கொழும்பான் பழத்திற்கு அதிகவிலையும்,
சுவை குறைந்த புளிப்பழத்திற்கு குறைந்த விலையும் சொல்கிறார்கள்.
சமத்துவம் பேசும் நீங்கள் எப்போதாவது இரண்டும் மாம்பழம் தானே,
அப்படியிருக்க ஒன்றிற்கு அதிக விலையும் ஒன்றுக்குக் குறைந்த விலையும் சொல்வது,
எப்படி நியாயமாகும் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?
அதைத்தான் விடுங்கள் கூடியவிலை சொல்லும்,
சுவை மிகுந்த விலை கூடிய மாம்பழத்தை விட்டுவிட்டு,
குறைந்த விலையில் உள்ள சுவை குறைந்த மாம்பழத்தை,
எப்போதாவது வாங்கியேனும் இருக்கிறீர்களா?
என்ன பேச்சுமூச்சைக் காணோம்?
சமத்துவம் பேசுகிறவர் இதில் மட்டும் அச்சமத்துவத்தைப் ஏன் பேணுவதில்லையாம்?

♦  ♦

ஆகா! இவரது மனநிலை புரிந்துவிட்டது என்று,
உங்களில் சிலர் மீண்டும் என்னைத் திட்ட ஆரம்பிப்பது தெரிகிறது.
நான் சொல்லவருவதை நேர்மையாய்ப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
உயர்திணையில் என்று இல்லை அஃறிணையில் கூட,
பண்பும் பயனும் அதிகம் இருந்தால்,
சமூகத்துள் அவற்றிற்கான மதிப்பு அதிகரிப்பது தவிர்க்கமுடியாததே.
அதைத்தான் மேல் உவமையூடு சொல்லவந்தேன்.
எனவே சமூகமதிப்பை வேண்டி நிற்போர்,
தேவையற்ற போராட்டங்களை விட்டுவிட்டு,
தம் பண்பையும் பயனையும் அதிகரிப்பதொன்றே,
அம் மதிப்பைப் பெறுவதற்கான ஒரே வழியாம்.
இதற்கு மேல் உங்களை ‘டென்ஷனாக்க’ விரும்பில்லை.
வரும் வாரத்தில் சந்திப்போம்.
தர்மம் - தொடரும்
 

 
 
 
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
Like
 
Like
 
Love
 
Haha
 
Wow
 
Sad
 
Angry
 
Comment
Comments
Srini Vasan
 
Srini Vasan தங்கள் கருத்தை விருப்பமாக ஏற்கிறேன்
Unlike · Reply · Message · 1 · 17 March at 22:27
Kambavarithy Ilankai Jeyaraj
Write a reply...
 
 
Yoganand Ramalingam
 
Yoganand Ramalingam கூறியது கூறல், இங்கே குற்றமாகாது. ஏனெனில், இது இலக்கணம் கற்றோர் படிக்கும் நூலல்ல, மொழியறிவே ஓரளவு உள்ளவர்கள் படிக்கும் பகுதி... தேரா மாணவனுக்கு உருப்போடுதல் போல சொன்னால்தான் ஏறும்.. ஆதலால், கூறியது கூறல் இங்கு நியதியே...
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.